Thursday, 11 August 2016

தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பரிகாரங்கள் :

தனுசு :-

தனுசு ராசிக்காரர்களுக்கு ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் தற்போது பத்தாமிடத்திற்கு மாறுகிறார். ஏற்கனவே அவர் இருந்து வந்த பாக்கியஸ்தானத்தில் ராசிநாதன் ராசியைப் பார்க்கிறார் என்ற வலுவான அமைப்பின்படி தனுசுராசிக்கு குருபகவானால் நல்லபலன்களே நடந்து வந்தன.

தற்போது பத்தாமிடத்திற்கு குரு மாறுவதால் “பத்தில் இருக்கும் குரு பதவியைப் பறிப்பான்” என்ற பழமொழிப்படி இந்த குருப்பெயர்ச்சி வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளைப் பாதிக்குமோ என்ற கவலை தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கலாம். ஆனால் தனுசுக்கு குருபகவானே அதிபதி என்பதாலும் தன் வீட்டிற்குத் தானே கெடுபலன்களை ஒரு கிரகம் செய்யாது என்பதன்படியும் மேற்கண்ட பழமொழி தனுசுக்குப் பொருந்தாது.

குருபகவான் பார்க்கின்ற வீடுகள் பலம் பெறும் என்ற அடிப்படையின்படி இம்முறை தனம், வாக்கு, குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீடும், வீடு, வாகனத்தை குறிக்கும் நான்காம் வீடும், கடன், நோயை குறிக்கும் ஆறாம் வீடும் வலுப்பெறுவதால் மேற்கண்ட வீடுகளின் பலன்களை குருபகவான் இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்குச் செய்வார்.

இந்த பெயர்ச்சியின் மூலம் உங்களுக்குப் பணவரவு நன்றாக இருக்கும். நல்ல வருமானம் வரும். நன்கு சம்பாதிப்பீர்கள். கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள். ஹவுஸ்சிங் லோன் போட்டு பிளாட் வாங்குவீர்கள். இளையவர்களுக்கு திருமணம் நடக்கும். நிரந்தரமான தொழில் அமைப்புகள் சிலருக்கு உருவாகும்.

தனுசு ராசியினர் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை அதிகப்படுத்திக் கொள்ள பதினாறு வியாழக்கிழமைகள் தொடர்ந்து பழமையான சிவன் கோவிலில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு பதினாறு லட்டினை நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டு பின் அங்கேயே தானம் செய்வது குருவின் வலிமைக் குறைவை நிவர்த்தி செய்யும். ஏழரைச்சனியின் ஆரம்ப கட்டமான விரயச்சனி காலத்திலும் நீங்கள் இருப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

மகரம் :-

மகரராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் அஷ்டமக்குருவாக அமர்ந்து கடந்த ஒரு வருட காலமாக அனைத்திலும் பின்னடைவுகளையும், நஷ்டங்களையும், தேக்க நிலைமைகளையும் கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் தற்போது மிக நல்ல இடமான பாக்கியஸ்தானம் என்ற ஒன்பதாமிடத்திற்கு மாறி இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளைத் தர இருக்கிறார்.

இந்த பெயர்ச்சியின் மூலமாக நல்ல நன்மைகளை அனுபவிக்க இருக்கும் ராசிகளில் மகரமும் ஒன்று என்பதால் இதுவரை உங்களுக்கு நடைபெறாமல் இருந்த அனைத்து நல்ல காரியங்களும் தற்போது மிக விரைவாக நடந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் என்பது உறுதி.

இளைய பருவத்தினருக்கு இந்த பெயர்ச்சியின் மூலம் இதுவரை நடக்காமல் இருந்த திருமணம், நல்லவேலை கிடைத்தல், தொழிலில் கால் ஊன்றுதல், குறைவற்ற வருமானம் பெறுதல் போன்ற பலன்கள் கண்டிப்பாக உண்டு. நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த ஒரு வருடமாக எந்த விஷயங்களில் பிரச்சினைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் தற்போது நீங்கி சந்தோஷமான நிகழ்வுகள் குடும்பத்தில் நடக்க ஆரம்பிக்கும்.

மகரராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் அவரவர் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் செய்யும். உங்கள் ராசிநாதனான சனியும் தற்போது சாதகமான அமைப்பில் இருப்பதால் நன்மைகள் கூடுதலாகவே இருக்கும் என்பது உறுதி.

எட்டாமிடத்தில் ராகு அமர்ந்து நன்மைகளை தடுத்துக் கொண்டிருப்பதால் ஒருமுறை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஸ்ரீ காளஹஸ்தியில் தங்கி எல்லாம் வல்ல இறைவன் காளத்திநாதனை தரிசித்து தடைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு வியாழக்கிழமை அன்றோ அல்லது புனர்பூசம் விசாகம் பூரட்டாதி போன்ற குருவின் நட்சத்திர நாள்களிலோ ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், தென்குடித்திட்டை போன்ற குருஸ்தலங்களில் வழிபடலாம். தென் மாவட்டத்தவர்கள் செந்திலாண்டவனை தரிசிப்பதன் மூலம் எல்லா வளமும் நிறைவும் பெறுவீர்கள்.

