Tuesday, 2 August 2016

ரிஷபம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

ரிஷபம்:

இதுவரை வேலை, தொழில் அமையாத ரிஷபத்தவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய ஜீவன அமைப்புகள் இந்தமாதம் முதல் அமைந்து இனிமேல் மாதமானால் ஒரு நிம்மதியான வருமானம் வரக்கூடிய சூழல் வரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இனி இருக்கும். இதுவரை இருந்து வந்த மிகச்சிறிய தயக்கத்தையும், சோம்பலையும் உதறித் தள்ளி எடுத்துக் கொண்ட காரியங்களில் சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய நன்மைகளைத் தருவதற்கு பரம்பொருள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் எந்த விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும்.

ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இந்த மாதம் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது.

வியாபாரிகளுக்கு தொழில் சிறக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.

1,2,3,7,8,9,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 13-ம் தேதி இரவு 10 மணி முதல் 16-ம் தேதி காலை 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment