Monday, 1 August 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (1.8.2016 முதல் 7.8.2016)

மேஷம்:

வாரத்தின் ஆரம்பநாளே சூரியனும், சந்திரனும் அமாவாசை யோகத்திலும், கேந்திர கோணாதிபதிகள் யோகத்திலும் ஆரம்பிப்பதால் இந்த வாரம் மேஷத்திற்கு யோக வாரமாகவே இருக்கும். பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேதுவை மூன்று சுபக்கிரகங்கள் பார்ப்பதால் இப்போது உங்களுடைய அனைத்து பிரச்னைகளையும் ஜெயிப்பீர்கள் என்பது உறுதி. 

ராசிநாதன் வலுவாக இருப்பதால் மேஷராசிக்காரர்களின் மனஉறுதி தற்போது மிக நன்றாக இருக்கும். மலையே உடைந்து தலைமீது விழுந்தாலும் நிலைகுலைய மாட்டீர்கள். முருகப்பெருமானின் மைந்தர்களாகிய உங்களுக்கு இந்த வாரத்திலும் அடுத்த வாரம் வரப்போகிற குருப்பெயர்ச்சியிலும் கெடுபலன்கள் எதுவும் நிச்சயம் வராது.

எட்டாமிடத்தில் இணைந்திருக்கும் செவ்வாய், சனியினால் தன, வாக்கு, குடும்ப ஸ்தானம் பாதிக்கப்படுவதால் குறிப்பிட்ட சிலருக்கு தற்போது பண நெருக்கடிகள் அதிகமாகத்தான் இருக்கும். பணம் சம்பந்தமாக கொடுக்கும் வாக்கு பலிக்காது. குடும்பத்திலும் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை இருக்கும். எல்லாம் கொஞ்ச காலம்தான். பொறுத்துக்கொள்ளுங்கள். 

ரிஷபம்:

ராசியை செவ்வாய், சனி பார்த்து ராசிநாதன் சுக்கிரன் குரு, ராகுவுடன் இணையும் வாரம் இது. ரிஷபராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டு வருட காலங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் தற்போது நீங்க ஆரம்பிக்கும் அதேநேரத்தில் கெடுதல்கள் உடனே நடக்கும், நல்லவைகள் மெதுவாகத்தான் நடக்கும் என்பதன்படி வரப்போகும் மாற்றம் நிதானமாகத்தான் இருக்கும்.

இதுவரை கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிரந்தரமான ஒரு வருமானம் உருவாகி கடனை அடைப்பதற்கான வழிமுறைகள் இன்னும் சிலவாரங்களில் உருவாகும். இதுவரை உங்களை பாதித்துக் கொண்டிருந்த சங்கடமான பிரச்சினைகள் இப்போது விலக ஆரம்பிக்கும்.

குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலன்கள் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இதுவரை நீங்கள் செய்து முடிக்க முடியாத விஷயங்களை தற்போது எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கடந்த சில மாதங்களாக உங்களின் மனதைப் போட்டு அழுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் இந்தவாரம் முதல் தீர்வதற்கு ஆரம்பிக்கும்.

மிதுனம்:

தைரியஸ்தானம் எனப்படும் மூன்றாமிடத்தில் குரு, புதன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்களோடு ராகுபகவான் இணைந்து வலிமையுடன் இருக்கும் நிலையில் இந்தவாரம் ஆரம்பிக்கிறது. மூன்றாமிடம் வலுப்பெறுவதால் உங்களுடைய மனோபலமும், எதையும் நேர்முகத்துடன் சந்திக்கும் தைரியமும் இப்போது அதிகரிக்கும்.

இதுவரை சந்திக்கத் தயங்கிய பல விஷயங்களை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் புதன் சகாயஸ்தானம் எனப்படும் உதவிகளைப் பெறுகின்ற மற்றும் தருகின்ற வீட்டில் இருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்து சரியானநேரத்தில் உங்களுக்கு உதவிகள் கிடைக்கும். எனவே பிறந்த ஜாதக அமைப்பின்படி தற்போது சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்கள் எதற்கும் கலங்கத் தேவையில்லை.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச்சேர்க்கை எனப்படும் நகை வாங்குதல் இருக்கும். மனைவிக்கோ குழந்தைக்கோ சொந்த வருமானத்தில் சேமிக்கப்பட்ட பணத்தில் இருந்து நகை வாங்கித் தருவீர்கள். பொதுவாக மிதுனராசிக்காரர்களின் பின்னடைவுகளை தீர்க்கும் வாரம் இது.

