Saturday, 1 October 2016

துலாம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

துலாம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் கடந்த சில வாரங்களாகப் பிரச்னைகளையும் தோல்விகளையும் சந்தித்து வந்த சில துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தமாதம் அனைத்து பின்னடைவுகளும் நீங்கி ஆனந்தம் தரும் மாதமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் ஏழரைச்சனியாக தொல்லை கொடுத்து கொண்டிருக்கும் சனிபகவானுடன் சுக்கிரன் இணைவதால் சனியின் பாவத்துவம் நீங்கி ஏழரைச்சனியின் கெடுபலன்களும் இந்த மாதம் துலாம் ராசிக்கு இருக்காது.

பொதுவாக ஒருவருடைய வாழ்க்கையில் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஏழரைச்சனி அடுத்த முப்பது வருடங்களுக்கு அந்த மனிதர் நல்லமுறையில் வாழ்வதற்கான அனுபவத்தையும், யார் நல்லவர் யார் கெட்டவர், எது நல்லது எது கெட்டது என்ற அனுபவத்தையும் தரும் என்பது ஜோதிட ரகசியம். துலாம்ராசியை 2009 முதல் வாட்டி வதைத்த ஏழரைச்சனி இன்னும் சில மாதங்களில் முடிகிறது என்பதால் இனிமேல் நீங்கள் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆவீர்கள். வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கும் சிலருக்கு இந்தமாதம் நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புக்கள் தேடி வரும். நான்குபேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள்.

சுக்கிரன் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் மாதம் இது. மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். வேலை, தொழில், அமைப்புகளில் இப்போது உள்ள தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் கூட உங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு.

2,4,5,7,8,11,16,17,23,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ந்தேதி காலை 11 மணி முதல் 20-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செயல்படுத்த வேண்டாம்.

No comments :

Post a Comment