Tuesday, 6 September 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (5.9.16 - 11.9.16)

மேஷம்:

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய புதன் உச்சநிலையில் அமர்ந்து உங்களுக்கு இனி சமாளிக்க முடியாது என்கின்ற தன்னம்பிக்கை இழப்பைக் கொடுத்தாலும் பிற்பகுதியில் புதன் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் மேஷராசிக்காரர்கள் முடிவில் வெற்றியடையும் வாரமாக இது இருக்கும். வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

அஷ்டமச் சனி நடப்பதால் எதையும் முனைப்புடன் செய்ய வேண்டியது அவசியம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சாதாரண சிறு விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம்.

சூரியன் ராகுவுடன் இணைவதால் தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். இளைஞர்கள் சிலர் இந்த வாரம் பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்வீர்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் நீசபங்கம், யோகாதிபதி உச்சம் என வாரத்தின் ஆரம்பமே ரிஷப ராசிக்கு நல்லவிதத்தில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகளும் மேன்மைகளும் உள்ள வாரமாக இது இருக்கும். நான்காம் அதிபதி சூரியன் ஆட்சியாக இருப்பதால் வீடு, வாகனம் போன்றவற்றில் நன்மைகள் நடக்கும் என்பதால் இந்த வாரம் குறிப்பிட்ட சிலருக்கு வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவைகள் இருக்கும்.

வேலை, தொழில் விஷயங்களில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும் வாரம் இது. குறிப்பாக சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும். அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.

இந்தவாரம் ரிஷபராசிக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் வாரமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். கிரகநிலைகள் இன்னும் கொஞ்சகாலத்திற்கு உங்களுக்கு சாதகமாக இருக்கப்போவதால் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 

மிதுனம்: 

வாரஆரம்பத்தில் ராசிநாதன் புதன் உச்சமாகி பிற்பகுதியில் வக்கிர நிலையில் அதிநட்பு ஸ்தானத்தில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடப்பது போல தோன்றினாலும் பிறகு வேகம் இழந்து எதிலும் ஏமாற்றங்களையும் தாமதங்களையும் தரும் வாரமாக இருக்கும்.

வாரத்தின் ஆரம்ப நாட்கள் நல்லவிதமாகவே ஆரம்பிக்கின்றன. ஆனால் ராசியை செவ்வாய் பார்ப்பதால் அடிக்கடி மூட் அவுட் ஆவீர்கள். காரணம் இல்லாமலேயே எரிச்சல்படுவீர்கள். ‘முணுக்‘கென்றவுடன் மூக்குக்கு மேல் கோபமும் எரிச்சலும் எட்டிப் பார்க்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சிலருக்கு ஆரோக்கிய குறைபாடு வரும். மருத்துவச் செலவுகள் உண்டு.

மிதுனராசிக்காரர்கள் மிகப்பெரிய புத்திசாலிகள் என்பதாலும் நுணுக்கமான வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் உங்களால் எதையும் எந்த சூழ்நிலையிலும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை இந்தவாரம் நிரூபிப்பீர்கள்.

கடகம்:

மூன்றாமிடத்தில் ஒன்று கூடும் குரு, புதன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் இந்த வாரம் உங்களுடைய மனஉறுதியையும், தைரியத்தையும் அதிகப்படுத்தி எதையும் சாதிக்கும் திறனை கடகராசிக்கு அளிக்கும் என்பதால் இது கடகத்திற்கு கவலை இல்லாத வாரம்தான். இரண்டுக்குடைய சூரியன் ராகுவுடன் இணைந்திருப்பதால் சிலருக்கு அன்னிய, மத, மொழிக்காரர்கள் மூலம் பண வரவு இருக்கும்.

ஐந்தில் சனி செவ்வாய் சேர்ந்திருப்பதால் சிலருக்கு புத்திரத்தால் சங்கடங்கள் இருக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்காது. அதற்காக கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப்பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம்.

நீங்கள் பிறந்தபோது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். குழந்தைகளின் விஷயத்தை பக்குவமாக கையாள்வதன் மூலம் இந்தவாரம் நிம்மதி கிடைக்கும்.

சிம்மம்: 

ராசிநாதன் ராசியிலேயே ஆட்சியாக இருப்பது நன்மைதான் என்றாலும் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் அனுபவிக்க விடாமல் கூடவே இருக்கும் ராகு செய்வார் என்பதால் சிம்மராசிக்கு இந்தவாரம் நன்மைகளும், அதோடு எரிச்சல் தரும் விஷயங்களும் நடக்கும் வாரமாக இருக்கும். ஏழில் இருக்கும் கேதுவால் சிலருக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் கோபங்கள் இருக்கும் என்பதால் பொறுத்துப் போவது நல்லது.

ராகு என்பது ஒரு இருட்டுக் கிரகம். இருள் உங்கள் ராசியில் இருக்கிறது என்றால் நீங்கள் இருட்டில் நிற்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால் உங்களையும், உங்கள் திறமைகளையும் யாரும் பார்க்க முடியாது. ராசிநாதனும் ராகுவுடன் சேர்ந்துள்ளதால் உங்கள் திறமைகளை நீங்களே வெளிக் கொணர மறுப்பீர்கள்.

விரயாதிபதி வலுவாக உள்ளதால் வீண் விரயங்களும், செலவுகளும் இருக்கும். என்னதான் வருமானம் வந்தாலும் சேமிப்பது கடினம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. எத்தகைய சோதனைகள் வந்தாலும் சிம்மராசிக்காரர்கள் இறுதியில் வெற்றியைச் சந்திப்பீர்கள் என்பது உறுதி. அதேநேரத்தில் வெற்றியை அடைவதற்கு போராட வேண்டியிருக்கும். 

கன்னி:

ராசிநாதன் ராசியிலேயே உச்சமாகி இருந்தாலும் அவர் வக்கிரமாக இருப்பதாலும் வார பிற்பகுதியில் பனிரெண்டாமிடத்திற்கு மாறுவதாலும் இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகளும், பண வரவுகளும் இருந்தாலும் அனைத்திலும் வீண் செலவுகளே பிரதானமாக இருந்து உங்களை சங்கடங்களுக்கு உள்ளாக்கும் வாரமாக இருக்கும்.

சிலருக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் ஏறுக்குமாறான நிகழ்ச்சிகளும் கசப்பான அனுபவங்களும் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். நண்பர்களால் உதவிகள் இருக்காது. மூத்த சகோதரஸ்தானம் சுபவலுப் பெறுவதால் அண்ணன், அக்காக்களிடமிருந்து உதவிகள் உண்டு.

சிலருக்கு புனிதயாத்திரையோ, திருக்கோவில்களுக்கோ செல்லும் வாய்ப்பு கிடைக்கும். யோகாதிபதி சுக்கிரன் குருவுடன் இணைந்து வலுவிழப்பதால் இந்தவாரம் பெண்களால் பிரச்னைகள் உள்ள வாரமாக இருக்கும். பெண்களால். சிறுசிறு சச்சரவுகள் இருக்கும். பெண்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. சிலருக்கு வெளிநாடு அல்லது வெளிமாநில பயணங்கள் இருக்கும்.

துலாம்:

ராசிநாதன் நீசபங்கம் அடைவதும் ராசிக்கு ஒருபுறம் பாவக்கிரகங்களும், இன்னொருபுறம் சுபக்கிரகங்களும் அமர்ந்திருக்கும் வாரம் இது. இன்னும் சில நாட்களில் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு மாற இருப்பதால் தற்போது துலாம் ராசிக்காரர்களுக்கு இருந்து வரும் தொழில் சிக்கல்கள் அனைத்தும் தீர்வதற்கான ஆரம்பங்கள் நடக்கும் வாரமாக இது இருக்கும்.

