Saturday, 1 October 2016

விருச்சிகம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

விருச்சிகம்:

“எனக்கு மட்டும் ஏன் இதுபோல நடக்கிறது” என்ற எரிச்சலும் கோபமும்தான் இரண்டு வருடங்களாக விருச்சிகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை இன்னும் தொடர்கிறது. நல்ல பலன்களையே விருச்சிகராசிக்கு எழுத வேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் நான் ஆசைப்பட்டாலும் பரம்பொருள் அதற்கு இடம் தருவதில்லை என்பதுதான் என் ஆதங்கம். பிறந்த ஜாதகவலுவால் கஷ்டப்படாமல் இருக்கும் உங்களில் சிலரைப் பார்த்து ஆறுதல் அடைகிறேன்.

விருச்சிகத்திற்கு நல்லபலன் எழுதவேண்டும் என்ற என் ஆசை நிறைவேறப் போகிறது. ராசியிலிருந்த செவ்வாய் விலகி விட்டதால் சனியின் கொடுமைகள் இனிமேல் உங்களுக்கு மட்டுப்படும். படிப்படியாக கஷ்டங்கள் விலகி புது மனிதன் ஆகப் போகிறீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது. கடந்த சிலமாதங்களாக இரண்டு பெரும் பாவக்கிரகங்கான செவ்வாயும், சனியும் ராசியிலேயே இருந்து வந்ததால் விருச்சிகத்தினர் இரண்டு ஏழரைச்சனிக்குடைய கெடுபலன்களை சந்தித்து விட்டீர்கள். குறிப்பாக இளம்வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. தற்போது செவ்வாய் ராசியில் இருந்து விலகி விட்டதால் துன்பங்கள் அனுபவித்த அனைவரும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள்.

சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் 2017 முதல் மிகச் சிறந்த முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள் என்பது உறுதி. இந்தமாதம் தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும்.

1,2,3,9,10,15,16,17,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ந்தேதி காலை 11 மணி முதல் 22-ந்தேதி மதியம் 3 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எவருடனும் சண்டை, சச்சரவு போன்றவைகளில் ஈடுபட வேண்டாம். இந்த நாட்களில் நிதானமாக இருப்பது நல்லது.

No comments :

Post a Comment