கடகம்:

வாரத்தின் ஆரம்பமே ராசிநாதன் சந்திரன் சூரியனுடன் இணைந்த யோகநிலையில் ஆரம்பிப்பதால் கடகராசிக்காரர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்கும் வாரமாக இது இருக்கும். இதுவரை எதிர்ப்புகளையும், வேதனைகளையும், வீண்பழிகளையும், வம்புச் சண்டைகளையும் சந்தித்து வந்தவர்கள் இந்த வாரத்திலிருந்து நல்ல மாற்றங்களை உணர்வீர்கள்.

அலுவலகங்களில் இதுவரை இருந்து வந்த பின்னடைவுகள் ராசிநாதன் வலுவால் சமாளிக்கப்படும். ஏற்கனனவே வருமானக் குறைவில் இருப்பவர்களுக்கு இந்த வாரத்தோடு அது நீங்கி இனிமேல் நல்ல பணவரவு வரக்கூடிய அமைப்பு இருக்கும். குடும்பத்திலும் சந்தோஷம் தரக்கூடிய சுபகாரியங்கள் உண்டு. மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரால் உதவிகள் இருக்கும்.

ஐந்தாம் வீட்டில் செவ்வாய், சனி இருப்பதால் எந்த ஒரு சூழ்நிலையிலும் எவரிடமும் கோபப்படாமல் இருக்க வேண்டியது அவசியம். யாராவது நிதானம் இழந்து பேசிவிட்டால் இது தீவிரமான கருத்து வேறுபாடுடன் சண்டையாகி நிரந்தர பிரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதால் எங்கும் எதிலும் கவனம் அவசியம்.

சிம்மம்:

ராசியிலேயே முப்பெரும் சுபர்களான குருவும், சுக்கிரனும், புதனும் இணைந்து ராசிநாதன் பனிரெண்டாமிடத்தில் அமாவாசை யோகத்தில் வலுப்பெற்று இருக்கும் நல்லவாரம் இது. சிம்மராசிக்காரர்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான பலன்களாக இந்தவாரம் நீங்கள் செய்யும் எந்தக் காரியமும் தடைபடாமல் நிறைவேறும் என்பதைச் சொல்லலாம்.

ராசிநாதன் பனிரெண்டாமிடத்தில் வலுப்பெறுவதால் அனைத்து விஷயங்களிலும் இந்தவாரம் எதிர்பாராத விஷயங்கள் இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நற்செய்திகள் உண்டு. பிறந்த இடத்திலிருந்து தூரத்தில் இருப்பவர்கள் நன்மைகளை அடையப் பெறுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்து வேலைக்காக வெளியிடம் சென்றவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

சிம்மராசிக்கு தற்போது அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளைப் பாதிக்கும். நான்காமிடத்து சனி அமைப்பு நடந்து கொண்டிருப்பதால் அடுத்தவார குருப்பெயர்ச்சியில் இருந்து உங்களுடைய ஜீவன அமைப்புகள் அனைத்தும் நன்கு முன்னேற்றம் அடைந்து பொருளாதார லாபத்தை தரும் என்பது உறுதி.

கன்னி:

கன்னிராசிக்காரர்களுக்கு ராசிநாதன் புதன் பனிரெண்டாம் வீட்டில் ராகுவுடன் இணைந்து வலுவாக இருப்பதால் இந்தவாரம் வீண்செலவுகளும், விரையமும் உள்ள வாரமாக இருக்கும். முகம் தெரியாத ஒருவரால் இந்த வாரம் தேவையற்ற விரயங்கள் வரும் என்பதால் புதிதாக அறிமுகமாகும் நட்புகளுடன் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று சுபக்கிரகங்கள் இணைந்து ஆறாமிடத்தை பார்த்து வலுப்படுத்துவதால் வீட்டிலும் வெளியிலும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே எவரிடமும் பேசுவதற்கு முன்பு ஒரு கணம் எதையும் நிதானிப்பது நல்லது. குறிப்பாக வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள்.

வாக்குஸ்தானம் பாவத்துவம் இன்றி வலுவாக இருப்பதாலும் முயற்சி ஸ்தானமான மூன்றாமிடத்தில் செவ்வாய், சனி இருப்பதாலும் எவ்வித சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள் என்பது உறுதி. எனவே கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள் கலக்கும் வாரம்தான் இது.

துலாம்:

துலாம்ராசிக்கு பத்து, பதினொன்றுக்குடைய சூரிய, சந்திரர்கள் பத்தாமிடத்தில் இணைந்து வலுப்பெற்று தொழில் யோகத்தை தரக்கூடிய நிலையில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. குறிப்பாக காய்கறி, பழம், ஜூஸ், விவசாயம், பால், வாட்டர்கேன் போன்ற தொழில்களைச் செய்யும் துலாம்ராசிக்காரர்களுக்கு இது சிறப்பான வாரமாக இருப்பது நிச்சயம்.

