Monday, 10 October 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (10.10.16 முதல் 16.10.16 வரை)

மேஷம்:

மேஷநாயகன் செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, சந்திரன் லாப ஸ்தானமான பதினொன்றில் இருக்கும் நல்லவாரம் இது என்பதால் இந்தவாரம் அனைத்து மேஷத்தினருக்கும் நம்பிக்கையையும், நல்லவைகளையும் மட்டுமே கொடுக்கும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தொழில் மற்றும் வாழ்க்கை அமைப்புகளில் இடமாற்றங்கள் மற்றும் இருப்பிட மாற்றங்கள் உள்ள வாரம் இது.

தொழில் அமைப்பில் இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நன்மைகள் உண்டு. ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்து ஐந்திற்குடையவன் நீசமடைவதால் பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். யாராவது ஒருவர் கோபம் தணிந்து விட்டுக்கொடுத்து போவீர்கள்.

இந்தவாரம் பிரயாணங்களும் அலைச்சல்களும் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு கடல் தாண்டிப் போகும் வெளிநாட்டுப் பயணங்களும் இருக்கலாம். டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் நன்மைகளைத் தரும். அஷ்டமச்சனியால் பணவரவிற்கு தடையிருக்கும் என்பதால் வருமானக்குறைவு இருக்கலாம். எனவே தொழில் இடங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் வார ஆரம்பத்தில் ஆட்சி பெற்றிருப்பதும், வாரஇறுதியில் ஏழாமிடத்திற்கு மாறி யோகாதிபதிகளுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதும் நன்மைகளை செய்யும் அமைப்பு என்பதால், ரிஷபத்திற்கு இந்த வாரம் நல்ல வாரம்தான். ஐந்தில் குரு மற்றும் பத்து, பதினொன்றில் சந்திரன் என்ற கிரக நிலைகள் உங்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புகளை இப்போது நிறைவேற்றி வைக்கும் என்பதால் குறை சொல்ல முடியாத வாரம் இது.

பணவரவுக்கு இந்தவாரம் தடை ஏதும் இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும். தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் திருப்திகரமான நல்லபலன்களும் எதிர்பார்க்காத வருமானங்களும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு நல்ல செய்தி உண்டு. வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வயதானவர்கள் தங்கள் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்வீர்கள்.

சமுதாயத்தில் அனைத்து தரப்பு ரிஷபராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் வாரமாக இருக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். எனவே நீங்கள் நீண்டகாலமாக நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் உச்ச வலுப்பெற்றிருப்பதும் அங்கே குருவும், சூரியனும் இணைந்து அந்தபாவத்தை வலுப்படுத்துவதும் மிதுனத்திற்கு நல்ல அமைப்புகள் என்பதால். இந்த வாரம் வீடு வாகனம் தாயார் தன்சுகம் போன்ற வகைகளில் உங்களுக்கு அனுசரணையான விஷயங்கள் இருக்கும். குறிப்பிட்ட சிலர் உல்லாசப் பயணங்கள் மற்றும் ஜாலியான அனுபவங்களுக்கு வீண்செலவு செய்வீர்கள்.

ஆறுக்குடைய செவ்வாய் ஏழில் அமர்ந்து, ஆறாம்வீட்டில் சனி அமர்ந்து பனிரெண்டை பார்ப்பதால் இந்த வாரத்தில் வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு நன்மை தரும். செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் வம்பு, வழக்கு போன்றவைகள் வரும் என்பதால் எவரிடமும் வீண் சண்டைக்கு போக வேண்டாம். பொறுமையாக இருக்க வேண்டும். யாரையாவது கோபத்தில் நீங்கள் ஏதாவது சொல்லி அது பலித்து விடும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

அரசு தனியார் ஊழியருக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும் 10-ந்தேதி அதிகாலை 1 மணி முதல் 12-ந்தேதி காலை 8 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவினுடைய பார்வையில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

கடகம்:

வாரஆரம்பமே சந்திராஷ்டம நாளாக ஆரம்பிப்பதும், தனாதிபதி சூரியன் மற்றும் குரு மூன்றாமிடத்தில் இருப்பதுமாக இந்தவாரம் ஆரம்பிக்கிறது. ராசிக்கு எதிரிகள் சுக்கிரனும், புதனும் ஆட்சி உச்சநிலையில் இருப்பதால் உங்கள் எதிரிகளின் சொல் எடுபடும் வாரம் இது. சிலருக்கு எதிலும் எரிச்சலுட்டும் விஷயங்கள் நடக்கும். கடகராசிக்காரர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது.

கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. தன் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் இந்த வாரம் முன்னேற்றம் அடைவீர்கள்.

இந்தவாரம் எதிலும் சிறிது தடைகளும் தாமதங்களுமாக இருக்கும். அதே நேரத்தில் அந்தஸ்து கௌரவத்திற்கு எந்த வித குறைவும் வராது. பணவரவும் திருப்தியாக இருக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறையும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு 12-ந்தேதி காலை 8 மணி முதல் 14-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் வாழ்க்கையை மாற்றும் பெரிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். இந்தநாட்களில் உங்களின் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும்.

