Saturday, 24 September 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (26.9.16 - 2.10.16)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதோடு இந்த வாரம் யோகாதிபதி சந்திரனும் நல்ல இடங்களில் இருப்பதால் மேஷராசிக்கு பூர்வ புண்ணிய பலத்தினால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். சந்திரன் வலுப்பெறுவதால் இந்த வாரம் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

பணவரவு சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு இளைய சகோதர்களால் வீண்விரயங்களும் செலவுகளும் இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்கள், காவல்துறையினர் போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள்.

தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். உங்களில் சிலர் வேலையில் சாதனை செய்து நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதாலும், ஒன்பதிற்குடைய சனி பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதாலும் இதுவரை தடைப்பட்டிருந்த பாக்கியங்கள் யாவும் உங்களுக்கு கிடைப்பதற்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும். சுக்கிரனின் சுப வலுவால் இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனதிற்குள் காதலிக்க ஆரம்பித்து மயக்கத்தில் இருப்பீர்கள். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். திருமணமானவர்கள் மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள்.

வேலை, வியாபாரம் சொந்த தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம்.

ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும். லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு அனைத்துக் காரியங்களும் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். சிலருக்கு அதிகாரப்பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு.

மிதுனம்:

வார ஆரம்பத்தில் சந்திரன் வலுவாக இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் கடுகடுப்பாக இருப்பீர்கள். தேவையின்றி கவலைப்பட்டு எரிந்து விழுவீர்கள். மற்றவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் எங்கும் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அதேநேரத்தில் குடும்பத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சி இருக்கும்.

இதுவரை அலுவலகங்களில் பொறாமை மற்றும் துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்குவதால் இனிமேல் நிலையான வருமானம் வரத்துவங்கும். இதுவரை உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் வாரம் இது.

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும் வாரம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

கடகம்:

கடகநாதன் சந்திரன் வார ஆரம்பத்தில் ராசியிலேயே ஆட்சியாக இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு யோகவாரமே. செவ்வாய் ஆறில் மறைந்து ராசியை பார்ப்பதாலும், சூரியன் மூன்றில் இருப்பதாலும் இந்த வாரம் அனைத்திலும் வெற்றியும், எதிர்காலத்திற்கான திட்டமிடலும் இருக்கும் வாரமாக இருக்கும். அதேநேரம் நடக்கப் போகும் மாறுதல்களை நீங்கள் உணரும் வாரமாகவும் இருக்கும். சிலருக்கு தூரப் பயணங்கள் உண்டு. கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதாரப் பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரத்துவங்கும்.

பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம். உடல் நலத்தில் அக்கறை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

சிலருக்கு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும்.

சிம்மம்:

ராசியின் யோகாதிபதிகள் குருவும் செவ்வாயும் நற்பலன் தரும் அமைப்பில் இருப்பது ராசிக்கும், தொழில்ஸ்தானத்திற்கும் இருக்கும் சனிபார்வையின் கடுமையை குறைக்கும் என்பதால் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகள் முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். யோகாதிபதி செவ்வாய் ஐந்தில் அமர்ந்து லாபஸ்தானம் என்று சொல்லப்படும் பதினொன்றைப் பார்ப்பதால் சிகப்புநிறம் சம்மந்தப்பட்டவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள் புரோமோட்டர்கள் ஜல்லி, மணல் விற்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் வரும்.

பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே இருக்கும் என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை தொழில் ஜீவன அமைப்புகளில் இடையூறுகள் எதுவும் இல்லாமல் சகஜமாகவே செல்லும்.

தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குறிப்பாக சித்தியால் நன்மை அடைவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் முதலில் காட்டி பிறகு அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதால் யூக வணிகத்தில் இந்த வாரம் கவனமாக இருக்க வேண்டும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும்.

கன்னி:

ராசிநாதன் புதன் பனிரெண்டில் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த சூரியன் ராசியில் இருப்பது பரிவர்த்தனை எனப்படும் யோகஅமைப்பு என்பதால் இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களின் பொருளாதாரம் நல்லநிலையில் இருப்பதோடு வாரம் முழுவதும் ஏதேனும் ஒருவகையில் பணவரவு இருந்து கொண்டிருக்கும் என்பதால் கன்னிக்கு கவலைகள் ஏதும் இல்லை. அனைத்து தரப்பு கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் வாரமாக இருக்கும்.

குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. ராசியில் சூரியனும், குருவும் இணைந்து ராசிநாதன் புதனை சனி பார்ப்பதால் இளையபருவத்தினருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத் தடையும் சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு.

தொழில் வேலை வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் திருப்திகரமான நல்ல பலன்கள் இருக்கும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும். புத்திர பாக்கியம் இல்லாதவருக்கு நல்ல செய்தி உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் செலவு இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வயதானவர்கள் தங்கள் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்வீர்கள்.

துலாம்:

ராசிக்கு இரண்டில் சனி இருந்து உங்களின் முன்னேற்றத்தை தடை செய்து வந்தாலும் அடுத்த வருடம் ஏழரைச்சனி முடிந்ததும் துலாம்ராசிக்கு நல்ல எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த ஆறு ஏழு வருடங்களாக நீங்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள், வேதனைகள், பொருள் இழப்புகள் அனைத்தும் அடுத்த வருட ஆரம்பத்திலேயே நீங்கும் என்பதால் கஷ்டங்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்கள்தான் என்பதை மனதில் இருத்தி நீங்கள் செயல்படும் வாரம் இது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இந்தவாரம் பிரயாணங்களும் அலைச்சல்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு கடல் தாண்டிப் போகும் வெளிநாட்டுப் பயணங்களும் இருக்கலாம். டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் நன்மைகளைத் தரும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் வீண் செலவுகள் இருக்கும்.

பனிரெண்டாம் இடத்தில் இருக்கும் குருவால் பணவரவிற்கு தடையிருக்கும் என்பதால் வருமானக்குறைவு இருக்கலாம். தொழில் இடங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். ராகுவுடன் பாக்யாதிபதி புதன் இணைவதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு.

விருச்சிகம்:

வார ஆரம்பத்தில் ஒன்பதாமிடத்தில் சந்திரன் ஆட்சி பெறுவதும், குருபகவான் லாபஸ்தானத்தில் இருப்பதும் யோகஅமைப்புகள் என்பதால் ஜென்மச்சனி நடந்து கொண்டிருந்தாலும் விருச்சிகராசிக்கு இந்த வாரம் பொருளாதார மேம்பாடும், பண வரவும் கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் மனச்சங்கடங்கள் வரக்கூடிய நிகழ்ச்சிகள் இருக்கும். சூரியன் குரு கூடுவதால் பிள்ளைகள் ஏதாவது வம்பிழுத்துக்கொண்டு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கேட்டை நட்சத்திரத்தில் தற்போது சனி சென்று கொண்டிருப்பதால் கோட்டை கட்டி ஆள வேண்டிய சிலர் தற்போது சீர்கேட்டினை சந்தித்து அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கேட்டை நட்சத்திரக் குழந்தைகள் இருக்கின்ற குடும்பத்திலும் சிக்கல்கள் இருக்கின்றன. சனியின் தாக்கத்தால் சிலருக்கு மனதில் ஒரு விதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். நேர்மையானவற்றை சிந்தித்து நல்லவைகளையே செய்து வந்தால் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை.

கணவன், மனைவி பிரச்னையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. அஷ்டமாபதி புதன் ராகுவுடன் இணைவதால் வம்பு, வழக்கு போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எவரிடமும் வீண் சண்டைக்கு போக வேண்டாம். பொறுமையாக இருங்கள். கோபத்தில் ஏதாவது சொல்லி அது சண்டையாகும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

தனுசு:

வார ஆரம்பத்தில் 27-ந்தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதியவர்களை அறிமுகம் செய்து கொள்வதோ முக்கிய முடிவுகள் எடுப்பதோ வேண்டாம். குறிப்பாக கடகராசிப் பெண்களிடம் விலகி இருக்கவும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த வாரம் முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். கால்நடை மருத்துவர்கள் வளர்ப்புப் பிராணிகள் விற்பவர்கள் போன்றவர்களுக்கு மேன்மைகளை இந்த வாரம் தரும். குறிப்பிட்ட சிலருக்கு புதிய வீடு அல்லது புதிய வாகனம் அமையும்.

ஏழுக்குடைய புதன் இந்தவாரம் ராகுவுடன் நெருங்கி இணைவது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரும் என்பதைக் காட்டுவதால் குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் நன்மைகள் நடக்க வைக்கலாம் என்பதால் நீங்கள் பொறுமை காட்ட வேண்டிய வாரமாக இருக்கும். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.

நண்பர்கள் மத்தியில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் உண்டு. சுக்கிரன் பதினொன்றில் வலுப்பெறுவதால் பெண்களால் நன்மைகள் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளிடமிருந்து சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு பெறுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்கு 27-ந்தேதி மாலை 4 மணி முதல் 30-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் உங்களின் புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் செய்ய வேண்டாம். விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் போன்றவைகளையும் செய்யக்கூடாது. இந்த நாட்களைத் தவிர வாரத்தின் மற்ற நாட்கள் நல்லவையே. மற்றபடி மகரத்திற்கு இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி மடை திறந்த வெள்ளம் போல் நன்மைகள் வருகின்ற வாரமிது.

நட்புக்கிரகங்கள் யோகநிலையில் இருப்பதால் உங்களுக்கு தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். எனவே நீங்கள் நீண்டகாலமாக நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம். பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகள் வலுவாக நடப்பவர்கள் இன்னும் சில இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள் என்பதால் கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் இந்த வாரம் எல்லாம் கைகூடும்.

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்லவாரம் இது. இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது.

கும்பம்:

ராசிக்கு ஏழில் ராகு இருந்து அவருடன் எட்டுக்குடைய புதன் இணைவதால் கும்ப ராசிக்காரர்களின் நண்பர்கள் பங்குதாரர்கள் வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் கருத்து மோதல்கள் ஏற்படும் வாரமாக இருக்கும். வேலையில் இருக்கும் பிரச்னைகளை வீட்டிற்கு கொண்டு செல்லாமல், வீட்டினில் நுழைந்தவுடன் அலுவலகத்தை மறந்து விட்டாலே ஒரு பிரச்னையும் இல்லை என்பதால் நீங்கள் நிதானமுடன் இருக்க வேண்டிய வாரம் இது.

வார ஆரம்பத்தில் ஆறுக்குடையவன் ராசியைப் பார்த்து உங்களுக்கு டென்ஷன் வரும் விஷயங்களைச் செய்தாலும் ஆறாமிடத்தை செவ்வாய் வலுப்பெற்று பார்ப்பதால் வருகின்ற சிறிய பிரச்னைகள் இரண்டு நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் கவலைப் பட ஒன்றுமில்லை. எதிரிகள் அனைவரும் ஓடிப் போவார்கள் என்பது உறுதி. சுக்கிரன் ஆட்சி பெறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசி நிமிடத்தில் போய் விடும் என்பது நிச்சயம். பெண்களால் செலவுகள் இருக்கும். சகோதரிகளுக்கு உதவீர்கள்.

ராசியில் கேது அமர்ந்து எட்டில் குரு இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். 30-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் 2-ந்தேதி மதியம் 1 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவுடன் இணைந்திருப்பதால் பெரிய சங்கடங்கள் எதுவும் இருக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் ஆரம்பங்களை இந்த நாட்களில் தவிர்ப்பது நல்லது.

மீனம்:

ராசியை செவ்வாய் பார்ப்பதால் இன்னும் சில வாரங்களுக்கு முணுக்கென்றவுடன் கோபம் வரும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். சிறு விஷயத்திற்கு கூட பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். எதிலும் நிதானமாக இருங்கள். ஆறில் இருக்கும் ராகு நல்ல பலன்களைச் செய்வார். மிக முக்கியமான நபர்களிடமிருந்து இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகளைப் பெற முடியும். பனிரெண்டில் இருக்கும் கேது இதுவரை தரிசிக்க இயலாத புனிதத்தலங்களை சென்று பார்க்கும் வாய்ப்பினை இப்போது உங்களுக்கு தருவார்.

சுக்கிரன் எட்டில் அமர்ந்து ஏழுக்குடைய புதன் ஆறில் மறைவதால் நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். அரசு தனியார் ஊழியருக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாரம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்

No comments :

Post a Comment