தொழில்முறையில் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த சிக்கல்கள் இந்த வாரம் முதல் விலக துவங்கும். கடந்த ஆறு, ஏழு வருடங்களாக ஏழரைச்சனி காரணமாக முடக்கமான ஒருநிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்தவாரம் நடைபெறும் குருப்பெயர்ச்சி முதல் ஒரு நல்ல மாற்றம் வரும்.

துலாம்ராசிக்கு ஏழரைச்சனி முடியப் போவதால் இனிமேல் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் பொருளாதார மேன்மையுடன், நல்ல பணவரவு மற்றும் அந்தஸ்துடன் இருக்க வேண்டிய சூழல்கள் உருவாகி நல்ல எதிர்காலத்தை தரக்கூடிய அமைப்பிற்கு மாறுகின்ற வாரமாக இது இருக்கும் என்பதால் உங்களுக்கு இது சிறப்பான வாரம்தான். 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு தர்மகர்மாதிபதிகளான சூரியனும், சந்திரனும் இணைந்து நல்ல அமைப்பில் அமாவாசை யோகத்தில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிப்பதால் கடல் நடுவே மிதப்பவனுக்கு கட்டை ஒன்று அருகில் வந்தாற்போல இத்தனை பின்னடைவுகளிலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை தரும் நிகழ்வுகள் இந்த வாரம் உங்களுக்கு நடக்கும்.

கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆறுதல் தரும் சம்பவங்கள் இந்த வாரம் உண்டு. இதுவரை கிணற்றில் போட்ட கல்லாகவோ அல்லது உங்களுக்கு சாதகமில்லாமல் சென்று கொண்டிருந்த வழக்கு விவகாரங்கள் இந்த வாரம் முதல் தலைகீழாக மாறி இனிமேல் உங்கள் பக்கமாக தீர்ப்பு வரும் விதமாக சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களின் வேதனைகள் விலகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. ஏழரைச்சனியினால் கிடைக்கும் அனுபவங்கள் அனைத்துமே சனி முடிந்ததும் நீங்கள் நன்றாக வாழ்வதற்காகத்தான் என்பதால் அடுத்த வருடம் முதல் விருச்சிக ராசிக்காரர்கள் ஆனந்தவாழ்வை அடையப்போகிறீர்கள் என்பதைப் புரிந்து மனதைத் தளரவிடாமல் இறைபக்தியுடன் அனைத்தையும் அணுகினால் பரம்பொருள் உங்களை கைவிட மாட்டார் என்பது உறுதி.

தனுசு:

ஒன்பதாமிடத்தில் ராசிநாதனும், மற்ற இரு சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் ராகுவுடன் இணைந்து சண்டாளயோகத்திலும் குரு, சுக்கிர இணைவுடனும் ஆரம்பிக்கும் வாரம் இது. தனுசுராசிக்காரர்களின் உற்சாகமும், திறந்தமனதும், நேர்மையான போக்கும், எதையும் அலட்சியமாக சமாளிக்கும் உறுதியும் இந்த வாரம் வெளிப்படும் வாரமாக இருக்கும்.

வாரத்தின் ஆரம்பமே அமாவாசை அமைப்புடன் சந்திராஷ்டம நாளாக அமைவதால் முதல் இரண்டு நாட்கள் மட்டும் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் இருந்தாலும் சந்திராஷ்டமம் நீங்கிய பிற்பகுதி நாட்களில் அனைத்து விஷயங்களிலும் நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள். 

இளையபருவ தனுசுராசிக்காரர்களுக்கு தற்போது எதிர்கால மாற்றங்களுக்கான அமைப்புகள் நடந்து கொண்டிருக்கும். குறிப்பாக உங்களில் பலர் எதிர்கால வாழ்க்கை அமைப்பிற்கான நிகழ்வுகளை சந்திப்பீர்கள். 30 வயதிற்குபட்டவர்கள் மனதில் திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்திக் கொண்டிருப்பீர்கள். அவை அனைத்தும் யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் சிக்கலின்றி நிறைவேறும். 

மகரம்: 

சுபக்கிரகங்கள் மூன்றும் அஷ்டமத்தில் அமர்ந்து எட்டாமிடத்தை வலுப் படுத்துவதாலும் அங்கே அன்னிய மத, இன, மொழியை குறிக்கும் ராகுபகவான் இருப்பதாலும் இந்த வாரம் மகரராசிக்காரர்கள் சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் இருந்து எதிர்பாராத அதிர்ஷ்ட நிகழ்வுகளையும், பண வரவுகளையும் சந்திக்கும் வாரமாக இது இருக்கும்.

