Monday, 17 October 2016

2016 ஐப்பசி மாத பலன்கள்

மேஷம்:

ஐப்பசி மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் ஒன்பதில் இருப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும், தாராளமாக இருக்கும். அதேநேரத்தில் நீச சூரியன் ராசியைப் பார்ப்பதால் பிள்ளைகள் விஷயங்களில் அலைச்சல்களும் காரியத்தடைகளும் இருக்கும். இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும்.

உங்களில் சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.

சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசியைப் பார்க்கும் நிலையில் இருப்பதும், ராசியின் யோகாதிபதிகளான சனியும், புதனும் நல்லநிலையில் இருப்பதும், உங்களின் பணவரவுகளையும், தனலாபம் மற்றும் பொருளாதார மேன்மையை அதிகப்படுத்தும் ஒரு அமைப்பு என்பதால் ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. குறிப்பிட்ட சிலருக்கு இந்தமாதம் பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்களில் நன்மைகளும் பணவரவும் இருக்கும்.

குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.

நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மிதுனம்:

மிதுனநாதன் புதன் ஐப்பசிமாத பிற்பகுதியில் நீசசூரியனுடன் இருந்தாலும், மாதத்தின் ஆரம்பநாட்கள் உச்சநிலையில் இருப்பதால் உங்களுக்கு இந்த மாதம் நல்லமாதமே. எதிர்கால நன்மைகளுக்கான சில மாற்றங்களும் இந்த மாதம் உண்டு. ராசிநாதன் பலம் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சமில்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் யாத்திரை மற்றும் பிரயாண அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். எதிர்பார்க்காத பணவரவும் இந்த மாதம் உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே.

காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது.

கடகம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், சகாயஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் இந்தமாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் மாதமாகவும் இது இருக்கும். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.

மூன்றில் இருக்கும் குருவால் எத்தகைய பிரச்சனைகள் என்றாலும் அதனை சுலபமாக சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் கடக ராசிக்கு பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் லாபம் உண்டு. குறிப்பாக தையல் கலைஞர்கள் சந்தோஷப் படும் அளவிற்கு வருமானம் உண்டு. மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.

வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பணவரவு கிடைக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணவிவகாரங்கள் இந்த மாதம் முடிவதோடு பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் மாதம் முழுவதும் நீசம் பெறுவது சிறப்பான நிலை அல்ல என்றாலும் ராசிக்கு இரண்டில் குரு இருப்பதால் எவ்வித எதிர்மறைபலன்கள் உங்களுக்கு நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. ஆனால் ராசியில் இருக்கும் ராகு உங்களுக்கு இனம் தெரியாத கலக்கத்தையும் தருவார் என்பதால் எதிலும் அவசரப்படாமல் இருப்பதும் நல்லது.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது.

ராசியை சனி பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கன்னி:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதபகவான் உச்சநிலையில் இருப்பதால் ஐப்பசி மாதம் உங்களை பொறுத்தவரையில் விசேஷமான மாதம்தான். மேலும் ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை இப்போது திருப்பிச் செலுத்தும் மாதமாகவும் இது இருக்கும். தனாதிபதி சுக்கிரன் ஒன்பதாமிடத்தைப் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவுகளும், வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல வருமானங்களும் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய அமைப்பும் இந்த மாதம் உண்டு.

இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டு. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.

தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாத முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

துலாம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரனும், யோகாதிபதி சனியும் இணைந்திருப்பதால் சனிபகவான் சுபத்துவம் பெறுகிறார். இந்த அமைப்பு துலாம்ராசிக்கு ஏழரைச் சனியையும், சனிபகவான் தரும் பொருளாதார நெருக்கடிகளையும் சமாளிக்கக்கூடிய அமைப்பு என்பதால் ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கு எந்தவிதமான ஏமாற்றங்களையோ, நெருக்கடிகளையோ தராத மாதமாகவே இருக்கும் என்பது உறுதி.

செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். நடுநிலை தவறாத துலாம் ராசியில் தராசை சின்னமாகக் கொண்டு பிறந்தவர் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு.

நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். நேர்மையான எண்ணங்களைக் கொண்டவர்களான உங்களுக்கு இந்தமாதம் விரயங்கள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. எனவே செலவு செய்வதற்கேற்ப பணவரவும், தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் இந்த மாதம் உண்டு. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.

விருச்சிகம்:

விருச்சிகராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்தாலும் மாத பிற்பகுதியில் உச்சநிலை பெறும் செவ்வாயும், பதினொன்றாமிடத்தில் இணைந்திருக்கும் குருவும் புதனும் வரும் சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாப்பார்கள் என்பதால் எதிலும் முட்டுக்கட்டைகளை சந்தித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்தமாதம் முதல் நல்வழி திறக்கும். மேலும் இனிமேல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனியில் இருந்து விடுதலையாகும் ஒரு அமைப்பாக ராசிநாதன் செவ்வாயின் உச்சநிலை அமையும் என்பதால் இந்தமாதம் உங்களுக்கு மேன்மையைத் தரும் என்பது உறுதி. முக்கியமாக கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மனநிம்மதி இருக்கும். என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். காலை அலுவலகத்தில் நுழைந்தவுடன் முதலில் ஜாதகம் பார்க்க வந்திருப்பவர் நிச்சயம் விருச்சிகராசி கேட்டை நட்சத்திரமாக இருப்பார் என்பதைக் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடலாம்.

அதிலும் இரண்டு விருச்சிகம் வீட்டில் இருந்தாலோ, வேறு ஒருவர் மேஷராசியாக இருந்தாலோ கஷ்டங்கள் அதிகமாகத்தான் இருக்கும். விருச்சிக ராசிக் குழந்தைகள் இருக்கும் வீட்டிலும் தகப்பனுக்கு பொருளாதாரக் கஷ்டங்கள் இருந்து கொண்டிருக்கிறது. எல்லாம் இன்னும் சிலகாலம்தான். சனி உங்களை விட்டு விலகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்தவருடம் ஆனந்தமாய் இருப்பீர்கள். கவலை வேண்டாம். பரம்பொருள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார்.

தனுசு:

மாதம் முழுவதும் ராசிநாதன் குருபகவான் பத்தாம் இடத்தில் இருந்து, செவ்வாய் உச்சவலுவுடன் இருப்பதால் தனுசு ராசிகாரர்களுக்கு ஐப்பசி மாதம் பதவி உயர்வு, தொழில்மேன்மை, பொருளாதார நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்லபலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும்.

மாத முற்பகுதியில் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு இந்தமாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.

நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக அரசுத்துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும்.

மகரம்:

ஐப்பசி மாதம் முழுவதும் மகர ராசியின் யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் வலுவாக இருப்பது மேன்மைகளை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷப்படக்கூடிய நிகழ்ச்சிகளும், தொழிலில் பணவரவு மற்றும் பொருளாதார மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். எட்டுக்குடைய சூரியன் நீசமாவதால் கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் மாதமாகவும் இது இருக்கும்.

சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கும் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நற்பெயர் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.

கும்பம்:

ஐப்பசி மாதம் முழுவதும் எட்டில் மறையும் குருபகவான் உங்களுக்கு தொழில்ரீதியில் எரிச்சலையும், எதிர்மறை பலன்களையும், செலவுகளையும் தருவார் என்பதால் இந்த மாதம் யோசித்து செலவு செய்வது நல்லது. அதேநேரம் ராசிநாதன் வலுவாக இருப்பதால் பெரிய அளவில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு வரப்போவது இல்லை. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு.

பத்தாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கத் துவங்கும். ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் சீட்டுப் பிடிப்பவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்துபவர்கள், பணம் அதிகம் புரளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் போன்றவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் நல்லபடியாக நடக்கும்.

வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

மீனம்:

ஐப்பசிமாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதாலும், ஆறுக்குடைய சூரியன் நீசம் பெற்று வலிமை இழப்பதாலும், ராசிநாதன் குருவின் பார்வையும் ராசிக்கு இருப்பதாலும் இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும். சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். குருபகவான் ராசியை பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இனி வரப்போவது இல்லை.

No comments :

Post a Comment