சிம்மம்:

ராசியில் இருள்கிரகமான ராகு அமர்ந்து, இன்னொரு பாவக்கிரகமான சனி ராசியைப் பார்ப்பதால் நடுத்தரவயது சிம்மராசிக்காரர்களுக்கு மனச்சோர்வுகளும், கலக்கமான எண்ணங்களும் உள்ள வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு உடல்நலம், மனநலம் இரண்டுமே டல்லாக இருக்கும். வாரஇறுதியில் ராசிநாதன் சூரியன் நீசமடைவதால் இன்னும் நான்கு வாரங்களுக்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது.

சிம்மத்திற்கு இந்தவாரம் சுமாரான வாரமே. ஆனால் ராசினாதனுக்கு வீடு கொடுத்த புதன் அங்கேயே உச்சமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த எதிர்மறைபலன்கள் அனைத்தும் நீங்கி இப்போது நன்மைகள் அதிகமாக நடக்கும். சிலருக்கு மட்டும் பிள்ளைகள் விஷயத்தில் மனச்சங்கடங்கள் வரக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருப்பதால் பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பணவரவிற்கு இந்தவாரம் குறையேதும் இருக்காது. பெண்களால் நன்மைகள் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள்.

சிம்மராசி இளைய பருவத்தினரை அவர்களது பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் சிறப்புக்கள் சேரும். 14-ந்தேதி காலை 11 மணி முதல் 16-ந்தேதி காலை 11 மணிவரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் நேர்பார்வையில் குரு சந்திரயோகத்துடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு இருக்காது. ஆனாலும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

கன்னி:

ராசிநாதன் ராசியில் உச்சம் பெற்றிருக்கும் நல்லவாரம் இது. உங்கள் ராசியின் யோகாதிபதியான சுக்கிரனும் இரண்டில் வலுவாக இருப்பதால் இந்தவாரம் முழுவதும் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வெகுநாட்களாக முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும்.

இதுவரை கன்னிராசிக்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி மடை திறந்த வெள்ளம் போல் நன்மைகள் வருகின்ற வாரமிது. மற்ற கிரகங்களும் யோகநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்டது துலங்கும். அரசு ஊழியருக்கு இந்தவாரம் நல்லவாரம். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் இனிமேல் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

ராசிநாதன் ராசியிலும், ஒன்பதிற்குடையவன் இரண்டிலும் இருப்பது யோகஅமைப்பு என்பதால் இந்தவாரம் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார மேன்மை வலுவான நிலையில் இருப்பதோடு ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டிருக்கும். 16-ந்தேதி காலை 11 மணி முதல் 18-ந்தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் புதிய தொழில் முயற்சிகளோ, வீடு மாற்றம் தொழில் மாற்றம் போன்றவகளையோ செய்ய வேண்டாம்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதும், பாக்கியாதிபதி புதபகவான் உச்சமாக இருப்பதும் துலாம்ராசிக்கு முன்னேற்றங்களைத் தரும் அமைப்புகள் என்பதால் இந்தவாரம் நீங்கள் எடுக்கும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். மூன்றில் செவ்வாய் அமர்ந்து உதவிஸ்தானமும் வலுப்பெறுவதால் எதிர்பாராத இடத்திலிருந்து தேவையான நேரத்தில் உதவிகளும் இந்த வாரம் உண்டு.

பதினொன்றில் இருக்கும் ராகுவால் உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் உதவிகளைச் செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். குறிப்பிட்ட சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். எதிரிகளை ஜெயிப்பீர்கள். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும்.

வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய கிளைகள் ஆரம்பிக்கலாம். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிகராசிக்கு இருந்து வரும் பின்னடைவுகள் அனைத்தும் இனிமேல் படிப்படியாக தீர ஆரம்பிக்கும். எல்லாக் கஷ்டங்களுக்கும் முடிவு என்பது ஒருநாள் வந்தே தீரும் என்பதால் இளைஞர்களுக்கு ஒருநாள் நல்லவை நடந்துதான் ஆகவேண்டும். எவரெஸ்ட் மலை மீது ஏற ஆரம்பித்தால் ஏறிக்கொண்டே நிலாவிற்கு போய்விட முடியாது. ஒருநாள் மலை உச்சியில் இருந்து இறங்கித்தான் ஆக வேண்டும். அதுபோல விருச்சிகத்தின் வேதனைகளும் விலகித்தான் தீர வேண்டும். இனிமேல் அது நடக்க ஆரம்பிக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றிகளும் லாபங்களும் இருக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும் வாரம் இது. ராசிநாதன் இரண்டாமிடத்தில் இருப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் இந்தவாரம் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும்.

அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடக்கும்.பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும். வாரம் முழுவதும் பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான்.

தனுசு:

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல அமைப்புகளில் இருப்பதாலும், ராசியில் யோகாதிபதி செவ்வாய் அமர்ந்திருப்பதாலும், தனுசுராசிக்கு இந்தவாரம் நல்ல வாரம்தான். குறிப்பிட்ட சிலருக்கு தந்தைவழியில் கருத்துவேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் இருக்கும் என்பதால் பேச்சில் நீங்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியிருக்கும்.

ஒன்பதிற்குடைய சூரியன் பத்தாமிடத்தில் ஜீவனாதிபதி புதனுடன் இணைவதால் இந்த வாரம் தொழில் விஷயத்தில் நன்மைகள் இருக்கும். அதேநேரத்தில் அங்கே குருவும் இருப்பதால் ஒரு சிலருக்கு அப்பா விஷயத்தில் ஏதேனும் எதிர்மறையான பலன்கள் இருக்கலாம். வேலையில் இருப்பவருக்கு பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, நீண்டநாள் நிலுவையில் இருக்கும் தொகைகள் கிடைத்தல் போன்ற பலன்கள் நடைபெறும். செவ்வாய் ராசியில் இருப்பதால் எதற்கெடுத்தாலும் கோபம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள்.

இதுவரை திருமணம் ஆகாதவருக்கு இப்போது கல்யாணம் உறுதி ஆகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏழுக்கதிபதி வலுப்பெற்று, சுக்கிரன் ஆட்சியாகி, செவ்வாய் வலுப்பெறுவதால் பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரம் இருக்கின்றன.

மகரம்:

ஒன்பதில் குரு, புதன். பதினொன்றில் சனி என கிரகநிலைகள் மகரராசிக்கு சாதகமாக அமைந்துள்ள வாரம் இது. ராஜயோகாதிபதி சுக்கிரன் பத்தாமிடத்தில் ஆட்சி வலுவுடன் அமர்ந்திருப்பதால் இதுவரை சுமாராக நடந்து வந்த வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் விறுவிறுப்பாக நடந்து உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வாரம் இது.

எட்டிற்குடைய சூரியன் குருவுடன் இணைவது உங்களுக்கு நன்மைகளை தரும் என்பதால் இந்த வாரம் குடும்பத்தில் அனைவரின் மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் உள்ள வாரமாக இருக்கும். புதன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்போது மிகவும் பொருத்தமான வேலை அமையும். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் முன்னேற்றம் இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கி தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். சுக்கிரன் வலுப்பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும் வகையில் சில ஆரம்பங்கள் இருக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.

கும்பம்:

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய சந்திரன் ராசியில் அமர்ந்து உங்களை டென்ஷனாக்கும் விஷயங்களைச் செய்தாலும், ராசிநாதன் சனியும், யோகாதிபதி சுக்கிரனும் வலுவுடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம் இது. கும்பராசிக்காரர்கள் பொறுமைசாலிகள் மற்றும் நிதானம் இழக்காதவர்கள் என்பதால் சாதகமற்ற விஷயங்களை கூட இந்தவாரம் உங்களுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து கொள்வீர்கள்.

ராசிநாதன் வலுவாக இருப்பதால் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. குலதெய்வ தரிசனம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும்.

கலைஞர்களுக்கு இது நல்லவாரமாக அமையும். சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பிள்ளைகள் வழியில் செலவுகளும் மனக்கஷ்டங்களும் இருக்கும். எதிலும் பொறுமையாகப் போவது நல்லது. தகப்பனாரால் மனக்கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் இருக்கலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள்.

மீனம்:

ஒன்பது, பத்துக்குடைய குருவும், செவ்வாயும் ராசியை பார்க்கும் சாதகமான வாரம் இது. இப்போது நீங்கள் ஆரம்பிக்கும் எந்த ஒரு நிகழ்வும் உங்களுக்கு நற்பலன் தருவதாக அமையும் என்பதால், இதுவரை தள்ளி வைத்திருந்த விஷயங்கள் அனைத்தையும் இந்தவாரம் செய்து முடித்து வெற்றியடைவீர்கள் என்பது உறுதி. குறிப்பிட்ட சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றியும், வருமானமும் கிடைக்கும்.

ஆறாமிடத்தில் இருக்கும் ராகுவால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் நீங்கள் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும். ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால் சொந்ததொழில், வியாபாரம் போன்றவைகள் இப்போது நன்றாக நடக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும்.

சிகப்புநிற பொருட்களால் லாபம் அடைவீர்கள். காவல்துறையினர் உயர்வு அடைவார்கள். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடக்கும் மீனராசிக்காரர்கள் இன்னும் சில இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதால் கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் இந்த வாரம் எல்லாம் கைகூடும். பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் மீன ராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு.

No comments :

Post a Comment