Monday, 29 August 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (29.08.2016 - 04.09.2016)

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் சனியுடன் எட்டாம் வீட்டில் இருந்தாலும் அது அவருடைய சொந்த வீடு என்பதால் உங்களுக்கு நன்மைகள் செய்யும் பலத்துடன் இருக்கிறார். அதோடு ஐந்துக்குடைய சூரியன் ஆட்சி பெறுவதும் மேஷராசிக்கு யோகம் தரும் ஒரு நிலை என்பதால் இந்த வாரம் சிக்கல்கள் இல்லாத வாரம்தான்.

மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே மாற்றங்களுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும். அந்த மாற்றங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையானதாகவே இருக்கும். அம்மா வழி உறவினர்களால் இந்த வாரம் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின் ஆதரவும் உண்டு. வாரத்தின் பிற்பகுதி நாட்கள் அனைத்துப் பிரச்னைகளையும் நீக்கி நிம்மதியை தரும் வாரமாக இது இருக்கும்.

மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த சிலருக்கு அவை வெற்றி பெறும். வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியூர் பயணம் செல்வீர்கள். சூரியன் வலுவாக இருப்பதால் இந்த வாரம் கெடுதல்கள் சொல்ல ஏதும் இல்லை.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் நீசமாக இருந்தாலும் புதனுடன் இணைந்து நீசபங்கம் பெறுவதால் இழந்த வலுவைப் பெறுகிறார். மேலும் ஐந்துக்குடையவன் ஆட்சி ஒன்பதுக்குடையவன் ராசிக்குப் பார்வை என இந்தவாரம் நட்புக்கிரகங்கள் அனைத்தும் வளமான ஒரு நிலையில் இருப்பதால் ரிஷபராசிக்கு பயனுள்ள சிறந்த வாரமாகவே இது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் நீசம் பெறுவதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். சிலருக்கு எல்லாவற்றிலும் முதலில் பிரச்னைகள் தோன்றி பிறகு அனைத்தும் நல்லபடியாக முடியும்.

பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள். கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். 

மிதுனம்:

இராசிநாதன் புதன் நான்காம் வீட்டில் உச்சமாகி இருந்தாலும் நீச சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் வலிமை இழந்து பலவீனம் பெறுகிறார் என்பதால் இந்த வாரம் மிதுனராசிக்கு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலை அனைத்து விஷயங்களிலும் இருக்கும். எல்லாமே இழுபறியாக தாமதமாகத்தான் முடியும். ராசிநாதன் வக்ரம் பெறுவதால் பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும் விரயங்களும் இருக்கும்.

இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். தந்தைவழி உறவினர் வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச்சொத்து விஷயத்தில் இடையூறுகள் இந்த வாரம் இருக்கும். ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில் வருமானங்களுக்கு குறை இருக்காது. வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்லவாரம். அதிகாரப் பதவி வரும். நகைச்சுவை நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். மிதுனத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை. அனைத்து சிறப்புக்களும் சேரும் வாரம் இது.

கடகம்:

தனாதிபதி சூரியன் வலுவாக இருப்பதாலும் முயற்சி ஸ்தானாதிபதி புதன் உச்சவலுப்பெற்று இருப்பதாலும் இந்த வாரம் கடகராசிக்காரர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்று அதன் மூலமாக நல்ல பணவரவு இருக்கும். குருவின் பார்வையால் பாக்கியஸ்தானம் வலிமை பெறுவதால் இதுவரை கிடைக்காத திருமணபாக்கியம் குழந்தைபாக்கியம் கிடைப்பதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் சிலருக்கு இருக்கும்.

இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். கணவர் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வெளிநாடுகளில் பணிபுரியும் கடகராசிக்காரர்களுக்கு இப்போது முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். வெகுநாள் இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த வாரம் முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள்.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இப்போது இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் ராசியில் ஆட்சி பெற்று, ஐந்துக்குடைய குரு இரண்டில் இருப்பதும் ஒன்பதுக்குடைய செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளதும் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் என்பதால் இந்தவாரம் சிம்மத்திற்கு எதிர்மறை பலன்கள் எதுவும் இல்லாத நன்மைகள் உள்ள வாரமாக இருக்கும். யோகக்கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள்.

சுக்கிரன் இரண்டாமிடத்தில் நீசபங்க வலுவுடன் இருப்பதால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணத்திற்கான ஆரம்பங்களோ அல்லது திருமணமோ நடக்க வாய்ப்பு இருக்கிறது. முதல் திருமணம் தோல்வி அடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு இந்தவாரம் எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். 

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத தனலாபங்கள் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் பிறரால் கவனிக்கப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்க்காட்சி துறையினருக்கு இது சிறந்த வாரம்.

