Saturday, 1 October 2016

மீனம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

மீனம்:

ஒன்பது, பத்திற்குடைய குருவும், செவ்வாயும் மாதம் முழுவதும் ராசியை பார்ப்பதாலும், குருபகவானே உங்களின் ராசிநாதன் என்பதாலும் இந்த மாதம் மீன ராசிக்காரர்கள் மதிப்புவாய்ந்த செயல்களைச் செய்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நற்பெயர் எடுக்கும் மாதமாக இருக்கும். குறிப்பாக சகோதர, சகோதரிகளுக்கு தக்க சமயத்தில் கைக்கொடுத்து உதவுவீர்கள். இன்னும் சிலருக்கு எட்டுக்குடையவன் வலுப்பெறுவதால் பெண்களால் மறைமுகமான தனலாபங்கள் இருக்கும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

மீனராசிக்கு எவ்வித கெட்டபலன்களும் இன்றி இனிமேல் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஒரு அச்சாரமான மாதமாக இது அமையும். வழக்கு காவல்நிலையம் என அலைந்து கொண்டிருப்பவர்கள் இனி சாதகமான திருப்பங்களை காண்பீர்கள். தீர்ப்பு சாதகமாக அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.

உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல் இருக்கும். நண்பர்களால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதேநேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள்.

1,6,7,8,9,16,17,22,23,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ந்தேதி மதியம் 1 மணி முதல் 5-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. மேற்கண்ட நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் புதிய முயற்சி எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment