Monday, 8 August 2016

மாலைமலர் வாரராசிபலன்கள் (8.8.16 TO 14.8.16)

மேஷம்:

இந்தவாரம் அனைத்திலும் சற்று சுணக்கமான வாரம்தான். அதேநேரத்தில் அடிப்படை விஷயங்களில் எந்தவித மாறுதலும் இல்லாமல் நல்ல பலன்களே நடக்கும். சிலருக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் இழுபறி இருக்கத்தான் செய்யும். மனம் ஒருநிலையில் இருக்காது. யாருக்கும் எதுவும் வாக்குத் தருவதற்கும் தயக்கமாக இருக்கும்.

பொதுவாக எட்டாமிடம் வலுவடையும் போது நமது மனம் குழப்பமான நிலையில் இருக்கும். அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் அதாவது மனதிற்கு அதிபதியான சந்திரன் எட்டில் மறையும் நாட்களில் நம் மனம் தெளிவற்று முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்று வேதஜோதிடம் அந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதுவும் செய்வதை தடை செய்கிறது.

மேஷராசிக்காரர்கள் எதிலும் அகலக்கால் வைத்துவிட வேண்டாம். அஷ்டமச்சனி முடிந்ததும் நல்ல எதிர்காலம் அமையும். அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கவலை வேண்டாம். அதுவரை பொறுமை தேவை. இப்போது எந்த ஒரு விஷயமும் உங்களுடைய தீவிர முயற்சிக்குப் பிறகுதான் வெற்றி பெறும்.

ரிஷபம்: 

அரசு ஊழியருக்கு இந்த வாரம் நல்லவாரம். குறிப்பாக காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சூரியன் வலுவாக இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். 

பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு இந்த வாரம் சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான வாரமாக இருக்கும். அனைத்துப் பாக்கியங்களும் உங்களுக்குக் குறைவின்றிக் கிடைக்கும்.

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். சூரியனும் வலுப்பெற்று ஒன்பதுக்குடையவன் ஒன்பதைப் பார்ப்பதால் நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். 

மிதுனம்:

இரண்டுக்குடைய சந்திரன் இந்தவாரம் நல்ல இடங்களில் வலுப்பெற்று தனயோகம் ஏற்படுவதால் வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த வாரம் நல்ல பலன்கள் நடக்கும்.

பெண்கள் விஷயத்தில் இனிமையான நிகழ்ச்சிகள் நடக்கும். இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் உண்டு. ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள் அல்லது தீர்மானிப்பீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு. பெண்களை உயரதிகாரிகளாகக் கொண்டவர்களுக்கு நல்லவைகள் உண்டு.

குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். இந்த வாரம் சில எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களை சந்திப்பீர்கள். சிலருக்கு மட்டும் ஒரு சிறப்பு பலனாக உங்களை கோபமூட்டக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

கடகம்:

இந்தவாரம் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக இருக்கவேண்டிய வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் தாராளமான பணப்புழக்கம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணச்சிக்கல்களுக்கு இந்த வாரம் இடமில்லை. குடும்பத்தில் சந்தோஷமும் மனைவி, குழந்தைகளுடன் வெளி இடங்களுக்கு செல்லுதலும் நடக்கும். 

கணவன்மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். பணவரவுக்குப் பஞ்சமில்லை. நல்ல சம்பவங்கள் நடக்கும் வாரமாக இருக்கும் என்றாலும் நன்மைகள் அனைத்தையும் நீங்கள் முழுமையாக அனுபவிக்க முடியாதபடி நெருடல்கள் இருக்கும்.

சிம்மம்:

இந்தவாரம் வீட்டிலும், தொழில் அமைப்புகளிலும் நன்மைகளும், சந்தோஷமான விஷயங்களும் நடக்கும் வாரமாக இருக்கும். சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.

ஆறாமிடம் சுபத்துவம் அடைவதால் எதிர்ப்புகள் உங்கள் அருகிலேயே வராது. உங்களைப் பிடிக்காதவர்கள் தூரத்தில் உங்களைப் பார்த்தாலே பக்கத்துத் தெருவுக்குள் நுழைவார்கள். நீண்டகால எதிரிகளை ஜெயிப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். அதேநேரத்தில் ஏதேனும் ஒரு சுபச்செலவுக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும்.

கணவன் மனைவி உறவு ஒத்துழைப்புடன் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது. சிம்மராசிக்கு சிறப்புக்கள் சேரும் வாரம் இது.

கன்னி:

தலைமைப் பதவியில் இருப்பவருக்கு ஜென்மகுரு சிக்கல்களை தரும் என்பதால் அதிகாரிகளாக இருப்பவர்கள் உங்களுக்கு கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள்.

