Saturday, 1 October 2016

மிதுனம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

மிதுனம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் வக்ரநிலையில் இருந்தாலும் அதிநட்பு வீட்டில் இருக்கிறார். அடுத்து தனது சொந்தவீட்டில் அவர் உச்சநிலையில் இருக்கப் போவதும் மாத பிற்பகுதியில் தன்னுடைய நண்பர் சுக்கிரனுடன் இணைந்திருப்பதும் அக்டோபர் மாதம் முழுவதும் மிதுனராசிக்கு நல்ல அமைப்புகள் என்பதால் இதுவரை கோபத்தை மட்டுமே வெளியில் காட்டிக்கொண்டிருந்த மிதுனராசிக்காரர்கள் இனிமேல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மாதமாக இது இருக்கும்.

ராசிநாதன் வக்ரம் பெற்றுள்ளதால் மனதில் ஒரு விதமான பயஉணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். நேர்மையானவற்றை சிந்தித்து நல்லவைகளையே செய்து வந்தால் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் செலவு இருக்கும். வயதானவர்கள் சிலர் தங்கள் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்வீர்கள்.

ராசிநாதன் வக்ரம் அடைவது பலவீனம் என்பதால் நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில் தேவையற்ற வீண் செலவுகளும், விரயங்களும் இந்த மாதம் இருக்கும். தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

1,3,5,17,18,22,23,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி அதிகாலை 1 மணி முதல் 12-ந்தேதி காலை 8 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவினுடைய பார்வையில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment