Wednesday, 10 August 2016

சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்களுக்கான குருப்பெயர்ச்சி பரிகாரங்கள்

சிம்மம் :

சிம்மராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற இடத்திலிருந்து குருபகவான் விலகி பொருளாதார மேன்மைகளையும், பணவரவுகளையும் கொடுக்கக்கூடிய தனம், வாக்கு, குடும்பம் எனக்கூடிய நல்ல ஸ்தானத்திற்கு மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியில் நன்மைகளை அடைய இருக்கின்ற ராசிகளில் சிம்மமும் ஒன்று.

சிம்மத்திற்கு தற்போது அர்த்தாஷ்டமச்சனி நடந்து கொண்டிருப்பதால் சிம்மராசி இளையபருவத்தினருக்கு மனதிற்குப் பிடித்த பொருத்தமான வேலை அமைப்புகள் இல்லை. இன்னும் சிலருக்கு வேலையே இல்லை. இருக்கும் வேலை, தொழில், வியாபார அமைப்புகளிலும் முன்னேற்றம் நிம்மதி இல்லை. 

இதுபோன்ற பின்னடைவுகள் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு விலகி நல்ல பணவரவுகளும், சம்பாதிக்கும் பணத்தை சேமித்தலும், கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்ற முடிதலும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பந்தத்தின் மூலம் குடும்பம் அமைதலும் இருக்கும்.

சிம்மத்திற்கான பரிகாரமாக வயதில் மூத்தவர்களுக்கும், குருஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும், நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று மனதார நினைத்தாலும் உங்களுக்கு உதவி செய்ய முடியாமல் இருப்பவர்களுக்கும் நீங்கள் தேடிப்போய் சிறு உதவியாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்து அவர்களின் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள்.

மேலும் நல்லமார்க் வாங்கியும் படிக்க முடியாத ஏழைமாணவருக்கு கல்விக் கட்டணம் செலுத்த உதவி செய்வது, வசதிக்குறைவான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் திருமணத்திற்கு தாலி வாங்கித் தருவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

கன்னி :

கன்னிராசிக்கு வீண் அலைச்சல்களையும், மாற்றங்களையும், விரையச் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் தற்போதைய பெயர்ச்சியின் மூலம் ஜென்மகுரு அமைப்பாகி உங்கள் ராசியிலேயே அமரும் நிலை பெறுகிறார். ராசியில் இருக்கும் குருபகவான் தனது சுபப்பார்வையால் ஐந்து, ஏழு, ஒன்பது எனப்படும் ஒரு மனிதனுக்குத் தேவையான சகலத்தையும் தரும் வீடுகளைப் பார்ப்பார் என்பதால் இந்தப் பெயர்ச்சியின் மூலமாக கன்னிராசிக்காரர்களுக்கு நன்மைகளே கூடுதலாக இருக்கும்.

கடந்த சிலவருடங்களாகவே கன்னிராசிக்கு ஏழரைச்சனி நடந்து வந்ததாலும், ஏழரைச்சனி முடிந்த பின்னரும் ராசியில் ராகு நிலை கொண்டிருந்ததாலும் மனதிற்கு திருப்தியான விஷயங்கள் நடக்கவில்லை. சில கன்னிராசிக்காரர்கள் கடுமையான நம்பிக்கைத் துரோகத்தைச் சந்தித்தீர்கள். அந்த நிலைமை தற்போது நீங்கி இந்த குருப்பெயர்ச்சியில் இருந்து நீங்கள் நன்றாக இருப்பதற்கான அமைப்புகள் நடக்க துவங்கும்.

இதுவரை மணமாகாத இளையவர்களுக்கு திருமணம் நடக்கும். நிரந்தர வருமானம் இல்லாதவர்களுக்கு நல்லவேலை அமைந்து மாதம் பிறந்தவுடன் ஒரு நல்லதொகை கிடைக்கும். வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் நஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அது நீங்கி லாபம் வர ஆரம்பிக்கும்.

கன்னிராசிக்கு சிறப்பு பரிகாரமாக சென்னையில் இருப்பவர்கள் பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூரில் உள்ள மகான் பட்டினத்தார் சுவாமிகளின் ஜீவசமாதி, சைதாப்பேட்டை ரயில்நிலையம் எதிரில் உள்ள மகான் ஸ்ரீகுருலிங்கசுவாமிகளின் ஜீவசமாதி போன்ற அருட்சக்தி மிகுந்த இடங்களுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று குருவருள் பெறலாம்.

வெளிமாவட்டத்தவர்கள் தங்களின் அருகாமையில் உள்ள சித்தர்கள் ஞானிகள் அடங்கிய திருவிடங்களுக்கு வியாழக்கிழமைகளில் சென்று அங்கே தியானம் செய்வது அல்லது பக்தர்களுக்கு பணிவிடை செய்வது போன்ற தொண்டுகள் மூலம் ஜன்மகுருவை மகிழ்வித்து நன்மை பெறலாம்.

