Friday, 16 September 2016

2016 - புரட்டாசி மாத பலன்கள்

மேஷம்:

மாத ஆரம்பத்திலேயே ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்திலிருந்தும், சனியிடமிருந்தும் விலகுவது மேஷராசிக்கு சந்தோஷங்களையும், புத்துணர்வையும் கொடுக்கக்கூடிய வலுவான அமைப்புகள் என்பதால் புரட்டாசி மாதம் உங்களுக்கு சந்தோஷமான மாதமாக இருக்கும். இந்தமாதம் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. மாதம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மருந்து எப்போதுமே கசக்கும் என்றாலும் அது நோயை தீர்க்கும் என்பது உண்மை என்பதால் இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் அனைத்தும் நன்மையாகவே முடியும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. சிலருக்கு இப்போது வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பரபொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும்.

வியாபாரிகள், சொந்தத் தொழில் செய்வோருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. அஷ்டமச்சனி நடப்பதால். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. செலவுகள் நிறைந்த மாதம் இது வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன.

ரிஷபம்:

இதுவரை ஏழாமிடத்தில் சனியுடன் இணைந்து குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த செவ்வாய் இப்போது அங்கிருந்து விலகுவது இந்தமாதம் உங்களுக்கு வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் நன்மைகளும் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு சச்சரவுகளும் நீங்கும் என்பதைக் காட்டுகிறது. இந்த அமைப்பால் குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் இந்த மாதம் விலகும் என்பது உறுதி.

இதுவரை வக்ரநிலையில் இருந்துவந்த குடும்பாதிபதி புதபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை தாமதமாக வழங்கிக் கொண்டிருந்தார். இந்தமாதம் முதல் அவர் வக்ரநிலை நீங்கி தன்னுடைய இயல்பு நிலைக்கு மாறி உச்சவலு அடையப் போவதால் ரிஷபராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் தடைகளை நீக்கி நல்ல பணவரவுகளையும், நன்மைகளையும் செய்யும் மாதமாக இருக்கும். கடன் தொல்லைகளோ, மறைமுக எதிர்ப்புகளோ அருகில் வராது. புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இந்த மாதம் கருவுறுதல் இருக்கும்.

பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இந்தமாதம் அவற்றை முடிப்பீர்கள். ராஜ கிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

மிதுனம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் நான்காமிடத்தில் உச்சமாக இருக்கிறார். ராசிநாதன் வலுப்பெறும் போது ராசியும் வலுவடைய வேண்டும் என்பது ஜோதிடவிதி. புதன் உச்சம் பெறுகிறார் என்பதால் இந்தமாதம் மிதுன ராசிக்காரர்கள் அந்தஸ்து, கௌரவம் பெறக்கூடிய சந்தர்ப்பங்களையும், சம்பவங்களையும் அடைவீர்கள். மாத ஆரம்பத்தில் புதன் ராகுவுடன் இணைந்திருந்தாலும் அவருடைய நண்பர்கள் சுக்கிரனும், சனியும் நல்லநிலையில் இருப்பதால் வருமானங்களும், சந்தோஷங்களும் உள்ள மாதமாகவும் இது இருக்கும்.

அதேநேரத்தில் புரட்டாசியின் சிறப்புப்பலனாக மாத ஆரம்பத்திலேயே செவ்வாய் ஏழாமிடத்திற்கு மாறி தனது கோபப்பார்வையை ராசியின் மீது வீசுவதால் நீங்களும் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவீர்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணையின் மீது குற்றம் குறை கண்டுபிடித்து கோபப்படுவீர்கள். எதிலும் நிதானமாக இருக்கவேண்டியது அவசியம். குறிப்பாக வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். ஆனால் இதை மறந்து யாரிடமாவது கோபத்துடன் பேசி இந்தமாதம் அவரை விரோதியாக்குவீர்கள்.

இளைய பருவத்தினருக்கு திருமணம், வேலை, குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் இருக்கும். இன்னும் சில காலத்திற்கு கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் மிதுனராசிக்காரர்கள் துணிவுடன் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும் என்பது உறுதி. ராகுபகவானும் மூன்றாமிடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும்.

கடகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் நல்ல அமைப்பில் அமர்ந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கும் நிலையில் இருக்கிறார். தீர்த்துக் கொண்டும் இருக்கிறார் என்பதால் புரட்டாசிமாதம் கடகராசிக்கு குறை சொல்ல முடியாத மாதமே. அதேநேரத்தில் மாதம் முழுவதும் சூரியன் குருவுடன் இணைந்து அவரை பலவீனப்படுத்துவதால் உடல்நலம் இல்லாமல் இருக்கும் கடக ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தின் மேல் அக்கறை காட்ட வேண்டிய மாதமாகவும் இது இருக்கும்.

தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருக்கும் ராகுவால் இந்த மூன்று அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதால் பணவரவு சுமாராகத்தான் இருக்கும். ஒன்பதாமிடம் குரு பார்வையுடன் வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும் தேவையற்ற விஷயங்களில் இந்த மாதம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக வரிவசூல் செய்யும் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் புரட்டாசி மாதம் முழுவதும் தனது நண்பரான குருவுடனும் தன்னை நண்பராக நினைப்பவரான உச்ச புதனுடனும் இணைந்திருக்கிறார். இது உங்களுக்கு சந்தோஷங்களையும் நன்மைகளையும் தரும் நிலை என்பதால் இந்தமாதம் எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாமல் நல்லமாதமாகவே இருக்கும். மேலும் இதுவரை உங்களின் கடன் ஸ்தானாதிபதியான சனியுடன் இணைந்திருந்த இன்னொரு நண்பர் செவ்வாய்பகவான் மாத ஆரம்பத்திலேயே அங்கிருந்து விலகி குருவின் வீட்டிற்குச் செல்வதாலும் புரட்டாசி மாதம் உங்களுக்கு மேன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும்.

ராசியில் இருக்கும் ராகுவால் சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்களை வேலை விஷயமாக இப்போது செய்வீர்கள். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். கைக்கெட்டும் தூரத்தில் மதிய உணவு இருந்தாலும் எடுத்து சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. யோகக்கிரகங்கள் நல்லநிலையில் இருப்பதால் ஏற்கனவே நீங்கள் யோசனையின்றி அவசரப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தையும் இந்த மாதம் சீர்தூக்கி முறைப்படுத்திக் கொள்ள முடியும்.

பிள்ளைகள் விஷயத்தில் மனமகிழ்ச்சியான சுபகாரியங்கள் உண்டு சிலருக்கு குலதெய்வ, இஷ்டதெய்வ தரிசனம் கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசுத்துறையினருக்கு இந்த மாதம் நல்லபலன்கள் உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

கன்னி:

ராசிநாதன் ராசியிலேயே உச்சம் பெறுவது என்பது கன்னிராசிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பட்ட சிறப்பு நிலை என்பதாலும் அந்த சிறப்பான நிலை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சில வாரங்கள் நடக்கும் என்பதாலும் அது இப்போது உங்கள் ராசிக்கு நடந்து கொண்டிருப்பதாலும் புரட்டாசி மாதம் உங்கள் அந்தஸ்து, கௌரவம் போன்றவற்றை அதிகப்படுத்தும் மாதமாக இருக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும்.

மாத ஆரம்பமே யோகத்துடன் ஆரம்பிப்பதால். நீண்ட நாட்களாக மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் முடிக்க முடியாமல் இருந்த நிலை மாறி இப்போது வரன் உறுதியாகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள் நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இந்தமாதம் முடித்துக் காட்டுவீர்கள்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாக முடியும். பொருளாதார சிக்கல்கள் இருக்காது. பாக்கியாதிபதி சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ஆட்சியாக இருப்பதால் இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும்.

துலாம்:

இதுவரை நீச நிலையில் குருவுடன் இணைந்து வலிமை இழந்த நிலையில் இருந்து வந்த ராசிநாதன் சுக்கிரன் இந்தமாதம் முழுவதும் ஆட்சிநிலை பெறுவதும், யோகாதிபதியான சனிக்கு மாதஆரம்பத்திலேயே செவ்வாயுடனான தொடர்பு விலக பெறுவதும் துலாம் ராசிக்கு நன்மை செய்யும் அமைப்பு என்பதால் புரட்டாசி மாதம் உங்களுக்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம்தான். இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருந்த அனைத்து விஷயங்களும் இந்தமாதம் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும்.

ராசிநாதனின் வலிமையால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். துலாம் ராசிக்காரர்கள் பட வேண்டிய கஷ்டங்கள் அனைத்தையும் ஏற்கனவே அனுபவித்து விட்டீர்கள் என்பதால் இனி நல்லது மட்டுமே உங்களுக்கு நடக்கும். கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண்வாக்குவாதங்களை தவிருங்கள். சிலருக்கு மனைவி மூலமான நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும்.

புரட்டாசி மாதம் முழுவதும் உங்களின் தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு விரயங்களும், செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உண்டு. வருமானமும் தாராளமாகவே இருக்கும் கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள்.

