Monday, 15 August 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (15.8.2016 முதல் 21.8.2016)

மேஷம்:

மேஷராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். பெரிய தொந்தவுகள் எதுவும் வராது. சிலருக்கு மட்டும் ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும் வாரமாக இது இருக்கும்.

அடங்கியிருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைக்குனிவை தரலாம். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். சிறிய பிரச்னை என்றாலும் உடனடியாக மருத்துவரிடம் செல்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இந்த வாரம் மூக்கை நீட்ட வேண்டாம். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பு இருக்கிறது.

ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். எதிலும் நிதானமாக இருப்பதன் மூலம் அடுத்தவர்களைப் பகைத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம்.

ரிஷபம்:

இதுவரை பணவரவுகளிலும் பொருளாதார விஷயங்களிலும் சிக்கல்களை சந்தித்தவர்கள் இப்போது அவை நீங்கி நல்ல வருமானமும், திடீர் பணவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவத்துறையினர், சிகப்பு நிறம் சம்மந்தப்பட்டவர்கள், கையில் ஆயுதங்களை கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல பலன்கள் நடக்கும்.

புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. ரிஷபராசிக்கு இனிமேல் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை. அனைத்திலும் நல்லது நடக்கும்.

மிதுனம்: 

இந்தவாரம் தொழில் விஷயத்தில் உங்களுக்குச் சங்கடங்கள் இருந்தாலும் முடிவில் அனைத்தும் மிதுனராசிக்கு சாதகமாகவே முடியும். எனவே வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இருக்கும் சிக்கல்கள் உங்களை ஒன்றும் செய்யப்போவது இல்லை, வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்களுக்கு இது யோக வாரம். 

தந்தை வழி பெண் உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் வீண் செலவுகளும் விரயங்களும் இருக்கும். பயணம் செல்வீர்கள்.

தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல் நலத்தில் கவனம் வைக்க வேண்டும். கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. ஆறில் செவ்வாய் இருப்பதால் கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக இருப்பது நல்லது.

கடகம்:

இந்த வாரம் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாவதால் கடகத்திற்கு கவலைகள் எதுவும் இல்லை. பணவரவு நன்றாகவே இருக்கும். ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும். தொழில் விஷயமாக பிரயாணம் செல்வீர்கள். மகன் மகளுக்கு திருமண உறுதி நிகழ்ச்சிகள் நடக்கும். 

யோகம் தரக்கூடிய கிரகங்கள் வலுவான நிலையில் இருப்பதால் சந்தோஷமான மனநிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். மறைமுகமான எதிரிகள் உங்களை கவிழ்க்கப் பார்த்தாலும் அவர்கள்தான் தோற்றுப் போவார்கள். கடகத்திற்கு இனிமேல் தோல்வி இல்லை. அனைத்து சிறப்புக்களும் சேரும் வாரம் இது.

தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இப்போது இருக்கும். ஒருசிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியானநேரம் என்பதால் இந்தநேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிம்மம்:

இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்டநாட்கள் போராடிக்கொண்டு இருந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து லாபங்களும், பண வரவும் கிடைக்கும் வாரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்களுக்கு சிறிது தேக்கத்தை கொடுத்தாலும் முடிவில் அனைத்து விஷயங்களும் நன்மையாகவே அமையும்.

ராசிநாதன் அடுத்தவாரம் முதல் ஆட்சி பெற்ற நிலையில் சிலவாரங்கள் இருப்பார் என்பதால் பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷப்படும்படியான சம்பவங்களும் அவர்களால் பெருமைகளும் இருக்கும். சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

நீண்டகாலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு கைகொடுக்கும் வாரம் இது. பூர்வீக சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு இப்போது எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். முதல் திருமணம் முறிந்த சிலருக்கு இந்த வாரம் இரண்டாவது திருமணத்திற்கான அமைப்புக உருவாகும்.

கன்னி: 

இந்த வாரம் கன்னிக்கு செலவுகளும், வீண் விரயங்களும் உள்ள வாரமாக இருக்கும். இதுவரை நன்றாகப் போய்க் கொண்டிருந்த விஷயங்கள் சற்று சுணக்கத்துடனும், தாமதமாகவும் நடைபெறும் வாரமாக இது இருக்கும். சிலர் அனைத்திலும் எதிர்மறை பலன்களை சந்தித்து குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். கவலை வேண்டாம். இந்த நிலை சிறிது நாட்கள்தான்.

