Saturday, 1 October 2016

2016 அக்டோபர் மாத நட்சத்திரப் பலன்கள்

அசுவினி

குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண்வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது. குழந்தைகளால் நல்ல சம்பவங்கள் இருக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பரணி

நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் இந்தமாதம் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

கிருத்திகை

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைக்கும். இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

ரோஹிணி

இந்தமாதம் செலவுகளும், சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகளும் உள்ள மாதமாக இருக்கும். மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

மிருகசீரிடம்

சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசம் வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். திருமணம், குழந்தைபிறப்பு, வீடுவாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

திருவாதிரை

இந்தமாதம் உங்களுக்கு மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படும் நிலைமை இருக்கும். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும் அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

புனர்பூசம்

இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக அமையும். பணம் சம்பாதிப்பதில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல மாதம். எதையும் சமாளிக்கும் ஆற்றல் உள்ள உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். வேலையில் பாராட்டப் படுவீர்கள். பொருத்தமான வேலை தேடிக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் தகுதிகேற்ற வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

பூசம்

மாத பிற்பகுதியில் பண வரவும், சந்தோஷமும் இருக்கும். அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.

ஆயில்யம்

இந்த மாதம் எவ்விதப் பின்னடைவுகளும் இல்லாமல் நன்மைகளைத் தரும் மேன்மையான மாதமாகவே இருக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

மகம்

தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறுசிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சமீபத்தில் தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

பூரம்

மாத முற்பகுதியில் உங்களுக்கு தனலாபங்களும், பணவரவுகளும் இருக்கும். அதே நேரத்தில் 15-ம் தேதிக்குப் பிறகு வருமானத்தைச் சேமிக்க முடியாமல் இந்த மாதத்திலேயே செலவும் செய்ய வேண்டி இருக்கும். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைப்பேறு தள்ளிப் போன தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பாக்கியம் உண்டு. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும். பொதுவாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

உத்திரம்

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும் என்றாலும் பணவரவு தடைபடாது. பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த நேரம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிக்கும். புதிய வாகனம் அமையும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். அதேநேரத்தில் செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.

அஸ்தம்

நீண்ட நாள் கனவு ஒன்று நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்த அனைத்துப் பிரச்னைகளும் இந்த மாதம் முதல் தீரப்போகின்றன. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும்.

சித்திரை

இந்தமாதம் பெண்களால் சிரமங்களும், செலவுகளும் உள்ள மாதமாக இருக்கும். அதேநேரத்தில் 15-ம் தேதிக்கு பிறகு செலவுகளை சமாளிக்க வருமானம் வரும் மாதமாகவும் இருக்கும். எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும்.

சுவாதி

இந்த மாதம் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் எதிர்ப்புகளும் உங்களைச் சுற்றி எதிரிகளும் உள்ள மாதமாக இருக்கும். எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு நல்லபலன்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் அதிகமாக நன்மைகள் நடைபெறும். அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தந்தையின் தொழிலைச் செய்பவர்கள், மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள்.

விசாகம்

இந்த மாதம் மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வேலையில் நிம்மதியற்ற நிலைமையையும், தொந்தரவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கி அலுவலகங்களில் நிம்மதியான சூழல் அமையப் பெறுவீர்கள். தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அனுஷம்

வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் என்பதால் நஷ்டங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இது லாபம் தரும் மாதம்தான். அதே நேரத்தில் சனிபகவான் ராசியில் இருப்பதால் உங்களுக்கு தொழில் நன்றாக நடந்தாலும் பண வரவை தடுப்பார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.

கேட்டை

கேட்டைக்கு இனிமேல் எதிலும் கெடுதல்கள் இல்லை. இந்தமாதம் முதல் எல்லா விஷயத்திலும் நன்மைதான். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பணவரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். இதுவரை விழிப்புடனும், மனக்கட்டுப்பாடுடனும் இருந்ததன் மூலம் கஷ்டமான ஏழரைச்சனி காலத்தை சமாளித்து வருகிறீர்கள். கஷ்டங்கள் இன்னும் சிலமாதங்கள்தான். அதன்பிறகு திகட்டத்திகட்ட சந்தோஷம்தான். மாதத்தின் பின் நாட்களில் நல்ல பணவரவும், குடும்பத்தில் சந்தோஷமும் இருக்கும்.

மூலம்

இதுவரை மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். ரியல் எஸ்டேட், வீடு கட்டிக் கொடுக்கும் புரமோட்டர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், செம்மண் பூமி, ஆறு, மலைப்பாங்கான இடங்களில் தொழில் வைத்திருப்பவர்கள் மேன்மைகளை அடைவீர்கள்.

பூராடம்

அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதியகிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல் கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்லபலன்கள் உண்டு. இதுவரை அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். உங்களின் விடாமுயற்சி மற்றும் தைரியத்தால் அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள்.

உத்திராடம்

இந்தமாதம் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். குலதெய்வக் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். மாதம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இப்போது நனவாகும். உங்கள் மனதுபோலவே எல்லாம் நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும்.

திருவோணம்

திருவோணத்திற்கு அதிர்ஷ்டம் தரும் மாதம் இது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. இம்முறை நீங்கள் தரிசிக்க விரும்பும் புனிதத்தலங்கள் அனைத்திற்கும் செல்லும் பாக்கியம் கிடைக்கும். நீண்டகால லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்ள முடியும். பாட்டன் வழியில் பூர்வீக சொத்து ஒன்று கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

அவிட்டம்

மாத ஆரம்பத்தில் எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடை நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

சதயம்

இந்த மாதம் எந்த ஒரு விஷயத்திலும் தாமங்களையும், தடைகளையும் உருவாக்கும் என்பதால் அக்டோபர் மாதம் நீங்கள் எதையும் யோசித்து செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

பூரட்டாதி

இந்தக் மாதம் உங்களுடைய வேலை தொழில் வியாபார அமைப்புக்கள் சுமாராக நடைபெறும். குறிப்பாக கலைத்துறையிலும் பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம் சொகுசு வாகனம் அலங்காரம் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தமாதம் நன்மைகளைத் தரும். கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும்.

உத்திராட்டாதி

வீட்டிலோ, தொழில் நிலையங்களிலோ பின்னடைவுகள் எதுவும் இல்லாமல் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் மாதமாக இது இருக்கும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்லவருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மத்திய மாநில அரசுகளின் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

ரேவதி

நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

No comments :

Post a Comment