துலாம் :

துலாம்ராசியினர் தற்போது ஏழரைச்சனியின் இறுதிப்பகுதியில் இருக்கிறீர்கள். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு துலாம் ராசிக்காரர்கள் பட்ட அவஸ்தை எல்லாம் மெதுவாக விலகி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கப் போகும் விளிம்பில் இப்போது துலாத்தினர் இருக்கிறீர்கள்.

கடுமையான ஏழரைச்சனி நடக்கும்போது மற்ற கிரகப்பெயர்ச்சிகள் நல்ல அமைப்பில் இருந்தாலும் நற்பலன்களோ, கெட்ட அமைப்பில் இருந்தாலும் கெடுபலன்களையோ செய்யாது. எப்போதுமே சனியின் தாக்கமே கோட்சாரத்தில் அதிகமாக முன்னிற்கும். அதனால்தான் கடந்த வருடம் லாபஸ்தானம் எனப்படும் பதினொன்றாமிடத்து குருபகவான் எவ்வித யோகங்களையும் உங்களுக்குச் செய்யவில்லை. 50 வயது தாண்டிய இரண்டாம் சுற்று ஏழரைச்சனி நடந்த சிலருக்கு மட்டுமே நல்லபலன்கள் இருந்து வந்தன.

தற்போது செலவுகளைக் குறிக்கும் பனிரெண்டாமிடத்திற்கு குருபகவான் வருவதால் உங்களுக்கு கண்டிப்பாக அனைத்திலும் செலவுசெய்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும். அதேநேரத்தில் குருபகவான் சுபக்கிரகம் என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ப வருமானத்தையும் கண்டிப்பாகத் தருவார் என்பதால் இந்த பெயர்ச்சியில் கவலைகளுக்கு இடமில்லை.

துலாம் ராசிக்காரர்களுக்கான சிறப்புப் பரிகாரமாக குருபகவானின் உயிராற்றல் நிரம்பிய இடமாக நமது ஞானிகளால் சுட்டிக் காட்டப்பட்ட திருக்கோவில்களுக்குச் சென்று குருவின் வலுவை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சென்னையில் இருப்பவர்கள் .சேக்கிழார் பெருமான் ஆயிரம் வருடங்களுக்கு முன் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வழிபட்ட குருஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள ஸ்ரீ தட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

விருச்சிகம் :

என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் எண்பது சதவீதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் அல்லது கணவனோ, மனைவியோ, குழந்தைகளோ விருச்சிக ராசியாக இருப்பவர்கள் என்பதை அடிக்கடி எழுதிக் கொண்டிருக்கிறேன். விருச்சிக ராசி இருக்கும் வீடு கடுமையான மனச்சங்கடத்தில் இருக்கிறது என்பது ஜோதிடரீதியான உண்மை.

அதிலும் கடந்த இரண்டு மூன்றுவருடங்களாக சனியின் தாக்கத்தினால் பெரும்பாலான விருச்சிகத்தினர் அனுபவித்துக் கொண்டிருக்கும் சங்கடங்கள் எழுத முடியாதவை. சிலர் எல்லாவற்றையும் இழந்து விட்டீர்கள். விருச்சிகத்தினரின் வயது, வாழ்க்கைமுறை, அந்தஸ்து, தகுதி போன்றவைகளுக்கு ஏற்ப அவர்களை மனஅழுத்தத்திற்கு உண்டாக்கும் சம்பவங்களே நடந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு இரண்டு, மூன்று வருடங்களும் ஒவ்வொரு ராசிக்காரர்கள் சனியின் ஆதிக்கத்தினால் கஷ்டப்பட்டே ஆகவேண்டும் என்ற கோட்சார சுழற்சி முறைப்படி தற்போது விருச்சிகம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது. பிறந்த ஜாதகப்படி யோக அமைப்பை கொண்ட மிகச் சில விருச்சிகத்தினர் மட்டுமே சிக்கல்கள் இல்லாமல் இருக்கிறீர்கள்.

இந்த வருடம் முதல் விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் அனைத்தும் தீரும் அமைப்புகள் ஆரம்பமாக இருக்கிறது. ஜென்மச்சனியின் இறுதிப்பகுதியில் நுழைய இருக்கும் சனிபகவான் இனி தன்னுடைய வீரியத்தை இழந்து நீர்த்துப் போவார் என்பதால் இனிமேல் உங்களுக்கு கஷ்டங்கள் இல்லை.

இதை தற்போது லாபஸ்தானம் எனப்படும் பதினொன்றாமிடத்திற்கு மாறி உங்களுக்கு பணவரவு மற்றும் பொருளாதார மேன்மையை அளிக்கப் போகும் குருபகவானும் உறுதி செய்கிறார். எனவே சனிபகவானுக்கும் சேர்த்தே விருச்சிக ராசிக்காரர்கள் பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.

ஏழரைச்சனி அமைப்பிலும் கடுமையாகச் சொல்லப்படும் ஜென்மச்சனி தற்போது உங்களுக்கு நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிறந்த பரிகாரம்.

அதோடு வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் வெளியூரில் இருப்பவர்கள் ஒருமுறை நாமக்கல் ராமதூதனை தரிசிப்பதும் துன்பங்களைக் குறைக்கும்.

No comments :

Post a Comment