குடும்பத்தில் சிலருக்கு கருத்து வேற்றுமைகள் இருக்கும். வாக்குறுதியை தற்பொழுது நிறைவேற்றுவது கடினம் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக அவசரப்பட்டு வாக்குத் தர வேண்டாம். வீண்செலவுகள் இருக்கும். சிக்கனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு அரசு வேலை, அல்லது அரசு உதவிகள் கிடைக்கும்.

வாக்குஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால் தன்னை அறியாமல் கோபம் வருவதற்கோ பிறரைப் பார்த்து சுடுசொல் சொல்வதற்கோ வாய்ப்பிருக்கிறது. தவிர்க்க இயலாத விஷயத்திற்காக பொய் சொல்வீர்கள். அனைத்திலும் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் தொல்லைகள் எதுவும் இருக்காது.

விருச்சிகம்:

பதினொன்றாமிடத்தில் கூடி இருக்கும் மூன்று சுபக்கிரகங்களும் தொழில் ஸ்தானத்தில் வலுவாக இருக்கும் ஜீவனாதிபதியும் இந்தவாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிம்மதியைத் தருவார்கள். குறிப்பாக தொழில்ரீதியாக சிக்கல்களில் இருக்கும் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் சிரமங்கள் குறைய துவங்கும்.

மனதில் இருக்கும் இனம் புரியாத கலக்கத்தையும், பயத்தையும் உதறித் தள்ளுங்கள். உங்களை மீறி உங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. பதினொன்றில் இருக்கும் கிரகங்கள் உங்கள் ஆற்றலை வெளிப்படுத்த துணை புரிவார்கள். அருகில் உள்ள சுப்ரமணிய கடவுளின் கோவிலுக்கு சென்று அவரை வேண்டுங்கள். கடவும் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார்.

எந்த ராசிக்காரராக இருந்தாலும் அஷ்டமச்சனியோ, ஏழரைச்சனியோ முடிந்த பிறகு வாழ்க்கை நல்லவிதமாக செட்டில் ஆகும் என்பதால் வரும் சனிப்பெயர்ச்சிக்குப் பின் விருச்சிகத்திற்கு பொற்காலத்தின் கதவு திறக்கும். அதுவரை பொறுத்திருங்கள். வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் பணம் வரும். வாகன மாற்றம் வீடு மாற்றம் சிலருக்கு உண்டு.

தனுசு:

ஒன்பது, பத்துக்குடைய சூரியனும், புதனும் வலுவாக இருப்பதாலும் வாரத்தின் பிற்பகுதியில் இருவரும் இணைந்திருப்பதாலும் இந்த வாரம் தனுசு ராசிக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத நல்ல வாரமாக இருக்கும். வாரம் முழுவதும் சந்திரனின் இயக்கமும் நன்மைகளை தரும் அமைப்பில் இருப்பதால் தனுசு ராசிக்கு குறைகள் சொல்ல எதுவும் இல்லை.

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் செயலாக மாறி வெற்றியையும், உற்சாகத்தையும் தரும் வாரம் இது. கெடுதல் செய்யும் கிரகங்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். சனியும் பனிரெண்டில் மறைந்திருக்கிறார். செவ்வாய் சனி இணைவால் இந்தவாரம் வாழ்க்கைத்துணை வழியில் கோபம் வரக்கூடிய சம்பவங்கள் சிலருக்கு நடைபெறும். பொறுமை தேவை.

மூன்றில் இருக்கும் கேதுபகவானால் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை மற்றும் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. குறிப்பிட்ட சிலருக்கு ஞானிகள் தரிசனமோ, தெய்வதரிசனமோ கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாத புனிதத்தலங்களுக்கு இப்பொழுது போக முடியும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் சுமுகமாக நடைபெறும்.

மகரம்:

ராசிநாதன் ராசியை பார்ப்பதோடு குருபகவானின் பார்வையும் ராசிக்கு இருப்பது மகரத்திற்கு சிறப்பான நிலை என்பதால் இந்த வாரம் மகர ராசிக்கு தொல்லைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் நீங்கும் வாரமாக இருக்கும். ஒன்பதுக்குடைய புதன் வக்ரநிலையில் எட்டாமிடத்தில் அமர்வதால் தந்தையின் ஆரோக்கியம் மற்றும் தந்தையுடனான உறவு கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கும்.

மூன்றாமிடம் வலுப்பெறுவதால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் பலிக்கும். எதிலும் நம்பிக்கையோடும் அக்கறையோடும் உழைப்பீர்கள். குழந்தைகள் விஷயத்தில் முக்கியமான நல்ல திருப்பங்கள் இருக்கும். வாழ்கைத்துணைவர் உதவியாக இருப்பார்.

இதுவரை சொந்தவீடு இல்லாத சிலருக்கு வீடு அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். சிலருக்கு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட அனுபவங்கள் கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கூடங்களில் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். தாயை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கும்பம்:

ராசு-கேதுக்களின் பிடியில் ராசி இருப்பதால் இந்த வாரம் அன்னிய, மத, இன மொழிக்காரர்களால் வீண் விரையங்களும், மனஸ்தாபங்களும் உள்ள வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வேலை அமைப்புகளில் ஏமாற்றங்கள் இருக்கும் என்பதால் அலுவலகங்களில் கூடுதல் கவனம் தேவை. வேலை வாங்கி தருவதாக யாராவது பணம் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம். ஏமாற்றப்படுவீர்கள்.

தொழில்நிலை சரிவடையாது. ஏழாமிடத்தில் ராகு இருப்பதால் வீட்டைக் கவனியுங்கள். வீட்டிற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து விடுங்கள். பத்தில் இருக்கும் சனி வேலையில் பிரச்னைகளை உண்டு பண்ணினாலும் கைமீறி எதுவும் போகாது. மேலதிகாரி நீங்கள் சொல்வதை முணுமுணுப்புடன் ஏற்றுக் கொள்வார்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், தூரப் பிரயாணம் போன்றவைகள் இருக்கும். வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான முயற்சிகள் செய்வீர்கள். பெண்களால் மனச்சங்கடங்கள் வரலாம். இந்த வாரம் பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருங்கள். யாரிடமாவது அகப்பட்டு திண்டாடும் நிலை உண்டு. சிலருக்கு சொந்தவீடு அமைவதற்கான ஆரம்பங்கள் நடக்கும்.

மீனம்:

வாரத்தின் ஆரம்ப நாளே சந்திராஷ்டமமாக ஆரம்பித்தாலும் பனிரெண்டு ராசிக்கும் இல்லாத ஒரு சிறப்பு பலனாக மூன்று சுபக்கிரகங்கள் ராசியை பார்ப்பதால் இந்த வாரம் இறைவனின் அருளால் எந்த பிரச்சினை இருந்தாலும் நல்லபடியாக, அதிர்ஷ்டமாக உங்களுக்கு சாதகமாக முடியும் வாரமாக இருக்கும்.

பனிரெண்டு ராசிகளிலேயே மீனத்திற்கு மேன்மையான காலம் இது. ராசிநாதன் குரு ஏழில் இருந்து ராசியைப் பார்க்கிறார். ராஜகிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. இந்த நிலை சில மாதங்கள் தொடரும். ஆறில் இருக்கும் ராகு உங்களின் ஆற்றலை அதிகப்படுத்துவார்.

மீனராசிக்காரர்களுக்கு தற்போது வளர்பிறை ஆரம்பம். இது நீடிக்கும். ஞாயிறு, திங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பிள்ளைகளால் நல்ல செய்தி வரும். சுக்கிரன் நீசமாகி பலவீனமாக இருப்பதால் எதிர்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு அடிபணியும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களை பார்த்தவுடன் பக்கத்து தெருவிற்குள் நுழைவார்கள். நான்காமிடம் சுபத்துவம் பெறுவதால் தாயார் வழியில் நல்ல விஷயங்கள் நடக்கும். அம்மாவின் ஆசியைப் பெறுவீர்கள்.

No comments :

Post a Comment