Tuesday, 9 August 2016

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளுக்கான குருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள்

மேஷம் :

மேஷராசிக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குருபகவான் ஆறாமிடத்திற்கு வருகிறார். கடந்த ஒரு வருடகாலமாக அவர் சிறப்பான இடமாக சொல்லப்படும் ஐந்தாமிடத்தில் இருந்தார். ஐந்தில் இருந்த குருபகவானால் நீங்கள் சென்ற வருடம் அதிக நன்மைகளை அடைந்திருக்க வேண்டும். ஆனால் பிறந்த ஜாதகவலு உள்ள சில மேஷத்தினரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு சென்ற வருடத்தில் நல்லபலன்கள் நடைபெறவில்லை.

கோட்சாரரீதியில் இன்னொரு முக்கியகிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமச்சனியாக அமர்ந்து உங்களுக்கு நடக்க இருக்கும் நற்பலன்களை தடுத்து கொண்டிருக்கிறார். ஒருவருக்கு ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கும் காலங்களில் மற்ற கிரகங்கள் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருந்தாலும் கூட நல்லபலன்கள் நடக்காது. இதற்கு குருபகவானும் விதிவிலக்கு அல்ல.

எனவே ஐந்தாமிடத்தில் இருந்த குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தர இயலாது போனதைப் போல தற்போது ஆறாமிடத்திற்கு வரும் குருபகவானால் உங்களுக்கு தீமைகளையும் தர இயலாது. எனவே சனிபகவானுக்கு முதலிடம் கொடுத்து அவருக்குரிய பரிகாரங்களையும், அடுத்து குருபகவானுக்குரிய பரிகாரங்களையும் மேஷராசிக்காரர்கள் செய்து கொள்வது நல்லது.

மேஷத்தினர் அஷ்டமச்சனியின் தாக்கத்தினைக் குறைத்து சனியின் கெடுபலன்களில் இருந்து காத்துக்கொள்ள அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் அருள்பாலிக்கும் சிவனின் அம்சமான காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. இதற்கு நிகரான இன்னொரு பரிகாரமாக பழமையான பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் ராமபக்தனான ஶ்ரீஅனுமனின் பாதம் பணிந்து நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் ஆதிக்கத்தில் இருந்து உங்களை விடுவிக்கும்.

மேற்கண்ட இருவர்களில் காலபைரவர் சனியின் குருநாதர் என்பதால் குருவை மீறி சிஷ்யன் ஒன்றும் செய்ய முடியாது என்ற அடிப்படையிலும் இன்னொருவர் சனியால் வெல்ல முடியாத ஶ்ரீஅனுமன் என்பதாலும் இந்த பரிகாரத்தைச் செய்ய ஞானிகள் சொன்னார்கள்

இவர்கள் இருவரையும் வழிபடும்போது “அய்யனே... உங்கள் நிழலில் ஒண்டிக் கொண்டு உங்களைச் சரணடைகிறேன். உங்களை சனிபகவானால் ஒன்றும் செய்ய முடியாததைப் போல என்னையும் சனியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுங்கள்.” என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் இருந்து தப்பிக்க முடியும்.

குருவுக்கான பரிகாரமாக ஏதேனும் ஒரு மாதத்தில் வரும் உங்களுடைய ஜென்ம நட்சத்திரமன்று கும்பகோணத்திற்கு அருகில் உள்ள குருவிற்கான முதன்மை ஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வழிபடலாம். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் செந்திலாண்டவன் சூரபத்மனை முறியடித்த வெற்றிஸ்தலமான அலைகள் சீராட்டும் திருச்செந்தூருக்கு ஏதேனும் ஒரு செவ்வாய் அல்லது வியாழக்கிழமையில் சென்று வழிபடலாம். 

ரிஷபம் :

கடந்த இரண்டு வருடங்களாக ரிஷபராசிக்காரர்களுக்கு குருபகவானால் எவ்வித நன்மைகளும் கிடைக்க இயலா வண்ணம் கோட்சார நிலைமைகள் இருந்து வந்தன. வேதஜோதிடத்தில் சாதகமற்ற பலன்களை குருபகவான் தரும் இடங்களாக சொல்லப்பட்ட மூன்று, நான்காமிடங்களில் இதுவரை குருபகவான் அமர்ந்து உங்கள் ராசியை கண்டும், காணாமலும் இருந்தார். 

அந்த நிலைமை இந்த குருப்பெயர்ச்சியுடன் நீங்கி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி தற்போது உங்கள் ராசியைப் பார்க்கிறார். இந்த நிலைமை ஒரு அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் ரிஷபராசிக்காரர்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்து நன்மைகளும் கைக்கூடும் காலம் ஆரம்பமாகி இருக்கிறது.

பிறந்தஜாதக அமைப்பில் யோக தசாபுக்திகள் நடக்கும் ரிஷபராசிக்காரர்களுக்கு பருத்தி புடவையாய் காய்த்தது போன்ற நல்ல விஷேசமான நற்பலன்கள் இருக்கும். எனவே குருபகவான் தர இருக்கும் நன்மைகளை கூட்டிக்கொள்ளும் விதத்தில் குருவின் நிறம், சுவை, தான்யம், வாகனம், போன்றவைகள் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ள வேண்டும்.

குருவிற்கான பரிகாரமாக உங்களின் ஜென்ம நட்சத்திரமன்று அன்றைய தினத்திற்கான குருஹோரை எதுவென்று தெரிந்துகொண்டு அந்த குருஹோரை நேரத்தில் அல்லது ஏதேனும் ஒரு வியாழக்கிழமை குரு ஹோரை எனப்படும் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் 2 மணி வரை. இரவு 8 மணி முதல் 9 மணி வரை குருவின் வாகனமான ஒரு யானைக்கு அந்த பெருஞ்ஜீவனுக்கு என்ன உணவு பிடிக்கும் என்பதை பாகனிடம் முன்னரே கேட்டுத் தெரிந்துகொண்டு அதை உங்கள் கையால் கொடுத்து அதனிடம் ஆசிகளைப் பெறுவது குருவின் நன்மைகளை அதிகப்படுத்தும்.

மிதுனம் :

மிதுனராசிக்கு குருபகவான் இம்முறை மூன்றாமிடத்திலிருந்து நான்காமிடத்திற்கு மாறுகிறார். சென்றவருடம் அவர் இருந்த மூன்றாமிடம் உங்களுக்கு நன்மைகளைத் தரும் ஸ்தானம் அல்ல. அதுபோலவே இப்போது மாறும் நான்காமிடமும் குருவிற்கு யோகம் தரும் இடமாக நமது மூலநூல்களில் குரிப்பிடப்படவில்லை.

ஆனால் மூன்றாமிடம் மறைவுஸ்தானம் என்பதால் கெடுபலன்களைத் தரும் இடம். நான்காமிடம் கேந்திரஸ்தானம் என்பதால் கெடுதல்களைத் தராத இடம். எனவே சென்றவருடத்தை விட இந்தமுறை மிதுனத்திற்கு குருபகவான் தரும் நன்மைகள் கூடுதலாகவே இருக்கும். அதேநேரத்தில் சதாசர்வகாலமும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டாற்போல சுற்றிக்கொண்டே இருப்பீர்கள். உங்களை அலையவைத்து அதன்மூலம் குருபகவான் உங்களுக்கு நன்மைகளைத் தருவார்.

குருபகவானால் கிடைக்க இருக்கும் நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள ஒருமுறை அகத்தியர் வந்து வழிபட்ட பிரசித்திபெற்ற குருவருள் ஸ்தலமான சென்னை அம்பத்தூர் அருகே பாடி என்ற இடத்தில் உள்ள திருவலிதாயம் என்று அழைக்கப்படும் ஈஸ்வரன்கோவிலில் வழிபடுவது இம்முறை உங்களுக்கு நல்லவைகளைத் தரும். குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி அன்று செல்வது மிகச்சிறப்பு.

இந்த ஸ்தலத்திற்குச் சென்று வழிபடமுடியாத நிலையில் உள்ளவர்கள் உங்களின் ஜென்மநட்சத்திரத் தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின் அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து, புதுமஞ்சள் துணியில் முடித்து பூஜையறையில் வைத்து வியாழன்தோறும் அதற்கு கொண்டைக்கடலை மாலையிட்டு, இரண்டு மஞ்சள் வாழைப்பழம் மற்றும் லட்டு படைத்து வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத் தரும்.

கடகம் :

கடகராசிக்கு இம்முறை மூன்றாமிடத்திற்கு குருபகவான் மாறுகிறார். இந்த அமைப்பில் அவர் தன்னுடைய சொந்தவீடான பாக்யஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் வீட்டை தன்னுடைய நேர்பார்வையால் சுபப்பார்வை பார்ப்பார். மற்ற ராசிகளுக்கு மூன்றாமிடத்தில் இருக்கும்போது தரும் சாதகமற்ற பலன்களை கடகராசிக்கு அவர் தருவதில்லை. அதற்கு அவரே கடகத்திற்கு பாக்கியாதிபதி என்பதும் பெயர்ச்சியின்போது அந்த ஸ்தானத்தைப் பார்ப்பதும் ஒரு காரணம்.

இம்முறை குருவின் பலன்களை சாதகமாக மாற்றிக் கொள்ள கடாராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பது மிகச்சிறந்த நன்மைகளைத் தரும். வேளாவேளைக்கு சாப்பிட்டே ஆகவேண்டிய சர்க்கரை நோயாளிகள் போன்றவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களின் ஜன்மநட்சத்திரம் அல்லது ஏதேனும் ஒரு வியாழக்கிழமை அல்லது வியாழனும் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம் விசாகம் பூரட்டாதி ஆகியவை இணைந்து வரும் நாட்களில் குருபகவானுக்கு முதன்மை அருள் ஸ்தலமாக குறிப்பிடப்படும் கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி மற்றும் பெரியபுராணம் தந்த குன்றத்தூர்க் கோமான் சேக்கிழார் பெருமானால் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட வட ஆலங்குடி என அழைக்கப்படும் சென்னை போரூரில் அமைந்திருக்கும் ராமநாதீஸ்வரர் ஆலயம் மற்றும் செந்திலாண்டவன் ஞானகுருவாக அருள்பாலிக்கும் திருச்செந்தூர் போன்ற குருஸ்தலங்களுக்கு சென்று ஆராதிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டங்களைத் தரும்.

நாளை சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் ராசிகளுக்கான பரிகாரங்களைக் காணலாம்.

No comments :

Post a Comment