Saturday, 1 October 2016

கும்பம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

கும்பம்:

மாதத்தின் ஆரம்பநாளே சந்திராஷ்டம தினமாக அமைவதால் மாத தொடக்கத்தில் கும்பராசிக்கு எதிலும் ஒரு தெளிவான முடிவு எடுக்கமுடியாமல் மனம் அலைபாயும் நாட்களாக அமையும். குறிப்பிட்ட சிலருக்கு எட்டாம் அதிபதி புதன் சுபராகிய குருவுடன் சேர்ந்து சுபத்துவம் பெறுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற வகைகளில் எதிர்பாராத ஒரு பெரியதொகை உண்டு. அதேநேரத்தில் தொகை கிடைத்ததும் அதிலிருந்து விலகி விடுவது நல்லது. கிடைத்ததை மீண்டும் முதலீடு செய்தால் நஷ்டம் வரும் அமைப்பு இருக்கிறது.

செலவுகள் நிறைந்த மாதமாக இது இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன. பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும்.

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. மருத்துவ செலவு இருக்கும். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள். மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும்.

2,5,7,11,12,18,19,20,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ந்தேதி காலை 8 மணி முதல் 29-ந்தேதி காலை 8 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவுடன் இணைவதால் கெடுதல்கள் எதுவும் கும்ப ராசிக்கு இருக்காது.

No comments :

Post a Comment