Monday, 22 August 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (22.8.2016 முதல் 28.8.2016)

மேஷம்:

வாரம் முழுவதும் சந்திரன் வலுவுடன் இருப்பதால் இந்தவாரம் மேஷராசிக்கு சிறந்த வாரமாகவே இருக்கும் என்பது நிச்சயம். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். அதே நேரத்தில் ஆறுக்குடைய புதன் உச்சம் அடைவதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும்.

இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புனித இடங்களுக்கு செல்வதோ, குல தெய்வ வழிபாடோ செய்வீர்கள்.

கணவன் மனைவி உறவில் முணுமுணுப்புக்கள் உண்டு. குழந்தைகள் செலவு வைப்பார்கள். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நீட்ட வேண்டாம். பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது. ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு பொருளாதாரரீதியாக தடங்கல்களையும் பணவரவுக்குத் தடையையும் தந்து கொண்டிருந்த கிரகநிலைகள் மாறிவிட்டதால் இந்தவாரம் ரிஷபராசிக்கு வருமானம் வரும் வாரமாக இருக்கும். முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இப்போது நல்ல மாற்றங்களுக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும்.

அம்மாவழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். அம்மாவின் ஆதரவும் உண்டு. மேற்படிப்பு படிப்பதற்கு முயற்சிகள் எடுத்திருந்த சிலருக்கு அவை வெற்றி பெறும். வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியூர் பயணம் செல்வீர்கள்.

மருத்துவத்துறையில் பணிபுரியும் ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்போது முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள் இந்த வாரம் முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள். கலைஞர்களுக்கு குறிப்பாக தொலைக்க்காட்சி துறையினருக்கு இது சிறந்த வாரம்.

மிதுனம்:

எதிர்ப்புகள் அனைத்தும் ஒழிந்து உங்களின் திறமையும், செயல் திறனும் வெளிப்படும் வாரமாக இது இருக்கும். தொழில்நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்ல தொழில் வேலை போன்றவைகளை இனிமேல் அடைவீர்கள்.

செலவுகள் இருந்தாலும் இந்த வாரம் நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெற்று அதன் மூலமாக நல்ல பணவரவு இருக்கும் என்பதை கிரகநிலைகள் காட்டுகின்றன. சுகஸ்தானம் வலிமை பெறுவதால் இதுவரை கிடைக்காத திருமணபாக்கியம் குழந்தைபாக்கியம் கிடைப்பதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் சிலருக்கு இருக்கும். கணவர் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். 

அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் நேர்மையற்ற வழிகளில் வரும் வருமானத்தின்போது கவனமுடன் இருப்பது நல்லது. சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். மனதில் இருப்பதை வெளிப்படையாக எவரிமும் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம். எதிர்பார்ப்புகள் இழுபறியாக இருக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.

கடகம்: 

இந்த வாரம் கடகராசிக்கு அதிர்ஷ்டம் தரும் வாரமாகவே இருக்கும் என்பதோடு குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் இருக்கும் வாரமாகவும் இருக்கும். கடன் தொல்லைகளால் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் கடனை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன பிரச்னை என்றாலும் பணவரவு நன்றாக இருக்கும்.

யாருக்காவது ஏதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். கடகம் எப்போதும் கலங்காது என்பதை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள். கணினி மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங், புத்தகம், பிரிண்டிங், எழுத்து மற்றும் பத்திரிகைத்துறையினர் வளம்பெறும் வாரம் இது.

நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது நல்ல வரன்கள் அமையும். முதல் திருமணம் கசப்பாக அமைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடக்கும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னியமத நண்பர் கை கொடுப்பார்.

சிம்மம்:

சிம்மராசிக்கு நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். தேவையற்ற வகையில் வீண் செலவுகளும் விரையங்களும் சிம்ம ராசிக்கு உள்ள வாரமாக இருக்கும் என்பதால் இது சேமிப்பு செய்ய முடியாத வாரமாக இருக்கும்.

வாழ்க்கைத்துணை வழியில் வரவுகளும், ஆதரவான நிலையும் இப்போது இருக்கும். நீண்டகாலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு இந்தவாரம் திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வயதானவர்களுக்கு ஆன்மிக யாத்திரை செல்லும் வாய்ப்பு ஏற்படும். 

பத்தாம் வீட்டோன் நீசபங்க வலுப்பெறுவதால் இந்த வாரம் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பு முனையான ஆர்டர்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாட்டு பயணங்கள் உண்டு. அதனால் நல்ல இலாபங்கள் இருக்கும். சிறப்பான வாரம் இது.

கன்னி: 

இந்தவாரம் கன்னிராசிக்கு கெடுபலன்கள் இல்லாத நல்லவாரமாக இருக்கும். ஏழுக்குடையவன் சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் வாழ்க்கைத் துணையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கான வழிகள் பிறக்கும். எடுத்துக்கொள்ளும் அனைத்துக்காரியங்களும் லாபகரமானதாகவும், எதிர்கால நன்மைக்கு உபயோகப்படுவதாகவும் இருக்கும். 

புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். நண்பர்கள் உதவுவதாக சொல்வார்கள். வேலைதான் நடக்காது.

வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. அடங்கியிருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

துலாம்:

இன்னும் சிலமாதங்களில் ஏழரைச்சனி விலகப்போவதால் துலாம்ராசிக்கு நன்மைகள் நடக்க தடைகள் ஏதும் இல்லை. சமீபத்தில் நடந்த குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் என்பதாலும் இனிமேல் துலாம்ராசிக்காரர்கள் துயரப்படுவதற்கு ஒரு காரணமும் இல்லை. பிறந்த ஜாதகத்தில் நன்மைகளைத் தரும் அமைப்புள்ள தசைபுக்தி நடப்பவர்களுக்கு இந்த வாரம் இரட்டிப்பு யோகங்கள் உண்டு. 

தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

சிலருக்கு ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும் வாரமாக இது இருக்கும். யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. ராசிநாதன் நீசமடைந்தாலும் நீசபங்கம் அடைவதால் பெரிய தொந்தவுகள் எதுவும் வராது.

விருச்சிகம்:

வார ஆரம்பத்தில் மனதில் குழப்பங்களும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். ஏழரைச்சனியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வார இறுதியில் இருந்து தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் சற்று ஆறுதலான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். அலுவலகங்களில் இருப்பவர்கள் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள்.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். எவருக்கும் எதுவும் செய்து தருவதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவது கடினம். குருபகவான் வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழாம் வீட்டை வலுப்பெற்று பார்ப்பதால் கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவுவதாக சொல்லிவிட்டு காணாமல் போவார்கள்.

வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தாங்கமுடியாத வேதனைகளையும் அவுமானங்களையும் சந்தித்தவர்கள் இந்தவாரத்திலிருந்து படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். விருச்சிகத்திற்கு நல்ல வாரம் இது.

தனுசு:

செவ்வாயும், குருவும் நன்மைகளைத் தரமுடியாத அமைப்பில் இருப்பதோடு சுக்கிரனும் இந்தவாரம் நீசபங்க வலுவில் இருப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தினை தள்ளி வைக்கும் அமைப்புதான் என்றாலும் சந்திரன் நல்லஇடங்களில் இருப்பதால் எத்தகைய பிரச்னையையும் நீங்கள் சமாளித்து வெற்றி பெறும் வாரமாக இது இருக்கும்.

தனுசுராசிக்கு ஆறுக்குடையவன் பத்தில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் இலாபம் உண்டு. குருவும் பத்தில் இருப்பதால் மாற்றங்களும், பிரயாணங்களும் இருக்கும். சிலருக்கு வெளிமாநில அல்லது வெளிநாட்டு பயணங்களும், இட மாறுதல்களும் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகள் இருக்கும். வயது முதிர்ந்த ஆரோக்கியக்குறைவுள்ள தகப்பனாரைக் கொண்டவர்கள் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கவும். அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் அலைச்சல் மிகுதியாக இருக்கும். ஆனாலும் நல்லபெயர் கிடைக்கும்.

மகரம்:

இதுவரை மகரராசிக்கு இருந்து வந்த தடை அமைப்புகளும் கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் தீர்ந்து நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும். மகரத்திற்கு மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இருக்கும் வாரமிது. சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள்.

தூர இடங்களில் இருந்து நல்லசெய்திகள் கிடைக்கும். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் இந்த வாரம் உண்டு. தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று நேரிடையாக அவரது ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும். கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் நீங்கள் தொட்டதும் தொடாததும் துலங்கும் வாரம் இது.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

கும்பம்:

இந்தவாரம் கும்பராசிக்காரர்கள் கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும் விரயங்களும் இருக்கும். இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும்.

ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில் வருமானங்களுக்கு குறை இருக்காது. வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இது நல்லவாரம். அதிகாரப் பதவி வரும். நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் கவலைகள் நீங்கப்பெறுவீர்கள்.

தந்தைவழி உறவினர்வகையில் மனக்கசப்புக்கள் அல்லது பூர்வீகச்சொத்து விஷயத்தில் இடையூறுகள் இருக்கும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். விரயங்கள் இருக்கும் என்பதால் செலவு செய்வதற்கு முன் யோசிப்பது நல்லது.

மீனம்:

ராசிநாதன் குரு ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதாலும் இரண்டு, ஒன்பதுக்குடைய யோகாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருப்பதாலும் மீனராசிக்கு தொழில் மற்றும் வேலை அமைப்புகளில் முன்னேற்றம் உண்டாகி உங்களின் பொருளாதார சிக்கல்கள் தீரும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தொழிலே மாறுவது போன்ற பலன்களும் இருக்கும்.

சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த வாரம் திருமணத்திற்கான ஆரம்பங்களோ அல்லது திருமணமோ நடக்க வாய்ப்பு இருக்கிறது. முதல்திருமணம் தோல்வியடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு இந்தவாரம் எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். வாழ்க்கைத்துணை அமைப்புகளில் வளம் உண்டு.

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற துறைகளில் எதிர்பாராத தனலாபங்கள் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒரே இடத்திற்கு மாற்றலாவார்கள். வழக்குரைஞர்கள் சிலர் தங்களின் தனிச்சிறப்பான வாதத்தால் பிறரால் கவனிக்கப் பெறுவார்கள். குறிப்பிட்ட சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான பணவரவு கிடைக்கும். பணக்கஷ்டங்கள் தீரும்.

No comments :

Post a Comment