விருச்சிகம்:

ஏற்கனவே ஜென்மச்சனி நடந்துவரும் நிலையில் கடந்த சிலமாதங்களாக ராசிநாதன் செவ்வாயும் சனியுடன் இணைந்து வலுக்குறைந்ததால் அடிமேல் அடி என இரட்டைஅடிகளாக வாங்கி கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாத ஆரம்பத்திலேயே செவ்வாய் சனியிடமிருந்து விலகி நட்புவீட்டில் அமர்வதாலும், இன்னும் சிலவாரங்களில் ராசிநாதன் உச்சநிலை அடையப் போவதாலும், அனைத்துப் பிரச்னைகளும் தீர ஆரம்பிக்கும் மாதமாக இது இருக்கும்.

முப்பதுவயதுகளில் இருக்கும் இளையபருவத்தினர் அடுத்த முப்பது வருடங்களுக்கு தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டிய அனுபவங்களை மட்டுமே இப்போது சனிபகவான் உங்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார் என்பதால் ஏழரைச்சனியை நினைத்து கலக்கம் எதுவும் தேவையில்லை. சனி முடிந்ததும் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து அனைத்து நன்மைகளும் நடக்கும் என்பதால் இந்த ஏழரைச் சனியைக் கண்டு பயப்படவும் தேவையில்லை.

நான் என்னதான் சொன்னாலும் ஒருசிலர் குடும்பத்தில் கடுமையான எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். கடுமையான மன அழுத்தத்திலும் சிலர் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான். நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. குறிப்பாக தூங்க முடியாத அளவிற்கு வேதனைகளை அனுபவிக்கும் சிலரின் சிரமங்கள் அனைத்தும் தீரப்போவதால் புரட்டாசி உங்களுக்கு நல்ல மாதமே.

தனுசு:

தனுசுராசிக்கு புரட்டாசிமாதம் கெடுதல்கள் சொல்ல எதுவுமில்லை. ராசியின் எதிரி சுக்கிரனும் புதனும் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபங்களும் கருத்துவேறுபாடுகளும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் இதுவரை தொழிலில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். சிறுசிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.

ராசிநாதன் வலுப்பெறுவதால் சிலருக்கு ஆன்மிக எண்ணங்களும் சிந்தனைகளும் கூடுதலாகி, தெய்வத்திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். தந்தைவழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தைவழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப்பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

மகரம்:

ராசிக்கு குருபார்வை இருந்து உங்கள் அந்தஸ்து, கௌரவத்தை மேம்படுத்திக் காட்டும் மாதம் இது. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் அனைத்து மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அவரவர் வயதுக்கேற்ற திருப்புமுனைகள் இப்போது நடக்கும். நடப்பவை அனைத்தும் உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் நீங்கள் மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பிக்கும் மாதம் இது. அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் மாதம் இது. பூர்வீகசொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்துவேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும்.

வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. இதுவரை இருந்து வந்த மிகச்சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித்தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளை தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும். புதியகிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.

கும்பம்:

கும்பநாதன் சனிபகவான் பத்தில் இருக்கும் நிலையில் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் இந்தமாதம் லாபவீட்டில் இருப்பதால் ராசியும் தொழிலும் பலம் பெறுகிறது. மேலும் இந்த மாதம் புதன் உச்சம் பெற்ற நிலையில், சுக்கிரனும் ஆட்சி பெறுவது நல்லஅமைப்பு. என்பதால் புரட்டாசி மாதம் கும்பத்திற்கு நன்மைகள் கூடுதலாக இருக்கும் என்பதோடு தொட்டது துலங்கும் மாதமாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.

மனம் ஒருநிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் சண்டை போட வேண்டாம். நிதானம் தேவை. வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவனஅமைப்புகள் நல்லலாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.. ஏழுக்குடையவன் எட்டில் மறைவதால் வாழ்க்கைத்துணை மூலம் சங்கடமான விஷயங்களும் விரயங்களும் இருக்கலாம்.

அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இந்தமாதம் இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

மீனம்:

ராசிநாதன் குருபகவான் ஏற்கனவே ராசியை பார்த்து மேம்படுத்தி மீனராசிக்கு நன்மைகளைத் தந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு யோகாதிபதியான செவ்வாயும் புரட்டாசிமாத ஆரம்பத்திலேயே நல்லவைகளை செய்யும் இடத்திற்கு மாறுவதால் கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா? என்பதைப் போல மீனத்தினர் இரட்டிப்பு லாபம் பெறும் மாதமாக இது இருக்கும். இதுவரை தடங்கலாகிக் கொண்டிருந்த அனைத்தும் தீர்ந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மாதமாக இது இருக்கும்.

தசம அங்காரா எனும் நிலையில் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் வலுவாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற இனங்களில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். ராசியை செவ்வாய் பார்ப்பதால் எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிருங்கள். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத்தொடங்கி நல்லபடியாக மீண்டு வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு நன்மைகள் உண்டு.

No comments :

Post a Comment