Monday, 17 October 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (17.10.16 முதல் 23.10.16 வரை)

மேஷம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதோடு, ராசியில் சந்திரன் இருப்பதும் மேஷத்திற்கு சாதகமற்ற பலன்களை தடுத்து நிறுத்தும் ஒரு அமைப்பு என்பதால் இந்தவாரம் மேஷராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் இல்லாத வாரமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடங்களாக சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் மேஷராசிக்காரர்கள் முடங்கிப் போயிருக்கிறீர்கள். குறிப்பாக இளையபருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

அஷ்டமச்சனியின் ஆதிக்கம் இளம்வயதில் வருவது மேம்போக்காகப் பார்க்கும் போது கெடுபலன்களைத் தருவதாகத் தெரிந்தாலும், சனிபகவான் இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதையும் நல்லவர் யார்? நம்மை விரும்பாதவர் யார்? நமக்கு வேண்டியவர் யார் என்பதையும் தெளிவாக்குவார். மேலும் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் சொல்லிக்கொடுத்து பணத்தின் அருமையை இப்போது தெரிய வைப்பார். தற்போது சனியினால் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் சனி முடிந்த பிறகு மேற்கண்ட அனுபவங்களினால் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

மேஷராசிக்காரர்களுக்கு அடுத்த வருடத்திற்கு பிறகு கவலைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி. மேலும் எட்டாமிடத்தில் நிலை பெற்றிருக்கும் சனிபகவானால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்து வேற்றுமைகளையும் முணுமுணுப்புகளையும் இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். நல்லவர் போல் நடித்து குடும்பத்தில் நாரதர் வேலை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள்.

ரிஷபம்:

கடந்த சிலமாதங்களாக நல்ல கோட்சார கிரகநிலைகள் அமையாத ரிஷப ராசிக்காரர்களுக்கு தற்போது ஐந்தில் குரு, ஏழில் யோகாதிபதி சனி, ராசிநாதன் சுக்கிரனும் புதனும் வலுவான நிலை என சாதகமான கிரகநிலைகள் நடந்து கொண்டிருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரமாகவே அமையும் என்பது உறுதி. குறிப்பாக சந்திரனின் உச்சவலுவால் சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் நற்பெயர் எடுக்க கூடிய அமைப்புகள் இந்த வாரம் உண்டு.

வார இறுதியில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் நல்ல விதமாக முடியும். பெண்களால் சாதகமான பலன்கள் நடக்கும். குறிப்பாக சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் இப்போது தீரும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாடு போன்ற தூரப்பிரயாணங்கள் அமையும். வெளிநாட்டு கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இடம் மாறுதல் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டங்களும் உண்டு.குறிப்பிட்ட சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கு பயணம் செய்வீர்கள். அது ஆன்மிகப்பயணமாக இருக்கலாம்.

செலவுகளில் சிக்கனமாக இருங்கள். அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் அனைத்தையும் செலவு செய்துவிடாமல் ஓரளவாவது சேமிப்பது நல்லது. இதுவரை உங்களை நோகடித்த ஒரு விஷயம் இனிமேல் கைமீறிப் போய்விடுமோ என்று கவலைப்படுவீர்கள். ராசிநாதனின் தோஷம் நீங்குவதால் இனிமேல் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றிமேல் வெற்றி வரும் என்பது உறுதி. எனவே தேவையற்ற மனக்கலக்கத்தை தள்ளி வைத்து செயலாற்றினால் இனி என்றும் உங்களுக்கு சந்தோசம்தான்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் நட்புவலுவில் இருப்பதோடு, யோகாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதால் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழில் அமைப்புகளில் நல்ல விதமான பலன்கள் நடக்கும் வாரமாக இருக்கும். இதுவரை சிறு தொகையை கூட புரட்ட முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் மிதுனத்திற்கு பணப்பற்றாக்குறை நீங்கி லாபங்கள் வருகின்ற வாரம் இது. தனாதிபதி சந்திரன் வார நடுப்பகுதியில் உச்சமடைவதால் இந்த வாரம் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் இருப்பீர்கள்.