குறிப்பாக இஸ்லாமிய நண்பர்கள் மூலமாக சிலர் எதிர்பாராத நல்ல விஷயங்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த ஒருவரை இந்த வாரம் பார்ப்பீர்கள். அவர் மூலம் நன்மைகளும் இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் குறிப்பிட்ட சிலருக்கு உயரமான இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும். 

மலையும் மலைசார்ந்த இடங்களில் சுரங்கம் கிரஷர் ஜல்லி கிரானைட் போன்ற தொழில் வைத்திருப்பவர்களுக்கும் அங்கே வேலை செய்பவர்களுக்கு இந்தவாரம் நன்மைகளைத் தரும் விஷயங்கள் நடக்கும். கடந்த சிலமாதங்களாக உங்களுக்கு இருந்து வந்த கலக்கமான விஷயங்கள் இனிமேல் இருக்காது.

கும்பம்: 

ஆறுக்குடைய சந்திரன் ஆறாமிடத்தில் வலுப்பெற்று சூரியனுடன் இணைந்து அமாவாசை யோகத்தில் இருக்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. ராசிக்கு குருபார்வை இருப்பதோடு மற்ற இரு சுபர்களான சுக்கிரனும், புதன் ராசியை பார்ப்பதால் கும்பராசிக்கு குறைகள் எதுவும் சொல்வதற்கு இந்த வாரம் இல்லை.

ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் வார ஆரம்பத்தில் இனம்புரியாத மனக்கலக்கங்களும் தவறாக ஏதாவது நடத்து விடுமோ என்கிற இனம் தெரியாத பயஉணர்வும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ராசியை மூன்று சுபக்கிரகங்கள் வலுப்பெற்று பார்ப்பதால் எந்தவிதமான எதிர்மறை பலன்களும் கும்பராசிக்கு நடைபெறாது என்பது உறுதி.

கும்பராசிக்காரர்கள் அதிகமாக யோசித்துச் செயல்படும் குணமுடையவர்கள் என்பதால் சந்திரன் வலுப்பெறும் நாட்களில் மனக் குழப்பத்தில் இருப்பீர்கள். வரும் அஷ்டமகுரு கெடுதல்களை செய்வாரோ என்று நினைக்க வேண்டாம். ஆதிபத்திய விஷேசம் இல்லாத குருபகவான் ஆறு, எட்டு, பனிரெண்டில் வரும் போது உங்களுக்கு நன்மைகளை மட்டுமே தருவார். எனவே எதிலும் எதிர்மறையாக யோசிக்காமல் நல்லவைகளை மட்டுமே நினைத்து நல்லவிதமாக செயல்பட்டு உயர்வுகளை பெறுங்கள்.

மீனம்:

கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக உழைப்புக்கேற்ற பலன் கிடைக்காமலும், கஷ்டப்பட்டு முயற்சி செய்தும் காரியம் கைகூடாமலும், கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் ஒத்துழைக்காமலும் இருக்கின்ற மீனராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான அமைப்புகளை உருவாக்கி தரும் காலம் இது.

குருப்பெயர்ச்சி முதல் நல்லவைகள் ஆரம்பிக்க உள்ளதால் இனிமேல் நன்றாக இருக்க போகின்ற நீங்கள் சந்தோஷமான விஷயங்களை தற்போது உணர்வீர்கள். வரும் குருப்பெயர்ச்சியில் ரிஷபம், மகரம், மீனம் ஆகிய மூன்றுராசிகளையும் குருபகவான் பார்ப்பார் என்றாலும் ராசியை ராசிநாதன் பார்ப்பது மீனத்திற்கு மட்டுமே உள்ள அமைப்பு என்பதால் பனிரெண்டு ராசிக்காரர்களிலும் கூடுதலாக நன்மைகளை அனுபவிக்க இருப்பது மீனம் மட்டுமே என்பதால் இனிமேல் உங்களுக்கு குறைகள் எதுவும் இல்லை.

அடுத்தவாரம் முதல் உங்களின் கடந்தகால தவறுகள் அனைத்தும் உங்களாலேயே திருத்தப்பட்டு உங்களின் வாழ்க்கை சீரமைக்கப்படும் என்பதால் இந்த வார கிரக அமைப்புகளால் மீனராசிக்கு சாதகமற்ற பலன்கள் எதையும் சொல்வதற்கு இல்லை.

No comments :

Post a Comment