இதுவரை வெளிநாட்டுப் படிப்பு, வேலைகளுக்கு முயற்சி செய்து வந்தவர்கள் அனைவரும் நல்லபடியாக சென்று வருவதற்கு அச்சாரம் போடும் வாரமாக இது இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும்.

சிலருக்கு வடமாநில புனித யாத்திரை போன்ற ஆன்மிக நிகழ்சிகள் இப்போது உண்டு. இதுவரை வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இருந்து வந்த அனைத்து இடைஞ்சல்களும்` நீங்கும். வேலை கிடைக்காதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காதவர்களிடம் இந்தவாரம் மனமாற்றம் உண்டாகும். எதிரி நண்பன் ஆவார்.

துலாம்:

இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடங்களிலும், தொழில் அமைப்புகளிலும் லாபங்களும், மதிப்பு, மரியாதையும், அந்தஸ்தும் கிடைக்கும் வாரமாக இருக்கும். உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் படிப்படியாகத் தீரும் வாரம் இது. ஏற்கனவே உங்களின் பிரச்னைகள் தீருவதற்கான ஆரம்பங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. 

கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் இருக்கும். குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இந்த வாரம் சிறப்பான பலன்கள் இருக்கும். வருமானம் வரும். கலைத்துறையினர் நல்ல மாற்றங்களை இந்த வாரம் உணருவீர்கள். ஏழரைச்சனி முடியப்போகும் நேரத்தில் எவ்வித கெடுபலன்களையும் செய்யாது என்பதால் இனிமேல் நீங்கள் கவலைப்பட எதுவுமில்லை.

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்கு இந்த வாரம் தொல்லைகள் எதுவும் இல்லாமல் ஏற்கனவே இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வுகள் ஏற்படும் வாரமாக இருக்கும். வேலை இல்லாத இளைஞர்கள் இப்போது மனதிற்கு பிடித்த வேலை செய்ய வெளிமாநிலம் செல்வீர்கள். சிலருக்கு குலதெய்வ தரிசனமோ ஞானிகள் தரிசனமோ இந்த வாரம் உண்டு. 

ராசியில் சனி இருப்பதால் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

தொழில், வேலை அமைப்புகளில் தடைகள் இருக்கும் என்றாலும் கடைசிநேரத்தில் ஏதேனும் ஒரு பணவரவு வந்து அனைத்தையும் சமாளிக்க கைகொடுக்கும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை. அனைத்துத் துறைகளிலும் இருக்கும் விருச்சிகத்தினர் எதிர்ப்புகளையும், எதிரிகளையும் வெற்றி கொள்வீர்கள்.

தனுசு:

தனுசுராசிக்கு இந்தவாரம் உங்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்த வாரமாக அமையும். பிள்ளைகள் வழியில் சில மனச்சங்கடங்களும், எதிர்பாராத செலவுகளும் வரக்கூடும் என்பதால் அவர்களின் மேல் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. இரண்டாமிடம் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு தடையேதும் இல்லை.

குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால் அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் புது முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம். வங்கியிலிருந்து பணம் எடுத்துவரும் போது அதிக கவனம் தேவை. சிலர் செல்போனை தொலைப்பீர்கள். உஷாராக இருங்கள்.

பெண்கள் விஷயத்தில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்படக்கூடும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையும் தேவை. கணவன், மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள்.

மகரம்:

வாரம் முழுவதும் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி ஜெயித்துக் காட்டுவீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம்.

எப்படியும் எதன்மூலமாகவும் தேவையான அளவிற்கு வருமானங்களும், பணவரவும் இருக்கும் என்பதால் உங்களுக்கு கஷ்டங்கள் என எதுவும் இல்லை. வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் நல்ல வாய்ப்புக்கள் உண்டு.

குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனை செய்து புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். தீர்த்த யாத்திரை செல்வீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய முடியும். நீண்ட நாட்கள் நிறைவேற்ற முடியாமல் இருந்த நேர்த்திக்கடனை செலுத்த முடியும். வியாபாரிகளுக்கு நன்மைகளும் மறைமுகமான வருமானங்களும் இருக்கும்.

கும்பம்:

பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் அடிக்கடி பயணம் செய்வீர்கள். ராசிநாதன் பத்தில் இருப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வளப்படுத்தும் என்பதால் இந்தவாரம் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அதேபோல வாரம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு.

நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். கெடுதல்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் எதிலும் முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள்.

இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் இந்த வாரம் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். பெரிய குறைகள் எதுவும் இல்லாத வாரம் இது.

மீனம்:

உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும்.

இதுவரை வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். பெண்களுக்கு இது நல்ல வாரமாக இருக்கும்

இதுவரை இருந்து வந்த மிகச்சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

No comments :

Post a Comment