தொழில் அமைப்புகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் இந்த வாரம் உங்களுக்கு சுமாரான பலன்கள் தரும் வாரமாகத்தான் இருக்கும். அதே நேரத்தில் இப்போது நீண்டகால பகை ஒன்று தீர்ந்து சமரசம் ஆவீர்கள். இளையபருவத்தினர் சிலர் இதுவரை நடைபெற்று வரும் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கை இன்றி இருப்பீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல ஏதேனும் நல்ல நிகழ்ச்சிகள் இந்தவாரம் உண்டு. சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் இந்தவாரம் மாறும்.

வார ஆரம்பத்தில் அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன் இருக்கும். வீட்டில் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும்படியான நிகழ்ச்சிகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடக்கும். அவர்களால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் ஏதேனும் உண்டு. சிலருக்கு புத்திரர்கள் மூலம் பணவரவு வந்து அதன் மூலம் ஏதேனும் வீடோ மனையோ வாங்கும் அமைப்பு உள்ளது.

கடகம்:

கடகநாதன் சந்திரன் வார ஆரம்பத்திலேயே பவுர்ணமி யோக அமைப்பிலும் அதன் பின்னர் உச்சநிலையிலும் இருந்து வலுப்பெறுவதால் இந்த வாரம் கடகத்திற்கு அனைத்து விதமான நன்மைகளையும் அளிக்கும் வாரமாக இருக்கும். இதுவரை ஆரோக்கியம் இல்லாமல் இருந்த கடகராசிக்காரர்கள் அந்த நிலை நீங்கி உடல் நலம் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்த கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கோ கடன்கள் இந்த வாரத்தில் அடைபடும்.

குருவும், செவ்வாயும் வலிமை பெற்ற நிலையில் இருப்பதால் கடகத்திற்கு சோதனைகள் எதுவும் இல்லை. இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள் சாதகமாக மாறும் என கிரக நிலைகள் காட்டுகின்றன. இதுவரை பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள் தற்பொழுது அது நீங்குவதற்கான ஆரம்பங்கள் நடப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். மூன்றாமிடம் வலுப்பெறுவதால் உதவிகள் உங்களை தேடிவரும் வாரமாக இது இருக்கும். அதேபோல நீங்களும் முடிந்த அளவு அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள்.

எழுத்துத்துறையில் இருக்கும் கடகராசிக்காரர்கள் சிறப்பான நற்பலன்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். சிலருக்கு பணவரவுகளில் இருந்த தேக்கநிலையும் குழப்பங்களும் இப்போது மாறும். தாராள பணவரவு இந்தவாரம் உண்டு. அதேபோல இதுவரை தந்தையிடமிருந்து ஆதரவு இல்லாத நிலைமையும் இனிமேல் சீர்படும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் நீச வலுப்பெற்று பலவீனமாகும் வாரம் இது. பொதுவாக சிம்மராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் எந்தவிதமான நல்ல பலன்களையும் தராது என்பது ஜோதிட விதி. ஆயினும் சூரியன் நீசபங்கமடைந்தால் இந்த நிலை மாறி சாதகமான பலன்கள் சிம்மத்திற்கு நடக்கும். ஆனால் இம்முறை ராசிநாதன் நீசபங்கமாகும் வாய்ப்பு இல்லை என்பதால் சிம்மத்தினர் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். சகோதர உறவு நன்றாக இருக்கும். இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள்.

வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. இதுவரை குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே நம்மைக் காப்பாற்றும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் நல்லநிலைமையில் இருப்பதோடு விரையாதிபதி சூரியன் நீசம் பெற்றிருப்பதால் கன்னிக்கு வீண் செலவுகள் இல்லாத வாரம் இது. ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாமிடங்களை குருபகவான் பார்ப்பதால் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கின்ற மனோதைரியமும், சந்தர்ப்பங்களும் இந்தவாரம் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகப் பணியாக நீண்ட தூர பிரயாணங்கள் இப்போது உண்டு.

இதுவரை உடல்நலம், மனநலம் கெட்டிருந்தவர்கள் உடனடியாக அனைத்தும் சீர்பெற்று நல்லநிலைக்கு வருவீர்கள். கடந்த சில வாரங்களாக ராசிநாதன் வக்கிரமாகி வலுவிழந்ததால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரும். முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல மாறுதல்கள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் உண்டு. பெண்கள் சிலருக்கு இந்தவாரம் நகை சேரும் யோகம் இருக்கிறது.

மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் கட்டிடம் கட்டும் தொழில் சம்மந்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு இந்தவாரம் பணவரவு இருக்கும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மைகள் இருக்கும். 16-ந்தேதி காலை 11 மணி முதல் 18-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகளோ, வீடு மாற்றம் தொழில் மாற்றம் போன்றவகளையோ செய்ய வேண்டாம். எவரிடமும் வாக்குவாதமும் செய்யாதீர்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களின் துயரங்கள் தீருகின்ற வாரம் இது. இதுவரை குடும்பத்தில் மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை போன்றவைகள் ஏற்பட்டிருந்தவர்கள் இந்த வாரம் சங்கடங்களை மறந்து வேற்றுமைகளைத் துறந்து ஒன்று கூடுவதற்கு வழிபிறக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நண்பர்களால் ஆதாயமும், பங்குதாரர்களின் மூலம் இணக்கமான நிகழ்வுகளும் உண்டு. குறிப்பாக இந்தவாரம் கெடுதல்கள் இல்லாத நிம்மதிகளைத் தருகின்ற நல்ல வாரமாக இருக்கும்.

பணிபுரியும் இடங்களில் உண்டான சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும். உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். நீண்டநாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்த விஷயங்கள் இப்பொழுது வெற்றியடையும். வராது என்று கைவிட்ட பணம் வரும். பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு.

என்னதான் நல்லபலன்கள் நடந்தாலும் சனியின் ஆதிக்கத்தினால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போன்ற நிலை இருக்கும். ஏழரைச்சனி முடியும் நேரத்தில் இருப்பதால் கவலைப்படும் அளவிற்கு எந்த சோதனையும் உங்களுக்கு வந்து விடப்போவது இல்லை. 18-ந்தேதி காலை 11 மணி முதல் 20-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செயல்படுத்த வேண்டாம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களில் விசாகம், அனுசம் ஆகிய நட்சத்திரக்காரர்களின் பிரச்சினைகள் சிறிது சிறிதாக குறைந்து வரும் நிலையில் குறிப்பிட்ட சில கேட்டை நட்சத்திரக்காரர்கள் மட்டும் கடுமையான குழப்ப நிலைகளில் இருந்து வருகிறீர்கள். இன்னும் சில அனுஷத்தினருக்கும் பிரச்சினைகள் தீருவது போன்ற தோற்றம் இருந்தாலும் முழுவதுமாக எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. இது போன்ற நிலைகள் இந்த வாரம் முதல் விலக ஆரம்பிக்கும் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு நல்ல வாரம் தான்.

வாரஇறுதியில் தடைப்பட்டிருந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் செயல்படத் துவங்கும். அலுவலகங்களில் நிம்மதியான சூழல் இருக்கும் என்றாலும் எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்று நினைத்து தேவையில்லாமல் பயந்து கொண்டிருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றைக்குமே மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து கொண்டீர்களானால் பயம் தேவையே இல்லை. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். அவசரத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள்.

மனைவி வழியில் அனுகூலம் இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். என்னதான் அடுத்தவர் உதவினாலும் நம்முடைய கை உழைத்தால்தான் நமக்கு நிம்மதி என்று நினைக்கக்கூடிய உங்களுக்கு இந்த வாரம் திருப்பம் தரும் வாரம்தான். 20-ந்தேதி காலை 11 மணி முதல் 22-ந்தேதி மதியம் 3 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எவருடனும் சண்டை, சச்சரவு போன்றவைகளில் ஈடுபட வேண்டாம். இந்த நாட்களில் நிதானமாக இருப்பது நல்லது.

தனுசு:

தனுசுராசிக்கு கோட்சார கிரகநிலைகள் நல்லபடியாக அமைந்திருந்தாலும் ஏழரைச்சனி ஆரம்பித்திருப்பதால் நீங்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். தனுசுராசி இளைஞர்கள் வேலை விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய வாரமும் இது. இருக்கும் வேலையில் இருந்து மாறுவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். முன் யோசனை இன்றி எதுவும் செய்தால், அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது.

கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான் வரும். தந்தையுடன் பிறந்தவர்களுடன் இந்த வாரம் ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும் நிதானம் தேவை. தந்தைவழியில் இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலை இந்த வாரத்திலிருந்து மாறும். தடைபட்ட வருமானங்கள் மீண்டும் வர ஆரம்பிக்கும். முயற்சி எடுத்தும் பயன் இல்லாமல் போன சில விஷயங்கள் இந்த வாரம் அதிர்ஷ்டத்தினால் பலன் அளிக்கும்.

பெண்களை இந்த வாரம் நம்பலாம். சென்ற சிலநாட்களாக இருந்து வந்த பிரச்னைகளை தீர்த்து வைக்கும் அமைப்பு உள்ளதால் இந்த வாரம் நல்ல வாரமே. 22-ந்தேதி மதியம் 3 மணி முதல் 24-ந்தேதி இரவு 10 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகள், தொழில் விரிவாக்கங்கள், புதியவரை சந்தித்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம். இந்த நாட்களில் நீங்கள் செய்வது எதிர்கால நன்மைக்கு நல்லவைகளாக இருக்காது.

மகரம்:

மகரநாதன் சனிபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில், குருவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கும் நல்லவாரம் இது. இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் கிடைக்காமல் நிரந்தர வருமானம் இல்லாத மகரத்தினருக்கு இந்த வாரம், மாதமானால் நிரந்தர வருமானம் தரக்கூடிய அமைப்புகள் உருவாகும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை நடக்காத சில விஷயங்கள் நல்லபடியாக ஆரம்பித்து மனம்போல முடியும் வாரமாகவும் இது இருக்கும். இப்போது உங்களுக்குப் பிடிக்காதவர்களை ஜெயிக்கும் வெற்றி வீரனாகவும் இருப்பீர்கள்.

வேலை விஷயமாகவோ சிறுகருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள். இதுவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். தம்பதிகளுக்கு நடுவில் சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு இருவரும் சேர்ந்து துரத்துவீர்கள். எதிர்ப்புகள் பலவீனமாகி கடன் தொல்லைகளும் கட்டுக்குள் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.

வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு.

கும்பம்:

கும்பத்திற்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. அதே நேரம் சளைக்காத உழைப்பாளிகளான உங்களுக்கு நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் உங்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும் என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. அஷ்டமகுருவின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி கிடைக்கத் துவங்கும் வாரம் இது.

பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். எதிர் பார்க்காத பணவரவும் இந்தவாரம் உண்டு.

இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும்.

மீனம்:

மீனராசிக்கு எதிர்கால வாழ்க்கை அமைப்புகள் உருவாகும் வாரம் இது. சிலர் தாங்கள் எதிர்காலத்தில் சாதிக்க போகும் துறையினை தேர்ந்தெடுப்பதும், இன்னும் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நபர்களை சந்திப்பதும் இந்த வாரம் நடக்கும். செவ்வாயின் வலுவினால் சிகப்புநிறம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், வீடுகட்டித் தருபவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், மணல், ஜல்லி, வியாபாரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருமானம் இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத வாரம்தான்.

பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் மிகவும் யோகம் தரக்கூடிய வாரமாக இருக்கும் என்பதால் உங்களின் யோக வாரம் இது. உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் கிடைக்கும். பணத்திற்காக பொய் பேச நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலைசெய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும். முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு படிப்படியாக நல்ல திருப்பங்கள் இருக்கும். கவலைகள் தீரும் வாரம் இது. வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன.

No comments :

Post a Comment