Monday, 19 September 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (19.9.16 - 25.9.16)

மேஷம்:

வார ஆரம்பமே நான்கிற்குடைய சந்திரன் ராசியில் அமர்ந்த நிலையில் ஆரம்பிப்பதால் இந்தவாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு எதிலும் நிதானமான பலன்கள் நடக்கின்ற வாரமாக இருக்கும். கையில் இருந்த சேமிப்பு கரையும் வாரம் இது. பணவரவும் சுமாராகத்தான் இருக்கும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவாரம் நடக்கும்.

கிரகநிலைகள் சாதகமற்ற அமைப்பில் இருப்பதால் சிலருக்கு மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. குறிப்பிட்ட சிலர் சாமியாவது பூதமாவது நான் உழைத்தால் எனக்குச் சோறு என்பீர்கள். என்னை மட்டும் ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார் என்று நீங்கள் நினைக்கின்ற நேரம் இது. இளையவர்களுக்கு இருக்கும் வேலையில் மன அழுத்தம் உண்டு. எல்லா சோதனைகளும் இன்னும் கொஞ்ச காலம்தான்.

சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம்.

ரிஷபம்:

ராசிநாதன் ஆறில் இருந்தாலும் ஆட்சிபெற்று, ராசியை சனி பார்த்து ஆரம்பிக்கும் வாரம் இது. சுக்கிரனின் வலுவால் தொழிலிலும், அலுவலகத்திலும் இருக்கும் பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள் என்பதால் தொல்லைகள் இல்லாத வாரம் இது. பூர்வீகச்சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

சிவப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், விளையாட்டுத்துறையினர், ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டும் துறையினருக்கு தனலாபம் உள்ள வாரம் இது. கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். எவரையும் நம்ப வேண்டாம்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் தனக்கு நட்பு வீடாக நினைக்கும் இடமாக சகாயஸ்தானத்தில் தனது கேந்திர வீட்டிற்கு பனிரெண்டாமிடத்தில் அமர்ந்திருப்பதால் இந்த வாரம் உங்களுடைய தனித்திறமைகள் மற்றவர்களால் அடையாளம் காணப்படும் சம்பவங்கள் நடைபெறும் வாரமாக இருக்கும். வேலையில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரம் செழிப்பாக நடக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும்.

எந்த ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து உங்களுக்கு சந்தோஷம் தரும் வாரமாகும் இது. வாழ்க்கைத்துணை மூலம் இந்த வாரம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள். சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தவாரம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். ஒரு சிலருக்கு நீண்டகாலமாக நிலுவையில் இழுத்துக் கொண்டிருந்த கடன் தொகையோ சம்பள தொகையோ இந்தமாதம் நல்லபடியாக செட்டில் ஆகி கைக்கு கிடைக்கும்.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் பத்தில் இருந்து அடுத்து பதினொன்றாம் இடத்தில் உச்சமும் பெறுவதால் கடகராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அருகில் இருக்கும் வாரமாக இது இருக்கும். ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் மற்றும் டீம் லீடர்கள் போன்றவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் உங்களுக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு.

எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான். வருமானம் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும்.

தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளில் குறைகள் இருக்காது. மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் குருவுடன் இணைந்து பலம் பெற்ற நிலையில் வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் நிலை கொள்வதால் இந்தவாரம் சிம்மத்திற்கு கெடுபலன் எதுவும் சொல்வதற்கு இல்லை. ராசிநாதன் வலுவால் ராசியை பார்க்கும் சனியின் பார்வை மட்டுப்படும் என்பதாலும் இந்த வாரம் நல்ல வாரமே. அதேநேரம் இரண்டில் இருக்கும் குருவின் ஆறாமிடப்பார்வை நண்பர்களை விரோதியாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம். வீண்பகை வரலாம்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும். கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதால் அனைத்திலும் கவனம் தேவை. வேலைமாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இருக்கும்.

குறிப்பிட்ட சில பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். பனிரெண்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலைவிஷயமாக வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிதுகாலம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரப்படக் கூடாது.

கன்னி:

வார ஆரம்பமே சந்திரன் எட்டில் மறைந்து சந்திராஷ்டம நாளாக ஆரம்பிக்கிறது. 19-ந்தேதி அதிகாலை 1 மணி முதல் 21-ந்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள், அவசரமான மாற்றங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம். அதேநேரம் ராசிநாதன் புதன் வக்ர நிவர்த்தி அடைவதாலும் பாக்கியாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருப்பதாலும் துன்பங்கள் இல்லாத வாரம் இது.

வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவும் வாரமாக இது இருக்கும். ஆறில் இருக்கும் கேதுபகவான் உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் இந்த வாரம் லாபம் அடைவீர்கள். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள்.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இதுவரை தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு இந்தவாரம் அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்கள் சிறப்புப் பெறுவீர்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே வலுவாக இருப்பதும் இதுவரை ராசிக்கு இரண்டில் இருந்து உங்கள் முன்னேற்றத்தை தடுத்தும் உங்களுக்கு மனக்குழப்பத்தை தந்து கொண்டும் இருந்த செவ்வாய் மாறி விட்டதாலும் துலாம்ராசிக்காரர்கள் இனிமேல் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள் என்பது உறுதி. மிக முக்கியமாக இளைஞர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றி இதுவரை இருந்து வந்த இனம் தெரியாத மனக்கலக்கம் இனிமேல் இருக்காது. நம்பிக்கை பிறக்கும்.

