Wednesday, 17 August 2016

2016 - ஆவணி மாத பலன்கள்

மேஷம்:

மேஷநாதன் செவ்வாய் சனியிடமிருந்து விலகிய நிலையில் யோகாதிபதியான சூரியன் ஆட்சி பெறுவது அஷ்டமச்சனியின் கெடுபலன்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு என்பதால் இந்தமாதம் முழுவதும் உங்களுக்கு மனதைரியத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. மேலும் ராசியின் எதிரிகள் புதனும் சுக்கிரனும் இப்போது வலுவிழப்பதும் ஒரு சிறப்பான நிலை என்பதால் ஆவணி மாதம் உங்களுக்கு ஆனந்த மாதம்தான். 

சூரியன் வலுப்பெறுவதால் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இதுவரை உங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி வந்த அனைத்து விஷயங்களும் முடிவுக்கு வந்து கொஞ்சம் நிம்மதிக்கு வழிவகுக்கும். சூரிய வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். மேஷராசிக்காரர்கள் இனி எந்த விஷயத்திற்காகவும் கலங்கத் தேவை இல்லை. தாயார் வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும். சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயர்கல்வி படிக்க இதுவரை இருந்து வந்த தடை நீங்கும். 

வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத்துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு. பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை. வேலை, தொழில், அமைப்புகளில் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் மாறி இனிமேல் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

ரிஷபம்:

ஆவணி மாதம் ராசிநாதன் சுக்கிரன் நீசத்தில் இருந்தாலும் அவருடன் புதன் சேருவதால் நீசபங்கம் பெற்று இந்த மாதம் முழுவதும் பெண்களால் நன்மைகளும் குறிப்பிட்ட சிலரின் வீட்டில் பெண்களுக்கான சுப நிகழ்ச்சிகளும் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் உள்ள மாதமாக இருக்கும். தொழில்ஸ்தானம் வலுப்பெறுவதால் ரிஷபத்திற்கு இந்தமாதம் பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும்.

இதுவரை உங்களை எதிரியாக நினைத்தவர்கள் நண்பராக மாறுவர்கள். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில் உங்களுடைய யோசனைகள் ஏற்கப்படும். மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பெண்களுக்கு குறைகள் ஏதும் இந்த மாதம் இல்லை. பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள்.

இதுவரை தடங்கலாகி வந்த சில விஷயங்கள் உங்கள் எண்ணம் போல் இப்போது நிறைவேறும். இளைய சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு வாகன மாற்றங்களும் உண்டு. பணவரவிற்குத் தடையேதும் இல்லை. வருமானம் குறையாது. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் நடக்கும். 

மிதுனம்:

ராசிநாதன் புதன் இந்தமாதம் நீசசுக்கிரனுடன் இருப்பதோடு பெரும்பாலான நாட்கள் வக்கிர நிலையிலும் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சுமாரான மாதம்தான் என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் ராசிநாதன் வலுப் பெறுவதால் வரபோகும் பணவரவால் அனைத்து பிரச்சினைகளையும் நீங்கள் சமாளிக்கும் மாதமாக இருக்கும். புதபகவான் அதிநட்பு நிலையில் மூன்றாமிடத்தில் இருப்பதும் பிறகு உச்சநிலை பெறுவதும் யோகஅமைப்புகள் என்பதால் இந்தமாதம் மிதுனத்திற்கு கவலை எதுவும் இல்லை.

ஆறாம் வீட்டு அதிபதி வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். மேலும் எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். பெண்களுக்கு மிகவும் நல்ல மாதமாக இது அமையும். கோட்சார அமைப்புப்படி யோககாலம் என்பதால் தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கைகொடுக்கும். 

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு பதவிஉயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். 

கடகம்:

ஆவணி முழுவதும் கடகராசிக்கு சுபநிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகளும் உள்ள மாதமாக இருக்கும். மறைமுகமான வழியில் வெளியில் சொல்ல முடியாத வகையில் தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள், பில்டர்கள் போன்றோருக்கு “லம்ப்சமாக” ஒருதொகை கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும். அதற்காக கடன் வாங்க மாட்டீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். சிலருக்கு தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் நல்ல தகவல்கள் வரும். திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் இப்பொழுது கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள் சகோதரி போன்றவர்களின் சுபகாரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். சகாயஸ்தானாதிபதி வலுவாக இருப்பதால் கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். அரசாங்க ஆதரவு உண்டு. எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள். கடகராசிக்காரர்கள் இனிமேல் அனைத்திலும் துடிப்புடன் செயலாற்றி வெற்றிக்கம்பத்தை வேகமாகத் தொடப் போகிறீர்கள் என்பது உறுதி.

சிம்மம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் ராசியிலேயே ஆட்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் அவருடன் புதனும் பெரும்பாலான நாட்கள் இருப்பது நல்ல அமைப்பு என்பதால் சிம்மராசிக்கு ஆவணி மாதம் சிறப்பான மாதமே. ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு.

சிலருக்கு வெளியூர் மாறுதல், இலாகா மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதோடு உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் சிம்மராசிக்கு திருப்பு முனையான மாதமிது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

இந்த மாதம் பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கலாம். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பணவரவு இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. 