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த வாரம் சிறந்த வாரம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம்.. வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். 

துலாம்: 

ஐந்தாமிடத்தில் கேது வலுப்பெறுவதால் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். இதுவரை குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இப்போது அவற்றை முடிப்பீர்கள்.

ராசிநாதன் வலுவிழப்பதால் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கும் நல்ல பலன்கள் உண்டு. 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்கு வாரத்தின் பிற்பகுதி நாட்கள் அனைத்துப் பிரச்னைகளையும் நீக்கி நிம்மதியை தரும் வாரமாக இது இருக்கும். இந்த வாரம் வேலை, தொழில் விஷயங்களில் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். குறிப்பாக சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும்.

இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பெண்கள் விஷயத்தில் கடன் வாங்க நேரிடலாம். குறிப்பாக சிலர் அக்கா தங்கைகளின் சுபகாரியத்திற்கு கடன் வாங்குவீர்கள்.

சிலருக்கு செய்யாத தவறுக்கு வீண்பழி வரலாம். பண வரவிற்கு குறைகள் எதுவும் இருக்காது. அனைத்திலும் சிலருக்கு தடைகள் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். ஆனாலும் எதுவும் எல்லை மீறி போகாமல் பரம்பொருள் காப்பாற்றுவார்.

தனுசு:

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் போன்றவர்கள் எதையும் நிதானமுடன் அணுகுவது நல்லது. தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். ராஜகிரகங்கள் வலுவுடன் இருப்பதால் எது வந்தாலும் சமாளிப்பீர்கள். புத்திசாலியான தனுசு ராசிக்காரர்களுக்கு சோதனைகள் எதுவும் இல்லை.

வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.

அலுவலகத்தில் வீண் பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத் துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும்.

மகரம்:

ராசிக்கு குருபார்வை இருப்பதால் மற்ற கிரகநிலைகள் கோட்சாரப்படி சரியில்லை என்றாலும் கூட மகரத்திற்கு தீயபலன்கள் எதுவும் நடக்காத வாரமாக இது இருக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் இனிமேல் நல்லபடியாக கிடைக்கும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும்.

வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது.

தொழில், வியாபாரம் போன்றவைகள் சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். சிறிது நல்லவை நடப்பது போல தோன்றியவுடன் அகலக்கால் வைக்க வேண்டாம். பொருத்தம் இல்லாத வேலையில் இஷ்டம் இல்லாமல் இருந்து வந்த இளைஞர்களுக்கு இந்த வாரம் மாற்றங்கள் உண்டு.

கும்பம்:

கும்பராசிக்காரர்கள் தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வெற்றியைத் தரும் வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரமாக இது இருக்கும். செவ்வாய் தனது நான்காம் பார்வையால் ராசியைப் பார்ப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் பரப்பரப்பாக கோபத்துடன் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சாதாரண சிறு விஷயத்திற்காக சண்டை போடுவீர்கள். சிறிய விஷயத்தைப் பெரிதாக்குவீர்கள் என்பதால் யாரிடமும் வாக்குவாதம் வேண்டாம். நிதானம் தேவை. எங்கும், எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம்.

நீண்ட நாள் வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பணம் வந்து சேரும். அதேநேரம் சேமிக்க முடியாமல் செலவுகளும் அதிகம் இருக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வருமானம் நன்றாக இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு இது முன்னேற்றமான வாரம். கலைஞர்களுக்கு இந்த வாரம் இனிய வாரமாக இருக்கும். தேடிப் போகாமலேயே வாய்ப்புக்கள் வரும்.

மீனம்:

இந்தவாரம் மீனத்திற்கு கெடுதல்கள் சொல்ல ஏதும் இல்லை. வாழ்க்கைத்துணையைக் குறிக்கும் ஏழாம் வீடு வலுப் பெற்று இருப்பதால் கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும்.

அனைத்திலும் உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். புதிய முயற்சிகள் கை கொடுக்கும். யாருடனும் சண்டை செய்யாதீர்கள். தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் முட்டுகட்டைகளும் விலகும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

No comments :

Post a Comment