ஏழரைச்சனி இன்னும் முடியாததால் எந்த ஒரு விஷயமும் நீண்டமுயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் உங்களுக்கு கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் விரக்தி ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது. மூன்றாமிடத்தில் இருக்கும் செவ்வாயால் உங்களின் மனதைரியம் அதிகரித்து எதையும் சமாளிக்கும் ஆற்றல் இந்தவாரம் முதல் உண்டு.

ஆறு பதினொன்றுக்குடையவர்கள் பனிரெண்டாமிடத்தில் இணைவதால் எப்படி இந்த வருமானம் வந்தது என்று அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத பணவரவு இந்தவாரம் கிடைக்கும். 21-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் 23-ந்தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் இதுவரை சனியுடன் இருந்த நிலை விலகி தனக்கு மிகவும் பிடித்தமான குருவின் வீட்டில் அமர்ந்து, ஐந்து பத்திற்குடைய சூரியனும் குருவும் லாபஸ்தானத்தில் சேர்ந்திருப்பதால் இந்தவாரம் விருச்சிகத்திற்கு ஏழரைச் சனியின் பாதிப்பு குறைந்து அனைத்துவித நன்மைகளையும், மேன்மைகளையும் உங்களுக்கு செய்யும் என்பதில் சந்தேகமில்லை. கூடுதலாக சிலருக்கு வீடு, வாகன விஷயங்களில் மாறுதல்களும், புதியவைகளும் இப்போது இருக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் சனியினால் நேரடியாக கஷ்டப்படுவதோடு விருச்சிக ராசிக்காரர்களை கணவன் மனைவி, குழந்தைகளாகக் கொண்டவர்களும் தற்போது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். விருச்சிகம் இருக்கும் வீட்டில் வேதனைதான் மிச்சம் என்ற நிலைமை இப்போது இருந்து வருகிறது. ஆண்டி முதல் அரசன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. எல்லாத் துன்பங்களும் இன்னும் சில நாட்களில் ஒழிந்து நிம்மதியாக இருக்கப் போகிறீர்கள். கவலை வேண்டாம்.

23-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் 25-ந்தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட நாட்களில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. எவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சண்டை வந்தாலும் ஒதுங்கி போவது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரிதாக ஆசைப்பட வேண்டாம். எதிலும் நேர்மையாக இருங்கள். குறுக்குவழி விஷயங்கள் இப்போது கை கொடுக்காது. உயிர் நண்பன் என்றாலும் யாரையும் நம்ப வேண்டாம்.

தனுசு:

தர்மகர்மாதிபதிகள் சூரியனும், புதனும் பரிவர்த்தனை யோகத்தில் வலுப்பெற்றாலும், ராசிநாதன் குருபகவான் பத்தில் அமர்ந்து பலவீனமாவதும், பத்துக்குடைய புதன் ராகுவுடன் இணைவதும் ஒரு விசித்திரமான கணிக்கச் சிரமமான கிரகநிலை இப்போது தனுசுக்கு இருப்பதால் இந்த வாரம் முழுவதும் உங்களை நீங்களே புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கும் வாரமாக இது இருக்கும். கணவன் மனைவி உறவில் கருத்துவேறுபாடுகள் தோன்றும் என்பதால் இந்த வாரம் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் காட்டினாலும் இன்னொருவர் அதைப் புரிந்துகொண்டு பணிந்து போவது ஒன்றும் கௌரவக்குறைச்சல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் இந்தவாரம் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம்.

ஆறுக்குடையவன் லாபஸ்தானத்தில் ஆட்சியாகி உங்களுடைய பாக்கெட்டில் கைவைத்து வருமானக்குறைவு ஏற்படுத்தி பொருளாதார சிக்கல்களை உண்டு பண்ணினாலும் ராசிநாதனின் வலுவால் அனைத்தையும் சமாளிப்பீர்கள் என்பது உறுதி. செவ்வாய் ராசியில் வலுவுடன் இருப்பதால் பேச்சில் நிதானத்தைக் காட்டுங்கள். காரணமின்றி கோபம் வரும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

மகரம்:

மகரத்திற்கு தொட்டது துலங்கும் நல்லகாலம் ஆரம்பித்திருக்கிறது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் வார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதோடு உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் மகரராசிக்கு திருப்பு முனையான வாரமிது.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இப்போது உங்கள் மனம் போல் நடக்கும். பணவரவுக்கு இருந்த தடைகள் நீங்கி இனிமேல் சரளமாக பணம் கிடைக்கத் துவங்கும். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும் தொழில் சிறக்கும்.

கும்பம்:

கும்பராசி இளைய பருவத்தினத்தினர் சிலருக்கு மாற்றங்களுக்கான ஆரம்பம் ஆரம்பிக்கிறது. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு போவதற்கான நிகழ்வுகள் இப்போது இருக்கும். இந்தவாரம் உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். சகாயஸ்தானாதிபதி லாபத்தில் இருப்பதால் கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

கும்பராசிக்காரர்கள் கடுமையான உழைப்பாளிகள் மற்றும் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு பணவரவு இருக்கும். அலுவலகங்களில் நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

மீனம்:

இந்தவாரம் ஐந்திற்குடையவன் உச்சம் பெற்றும், ஒன்பதிற்குடையவன் பத்தாம் வீட்டில் அமர்ந்தும், ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்க்கும் நிலையில் கிரகநிலைகள் அமைவது பரம்பொருள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருந்தே தீரும் என்பதைக் காட்டுவதால் தயக்கம் தேவையின்றி நீங்கள் முன்னேறும் வாரம் இது. இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள்.

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை நன்றாக இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் குருபகவான் வருமானங்களைத் தருவார்.

No comments :

Post a Comment