Saturday, 1 October 2016

மகரம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

மகரம்:

ஒன்பது, பத்துக்குடைய ராஜயோகாதிபதிகள் புதனும் சுக்கிரனும் மாதம் முழுவதும் ஆட்சி உச்சம் பெற்றும், ஒரேராசியில் இணைந்தும் இருக்கும் நிலை பெறுவதாலும், ராசிக்கு ராசிநாதனின் பார்வையும், குருவின் பார்வையும் இருப்பதாலும் இந்தமாதம் மகரராசிக்கு மேன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரும் மாதமாக இருக்கும். குறிப்பாக பிறந்தஇடத்தை விட்டு தூரஇடத்தில் வசிக்கும் மகரராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

சுக்கிரன் வலுவான நிலையில் உள்ளதால் இந்த மாதம் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். பெண்களுக்கு இது மிகவும் நல்ல மாதம். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுக்தி நடப்பவர்கள் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும்.

1,2,3.7,8,9,10,18,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ந்தேதி இரவு 10 முதல் 27-ந்தேதி காலை 8 மணி முதல் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். புதிய முயற்சிகள் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. யாரையும் இந்த நாட்களில் முதல் முறையாக அறிமுகப்படுத்திக் கொள்ளவும் வேண்டாம்.

No comments :

Post a Comment