கன்னி:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பனிரெண்டாமிடத்தில் இருந்தாலும் அவருடைய நண்பரான ஆட்சிபெற்ற சூரியனின் வீட்டில் இருப்பதும் பிற்பகுதியில் தன் ராசியிலேயே உச்சம் அடைவதும் உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் ஆவணி மாதம் நல்ல மாதமே. மாதம் முழுவதும் யோகக் கிரகங்கள் நல்லநிலையில் உள்ளதால் இந்த மாதம் உங்களுக்கு யோகபலன்கள் நடக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
 
அதேநேரத்தில் பனிரெண்டுக்கதிபதி வலுவாகி பாக்யாதிபதி நீசமாவதால் இந்தமாதம் உங்களுக்கு செலவுகளும், பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே எனவே வருமானமும் இந்தமாதம் தாராளமாகவே இருக்கும். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் வரும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்தமாதம் இருக்கும்.

வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான மாதம். ஆன்மிகத்துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத்தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள். பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. குறிப்பாக வேலை, தொழில் போன்றவற்றில் பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினர் இந்தமாதம் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் இருக்கும்.

துலாம்:

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் நீசநிலையில் இருப்பதால் இந்தமாதம் துலாம்ராசிக்கு அலைச்சல்களையும் ஏமாற்றங்களையும் தரும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் புதனுடன் அவர் இணைந்து நீசபங்க ராஜயோகம் பெறுவதால் பிறந்த ஜாதக வலுவுள்ள சிலருக்கு தொழில் ரீதியான நன்மைகளும், பணவரவும் கிடைக்கும் மாதமாகவும் இருக்கும். ராசிநாதனின் வலுக்குறைவால் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் ஆட்சி பெற்ற சூரியனைக் கண்டதும் பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி.

ஆவணி மாதக் கிரகநிலைகளால் உங்களால் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த மாதம் உங்கள் மனம் போல் நடக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள். வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். 

சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

விருச்சிகம்:

விருச்சிகராசி இளையபருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. இந்த உலகத்தில் வலிமை உள்ளதுதான் வாழும் எனும் அடிப்படையில் செழுமையான நம்பிக்கை மனம் கொண்ட உங்களுக்கு யாரும் சொல்லித் தர வேண்டியிருக்காது. ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் மூன்றுக்குடைய சனியுடன் இணைந்திருப்பதால் உங்களுக்கு எதையும் சமாளிக்கும் தைரியம் வரும். தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. விருச்சிகத்தின் வேதனைகள் விலகும் காலம் வந்துவிட்டது.

இதுவரை எந்த விஷயங்களில் உங்களுக்கு தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்ல படியாக மீண்டு வருவீர்கள். உதாரணமாக கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் நல்லபடியாக குணம் அடைவீர்கள். உடல் நலம் சீராகும். திறமை இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் அல்லாடியவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்பும் வெற்றியும் இனிமேல் கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் இனிமேல் வேறுவிதமான வடிவங்களைப் பெறும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும்.

தனுசு:

ராசிநாதன் குருவும், ஆறுக்குடைய சுக்கிரனும் இந்த மாதம் இணைகிறார்கள். இந்த அமைப்பில் சுக்கிரன் வலுவிழப்பது தனுசு ராகிக்கு மேன்மை தரும் அமைப்பாகும். குரு சுக்கிர இணைவால் மனதிற்குப் பிடிக்காத செயலை நீங்கள் இந்த மாதம் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத, ஆகவே ஆகாத ஒருவருடன் வேலை செய்யவோ பயணம் செய்யவோ கூடவே இருந்தே தீர வேண்டிய அமைப்புகளோ இந்த மாதம் இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களால் எரிச்சல் அடைவீர்கள்.

வீண் அலைச்சல்களும், பயணங்களும் இந்த மாதம் தனுசுராசிக்கு இருக்கும். ஆறுக்குடையவன் நீசபங்க வலுப் பெறுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் மாத பிற்பகுதியில் உச்சம் பெறும் புதனின் தயவினால் வெற்றி பெறும். குடும்பாதிபதி சனி செவ்வாயுடன் இணைந்து பலவீனமடைவதால் இந்தமாதம் மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். நண்பர்களிடம் விலகியே இருங்கள்.

வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான புதன் தர்மகர்மாதிபதி யோக அமைப்புடன் வலுவாக இருப்பதால் மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் நல்லவிதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளைத் தரும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.

மகரம்: 

“எடுத்த காரியம் யாவிலும் வெற்றி” என்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது மகரராசிக்குப் பொருந்தும் என்பதால் அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆவணிமாதம் உங்களுக்கு ஆனந்த மாதமே. சுக்கிரன் நீசத்தில் இருப்பதால் சிலருக்கு மட்டும் பெண்களால் வீண் விரையங்கள் இந்த மாதம் உண்டு. மற்றவர்களுக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் இனிமேல் உங்களை தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் இனி எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்தமாதம் மிகுந்த நன்மையை அளிக்கும். குறிப்பாக மஞ்சள் போன்ற பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

கும்பம்:

ஆவணிமாதம் உங்களுக்கு வீண் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தை வலுப்படுத்தினால் அந்த பாவத்தின் பலன்கள் நடக்கும் என்பதால் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்கள் இந்தமாதம் நடக்கும் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம். கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம். குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.

அதேநேரத்தில் எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதால் எட்டில் இருக்கும் சுபக்கிரகங்களால் பெரிய பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த மாதம் உண்டு.. கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள், வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடுநிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.

மீனம்:

ராசிநாதன் குருபகவான் ஏழாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேருவீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மீனராசிப் பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். 

அந்தஸ்து கௌரவம் உயரும். இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் இந்தமாதம் தீரும். வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்த முடியும். கடந்த நான்கு வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த மீனத்தினருக்கு நல்ல பாதையைக் காட்டும் ஆரம்ப மாதமாக ஆவணி மாதம் இருக்கும். மீனத்திற்கு இனிமேல் குறைகள் எதுவும் இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு.

No comments :

Post a Comment