Saturday, 1 October 2016

ரிஷபம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்

ரிஷபம்:

மாதம் முழுவதும் ரிஷபநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற நிலையிலும் அடுத்து ராசியைப் பார்க்கும் நிலையிலும் அமைவதால் இந்தமாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான். இன்னும் ஒரு சிறப்புப்பலனாக அக்டோபர் மாதத்தில் உங்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் உங்களுக்கு உதவக்கூடிய தகுதியுடனும், மனதுடனும் இருப்பார்கள் என்பதால் வெளியில் இருந்தும் தக்கநேரத்தில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும் மாதமாகவும் இது இருக்கும்.

மாதம் முழுவதும் சுக்கிரன் வலுவாக ஆட்சிநிலையில் இருப்பதால் இந்த மாதம் ரிஷபத்தினர் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். மேலும் உங்கள் நண்பர்களான சனியும் புதனும் கூட பலமாக இருப்பதால் உங்களுக்கு நல்ல மாதம் இது. சூரியனின் வலுவால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் நல்லபடியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீர தொடங்கும். வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும்.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது பொன்னான நேரம் என்பதால் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதியகிளைகள் ஆரம்பிக்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் தனது ராசியைத் தானே பார்ப்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. இந்தமாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். இனிமேல் ரிஷப ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப்போவது இல்லை.

4,5,6,12,13,19,20,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ந்தேதி மதியம் 2 மணி முதல் 10-ந்தேதி அதிகாலை 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள், தொழில் முதலீடுகள், தொழில் விரிவாக்கங்கள் போன்றவைகளை இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் இருப்பதும் நல்லது.

No comments :

Post a Comment