Monday, 12 September 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (12.9.16 முதல் 18.9.16 வரை)

மேஷம்:

எட்டில் இருக்கும் ராசிநாதன் செவ்வாய் இந்த வாரம் விலகி குருவின் வீடான ஒன்பதாமிடத்திற்கு மாறுவதால் மேஷராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தமான தொழில்நிலைமைகளும், எதிலும் ஒரு முடிவெடுக்க முடியாமல் தள்ளி வைத்துக்கொண்டே வந்தவைகளும் ஒரு முடிவுக்கு வந்து நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படும் வாரமாக இது இருக்கும்.

குருபகவான் ஆறாம் வீட்டில் இருப்பதால் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இளைய பருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது.

வலிமை உள்ளதுதான் வாழும் எனும் அடிப்படையில் செழுமையான நம்பிக்கை மனம் கொண்ட உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும்.

ரிஷபம்:

கடந்த சில மாதங்களாக ராசியை செவ்வாய் பார்த்து வந்த அமைப்பு இந்த வாரம் முதல் விலக இருப்பதால் ரிஷபராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற அமைப்புகள் விலகி, இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் நீங்கும் வாரம் இது. குறிப்பாக மனதிற்கு பிடிக்காத செயலை நிர்ப்பந்தத்தின் பெயரில் செய்து கொண்டிருந்தவர்கள் இனிமேல் சுயமாக முடிவெடுத்துச் செயல்படுவீர்கள்.

பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் உங்களின் உண்மைநிலை புரிந்து உங்களுக்கு நண்பராக இப்பொழுது மாறுவார்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். 

மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இந்த மாதம் இல்லை. வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை.

மிதுனம்:

ராசிக்கு செவ்வாய் பார்வை விலகுவதால் இதுவரை மிதுனராசிக்காரர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்த சம்பவங்களும், நேற்றுவரை நீங்கள் வெறுப்படையும்படி நடந்து கொண்டிருந்தவர்களும் உங்களை விட்டு விலகும் வாரம் இது. மேலும் இதுவரை சகோதர, சகோதரி விஷயங்களில் சங்கடங்களை அனுபவித்தவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் வாரமாகவும் இது இருக்கும்.

செலவுகள் நிறைந்த வாரமாக இது இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி மூலமும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலமும் செலவுகள் இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன. பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். 

சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். நல்லவாகனம் வாங்குவீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். முக்கியமான துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. மருத்துவ செலவு இருக்கும்.

கடகம்: 

வாரம் முழுவதும் ராசிநாதன் நல்ல அமைப்புகளில் இருப்பதாலும் யோகக் கிரகங்கள் வலுவாக இருப்பதாலும் இந்த வாரம் கடக ராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள வாரமாக இருக்கும். மூன்றாமிடத்தில் இரண்டு சுபக்கிரகங்கள் இருப்பதால் எதையும் சமாளிக்கும் உங்களின் மனோதைரியம் கூடுதலாகி நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு இந்த வாரம் தீர்வு காண்பீர்கள்.

செவ்வாய் ஐந்தாமிடத்திலிருந்து மாறிவிட்டதால் இனிமேல் கடக ராசிக்கு எவ்வித கெட்ட பலன்களும் இன்றி முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஒரு அச்சாரமான வாரமாக இது அமையும். வழக்கு காவல் நிலையம் என அலைந்து கொண்டிருப்பவர்கள் இனி சாதகமான திருப்பங்களை காண்பீர்கள். தீர்ப்பு சாதகமாக அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும்.

பெண்களால் லாபம் உண்டு. ஒரு சிலருக்கு மூத்த சகோதரி உதவுவார். சிலர் தங்கை கேட்கும் பொருளை வாங்கித் தருவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் வலுவாக ராசியில் இருப்பதும் தனலாபாதிபதியான புதபகவான் ராகுவுடன் இணைந்து ராசியில் சுபத்துவமாக இருப்பதும், இந்தவாரம் சிம்மராசிக்காரர்களுக்கு வேற்று, மத, இன, மொழி நண்பர்களால் நன்மைகளும், பொருளாதார லாபங்களும் கிடைக்கும் என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு தந்தை வழி நன்மைகளும் இந்த வாரம் உண்டு.

வாரம் முழுவதும் சந்திரன் சாதகமான அமைப்பில் இருப்பதால் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதோடு உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் சிம்மராசிக்கு திருப்புமுனையான வாரமிது.

பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். பணம் வருவதற்கு பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும்.

கன்னி:

பத்தாமிடத்தை இதுவரை பார்த்து பலவீனமாக்கிக் கொண்டிருந்த செவ்வாயின் பார்வை இந்த வாரம் முதல் விலகுவதாலும், ராசியில் இரண்டு சுபக்கிரகங்கள் கூடியிருப்பதாலும் இந்த வாரம் கன்னிராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள், விரையங்கள் இருந்தாலும் தொழில்ரீதியான வருமானங்கள் வந்து அனைத்தையும் சரிக்கட்டும் வாரமாக இருக்கும்.

முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் தடைகளையும் எதிர்மறை விஷயங்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்களின் தொழில் சிறக்கும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும். 

குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும்.

துலாம்:

கடந்த சில மாதங்களாக இரண்டாம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பிடிக்காத செயல்களைச் செய்ய வைத்துக்கொண்டிருந்த செவ்வாய் இந்த வாரத்தில் விலகுவதால் துலாம் ராசிக்காரர்களின் வாக்குஸ்தானம் வலுவாகி இதுவரை உங்களுக்குப் பண விஷயங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும் வாரமாக இது இருக்கும்.

மனக்குழப்பத்தை தந்து கொண்டிருந்த செவ்வாய் விலகிவிட்டதால் துலாம் ராசிக்காரர்கள் இனிமேல் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்கம்பத்தை வேகமாகத் தொடப் போகிறீர்கள் என்பது உறுதி. ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள்.

உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு.

விருச்சிகம்:

இரண்டு பெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் உங்கள் ராசியிலேயே இருந்துவந்த காரணத்தினால் இதுவரை சிரிக்கவும் மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்த விருச்சிகராசிக்காரர்கள் இந்த வாரத்துடன் செவ்வாய் விலகுவதால் நன்மைகள் நடப்பதைக் காண ஆரம்பிப்பீர்கள். குறிப்பாக கடுமையான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம் இனிமேல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

விருச்சிக ராசிக்கு இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம்போல் நிறைவேறும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். எதிலும் யோசிக்காமல் அகலக்கால் வைக்க வேண்டாம். 

பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும்.

தனுசு:

ராசியில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் முணுக்கென்றவுடன் தனுசு ராசிக்காரர்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்து அனைவரையும் பகைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பிப்பீர்கள் என்பதால் இன்னும் சில வாரங்களுக்கு நீங்கள் கோபத்தை தள்ளி வைக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

தனுசுக்கு சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. அதிகமுயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் எல்லா வேலைகளையும் முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள்.

பெண்களுக்கு அலுவலகங்களில் நல்ல பலன்கள் நடக்கும். ஆண்களால் தொந்தரவுகள் இருக்காது. மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல்எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள் போன்றோருக்கு ஒரு பெரிய தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

நன்மை தர வேண்டிய கிரக அமைப்புகள் மகரராசிக்கு வலுவான நிலைகளில் இருப்பதால் இந்தவாரம் உங்களுக்கு நல்ல வாரமாக இருக்கும். கோடிகளில் புரளும் தொழில்அதிபர்கள் முதல் கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் வரை மகரராசிக்கு நல்லமாற்றங்கள் வரும் என்பதால் சிறந்த வாரம் இது.

இந்தவாரம் உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும். வாரம் முழுவதும் உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். இளையபருவத்தினருக்கு எதிர்கால நன்மைகளுக்கான அடித்தளம் இப்போது உண்டு. பெண்களுக்கு நல்லவாரமாக இது அமையும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.. கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும்.

கும்பம்:

பெரியசோதனைகள் எதுவும் இல்லாத வாரம் இது. அதேநேரத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்று சொல்லவும் கிரகநிலைகள் இடம் தரவில்லை. ஐந்திற்குடையவன் ஏழில் இருப்பதும் ராசிநாதனிடம் இருந்து செவ்வாய் விலகுவதும் இந்தவாரம் நன்மை தரும் என்பதால் கெடுதல்கள் எதுவும் கும்பத்திற்கு இல்லை.

ராசிக்கு இருந்து வந்த செவ்வாயின் பார்வை விலகி செவ்வாய் பதினொன்றாமிடத்திற்கு மாறியுள்ளதால் இளைய பருவத்தினத்தினருக்கு மாற்றங்கள் ஆரம்பிக்கிறது. சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு போவதற்கான நிகழ்வுகள் இந்தவாரம் இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.

நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. கைப்பொருள் திருட்டுப் போகுதல், பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் நெருடல்கள் இருக்கலாம்.

மீனம்:

ராசியை இரண்டு சுபக்கிரகங்கள் பார்ப்பதோடு இந்தவாரம் பத்தாமிடத்தில் செவ்வாய் வந்து அமர்வதால் கடந்த சிலமாதங்களாக தொழிலில் சாதிக்க முடியாத மீனராசிக்காரர்களுக்கு நல்லதிருப்பங்கள் இந்தவாரம் ஏற்பட்டு பொருளாதார மேன்மை ஏற்படும் வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு ஆயிரம் அல்லது லட்சங்களில் இந்த வாரம் பணம் வரவு ஏற்படும்.

மீனத்திற்கு தொட்டது துலங்கும் யோககாலம் ஆரம்பித்திருக்கிறது. “எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது உங்களுக்கு பொருந்தும் என்பதால் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இருக்கும். சிலருக்கு தாயார்வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலாகி வந்தவர்களின் திருமணம் கூடி வரும்.

No comments :

Post a Comment