Saturday, 1 October 2016

சிம்மம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் மாத ஆரம்பத்தில் பரிவர்த்தனை யோகத்துடன் இருக்கிறார். மாத பிற்பகுதியில் ஐப்பசிமாதம் ஆரம்பிப்பதால் நீச நிலையில் இருப்பார். இந்த இரண்டும் வேறுவேறு எதிர்நிலைகள் என்பதால் இந்தமாத முற்பகுதியில் சிம்மராசிக்கு நினைத்தது நிறைவேறும் நல்லபலன்களும், பிற்பகுதியில் எந்த ஒரு காரியத்திற்கும் அதிக முயற்சி தேவைப்படும் நாட்களாகவும் அமையும். எனவே அக்டோபர் மாதம் உங்களுக்கு நல்லவைகளும், அல்லவைகளும் கலந்த மாதமாக இருக்கும்.

வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இந்தமாதம் நல்ல மாதமாக அமையும். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மாத பிற்பகுதியில் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் இந்தமாத பிற்பகுதியில் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். செல்போன் பத்திரம். நடுத்தரவயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம்.

1,2,7,8,10,18,19,22,23,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி காலை 11 மணி முதல் 16-ந்தேதி காலை 11 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் நேர்பார்வையில் குரு சந்திரயோகத்துடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது. ஆனாலும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

No comments :

Post a Comment