Tuesday, 2 August 2016

மகரம்: 2016 - ஆகஸ்ட் மாத பலன்கள்

மகரம்:

மகரராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. இந்தமாத குருப்பெயர்ச்சி மிகவும் நல்லபலன்களை உங்களுக்கு தரும் என்பதால் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும்.

மகரராசிக்காரர்கள் இந்தமுறை மனதளவிலும் உடல்நிலையிலும் பத்துவயது குறைந்து புத்துணர்ச்சியையும், சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள் என்பது நிச்சயம். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம்.

பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

1,2,4,10,11,12,21,24,25,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் 6-ம் தேதி காலை 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ஆயினும் சந்திரன் குருவுடன் இணைவதால் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.

No comments :

Post a Comment