கன்னி:

ராசிநாதன் புதபகவான் ராசியிலேயே உச்சமாக இருந்தாலும் அவர் நீச சுக்கிரனுடன் இணைந்திருப்பதாலும், வாரத்தின் பிற்பகுதியில் அவர் வக்ரமடைவதாலும் புதனின் முழு நன்மைகளும் உங்களுக்கு இந்தவாரம் கிடைப்பது கடினமாக இருக்கும். அதேநேரத்தில் புதனின் உச்சபலத்தால் நன்மைகளுக்கும் குறைவு இருக்காது.

கணினி மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங், புத்தகம், பிரிண்டிங், எழுத்து மற்றும் பத்திரிகைத்துறையினர் வளம்பெறும் வாரம் இது. கன்னிராசிக்கு நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும்.

சிலருக்கு வெளிமாநில, வெளிநாட்டு பயணங்கள் உண்டு. அதனால் நல்ல இலாபங்கள் இருக்கும். கன்னிராசிக்கு நன்மைகள் நடக்க இனி தடைகள் ஏதும் இல்லை. அனைத்து விஷயங்களிலும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இப்போது இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

துலாம்:

பனிரெண்டுக்குடைய புதன் வலுவடைந்து ராசிநாதனுடன் இணைந்திருப்பதால் இந்த வாரம் துலாம்ராசிக்கு மாற்றங்களும், பிரயாணங்களும் உள்ள வாரமாக இருக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக்குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும்.

ராகுபகவான் பதினொன்றில் சூரியனுடன் இணைந்திருப்பதால் முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னியமத நண்பர் கை கொடுப்பார். அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும். கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள்.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம்.. வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள்.

விருச்சிகம்:

ஏழரைச்சனியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிகராசிக்காரர்களுக்கு இந்த வார இறுதியில் இருந்து தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் சற்று ஆறுதலான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு.

பத்தாம் வீட்டோன் வலுப்பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இன்னும் சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும்.

தாங்கமுடியாத வேதனைகளையும் அவுமானங்களையும் சந்தித்த இளைய வயது விருச்சிகராசிக்காரர்கள் இந்த வாரத்திலிருந்து படிப்படியான நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும்.

தனுசு:

ஒன்பதுக்குடைய சூரியனும், பத்துக்குடைய புதனும் வலுவாக இருந்து ராசிநாதனும் கேந்திரத்தில் இருப்பதால் தனுசுராசிக்கு இந்த வாரம் குறைகள் சொல்ல எதுவும் இல்லை. அதேநேரம் ஆறுக்குடைய சுக்கிரன் நீசபங்க வலுவுடன் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையும் இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. நிம்மதி இருக்கும். வியாபாரத்தில் இலாபம் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். பணக்கஷ்டங்கள் தீரும். தனுசுவிற்கு மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும் வாரம் இது. சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். 

பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இந்த வாரம் இரண்டாவது திருமணத்திற்கான அமைப்பு உருவாகும். தூர இடங்களில் இருந்து நல்லசெய்திகள் கிடைக்கும்.

மகரம்:

ஒன்பதாமிடத்தில் குரு சுக்கிரன் புதன் என மூன்று சுபக்கிரகங்கள் இணைவதால் இந்தவாரம் வாழ்க்கைத்துணை வழியில் இலாபங்களும், வரவுகளும், ஆதரவான நிலையும் மகர ராசிக்கு இருக்கும். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தவாரம் திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும்.

ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வயதானவர்களுக்கு ஆன்மிக யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும். கடன் தொல்லைகளால் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும்.

என்ன பிரச்னை என்றாலும் பணவரவு நன்றாக இருக்கும். யாருக்காவது எதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். மகரம் எப்போதுமே சிகரம் என்பதை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் வாரம் இது. 

கும்பம்: 

ஏழுக்க்குடைய சூரியன் வலுப்பெற்று, யோகாதிபதிகள் புதனும் சுக்கிரனும் எட்டில் மறைவதால் இந்த வாரம் கும்பராசிக்கு தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களும், குறைகளும் இருக்கும். பணவரவில் சுணக்கம் இருக்கலாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

வார ஆரம்பத்தில் மனதில் குழப்பங்களும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். எவருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம். அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது.

சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதேநேரம் வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

மீனம்:

ஏழுக்குடையவன் வலுப்பெற்று உச்சமாகி ராசிநாதனும் இராசியைப் பார்ப்பதால் இந்தவாரம் மீனராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத நல்லவாரமாக இருக்கும். அதேநேரம் ஏழுக்குடையவன் அஷ்டமாதிபதியான நீசச்சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் வாழ்க்கைத்துணையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கான வழிகளும் இந்த வாரம் பிறக்கும்.

தொழில்நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல தொழில் வேலை போன்றவைகளை அடைவீர்கள். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் உண்டு. தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று நேரிடையாக அவரது ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும்.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வரன்கள் அமையும். ஏற்கனவே முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்ல முறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடக்கும்.

No comments :

Post a Comment