கும்பம் :-

கும்பராசிக்காரர்களுக்கு தற்போது ஏழாமிடத்தில் இருக்கும் குருபகவான் இந்த பெயர்ச்சியின் மூலம் எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டமக்குருவாக செயல்படப் போகிறார். எட்டாமிடத்து குரு என்றவுடன் பயந்து விட வேண்டாம். உங்களுக்குடைய ராசிக்கு நல்லபலன்களை தருவதற்கு விதிக்கப்படாத ஆதிபத்திய விசேஷம் இல்லாதவரான குருபகவான் எட்டில் மறைவதால் உங்களுக்கு நன்மைதானே தவிர தோஷம் எதுவும் கிடையாது.

“கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” என்கிற ஜோதிட மொழியின்படி கும்பராசிக்கு குருபகவான் மறைவு ஸ்தானங்களில் வரும் போது நன்மைகளை மட்டுமே செய்வார். எனவே எட்டாமிடத்து குருவால் கெட்டவைகள் எதுவும் நடந்து விடுமோ என்று கவலைப்பட தேவையில்லை.

அதேநேரத்தில் மறைவு ஸ்தானங்களில் ராஜகிரகங்கள் வரும் போது முக்கிய வாழ்க்கை மாற்றங்களைக் கொடுக்கும் என்பதால் தற்போது இருக்கும் நிலையை விடுத்து வீடு மாற்றம், தொழில் மாற்றம், தொழிலிடம் மாற்றம், ஊர்மாற்றம் போன்ற பலன்கள் கும்பராசிக்கு தற்போது நடைபெறும்.

இன்னொரு முக்கிய பலனாக எப்போதும் நீங்கள் அலைந்து திரிய வேண்டி இருக்கும். கையில் சாப்பாடு இருந்தும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது. காலில் சக்கரம் கட்டினாற்போல ஓடிக்கொண்டும், உழைத்துக் கொண்டும் இருப்பீர்கள். ஆனால் உழைப்பிற்கேற்ற ஊதியம்தான் இருக்காது.

ஏழில் ராகு, எட்டில் குரு என்ற அமைப்பு இருப்பதால் குருவிற்கு நிகரான பெரியோர்களின் மனத்தைக் குளிவித்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தினால் பெற்றோர் மனதை நோகடித்து விட்டவர்கள் இப்போது அதை உணர்ந்து பெற்றோரிடம் சென்று மன்னிப்புக் கேட்டு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவது குருவால் வர இருக்கும் சாதகமற்ற பலன்களை நிவர்த்தி செய்யும். வசதி உள்ளவர்கள் ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்காக தாலி வாங்கித் தரலாம்.

மீனம் :-

கடந்த சில வருடங்களாக பெரிய நன்மைகள் எதையும் அனுபவிக்காத மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கக்கூடிய குருப்பெயர்ச்சியாக இது அமைகிறது. குருபகவான் இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலைகள் மாறி தற்போது ஏழாமிடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார்.

ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்க்கும் அமைப்பின்படி மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை முடங்கிப் போயிருந்த வருமான அமைப்புகள் அனைத்தும் மீண்டும் நல்லமுறையில் செயல்படத் துவங்கி எதிலும் வெற்றி கிடைக்கும் காலமாக இது இருக்கும். இதுவரை படிக்காத மாணவர்கள் படிப்பீர்கள். சரியான வேலை அமையாத இளைஞர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் அமையும்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு எந்த விஷயத்தில் இதுவரை மனச்சங்கடங்கள் இருந்து வந்ததோ அவைகள் அனைத்தும் நல்லபடியாக விலக ஆரம்பித்து இனிமேல் மீனராசிக்காரர்கள் வெற்றிப் படிக்கட்டில் ஏற ஆரம்பிப்பீர்கள்.. இதுவரை கடன்தொல்லையில் அவதிபட்டவர்கள் கடனை படிப்படியாக அடைத்து சிக்கலில் இருந்து வெளியே வருவீர்கள்.

வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் செழிப்பாக நடைபெற்று வருமானம் நன்றாக இருக்கும். திருமணவாழ்க்கையில் பிரச்னை உண்டாகி விவாகரத்திற்காக வழக்கு நீதிமன்றம் காவல்நிலையம் என்று நிம்மதியிழந்து அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வரும். இரண்டாவது வாழ்க்கை அமையும்.

உங்களின் ஜென்மநட்சத்திரம் அன்று கும்பகோணம் அருகில் உள்ள புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். மேலும் ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குருஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று அதன் பாகனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு உணவிடுவது குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை அதிகப்படுத்தும்.

No comments :

Post a Comment