Tuesday, 26 July 2016

மாலைமலர் வாரராசி பலன்கள் (25.7.16 முதல் 31.7.16)

மேஷம்:

வாரம் முழுவதும் யோகாதிபதி சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதும் ராசியை குருபார்ப்பதும் இந்தவாரம் இதுவரை மேஷராசிக்கு இருந்து வந்த மனக்கஷ்டங்களை போக்கி நல்ல நிகழ்சிகளையும் சிரமங்கள் இல்லாத வாரத்தையும் உருவாக்கும் என்பது உறுதி.

அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலை இருக்கும் என்பதால் யாருக்கும் எதுவும் செய்து தருவதாக உறுதி அளிக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவர் கோபித்தால் கூட மற்றவர் அடங்கி போவது நல்லது.

சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

ரிஷபம்:

வார ஆரம்பத்தில் சந்திரன் பதினொன்றாமிடத்தில் இருப்பதும் அதன் பிறகு குருவின் பார்வையில் இருப்பதும் ரிஷபராசிக்கு அதிர்ஷ்டத்தையும், பண வரவுகளையும் தரும் அமைப்பு என்பதால் கிடைக்காது என்று கைவிட்டுப் போன நிலுவைத்தொகையோ இதுவரை கிடைக்காமல் இருந்த பாக்கித்தொகையோ இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கும்.

வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான வாரம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் இந்தவாரம் தன் விரோதியான சந்திரனின் வீட்டில் இருந்த நிலை மாறி அதிநட்பு வீடான சூரியனின் வீட்டிற்கு மாறுவதால் இந்த வாரம் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வாரமாகவும் அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கும் வாரமாகவும் இருக்கும்.

முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு.

கடகம்:

வாரம் முழுவதும் தொழில்ஸ்தானம் எனப்படும் பத்தாமிடத்திலும் லாபஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் உச்சமாகவும் உங்கள் ராசிநாதன் சந்திரன் இருப்பதால் இந்தவாரம் கடகராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் நல்ல மாற்றமும் லாபம் வரத் தக்க அமைப்புகளும் ஒன்றுகூடி உங்களுக்கு நன்மைகளை தரும் வாரமாக இருக்கும்.

கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கித் தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். காவல் துறையினருக்கு பதவி உயர்வு உண்டு. அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

சந்திரன் செவ்வாய் சனி இருவர் பார்வையிலும் இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிர்பாராத வருமானங்கள் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

சிம்மம்:

வாரஆரம்பம் சந்திராஷ்டம தினமாக ஆரம்பித்தாலும் பிற்பகுதியில் சந்திரன் ஒன்பது பத்தாமிடங்களில் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்தவாரம் சிம்மராசிக்கு தந்தையின் விஷயத்தில் நன்மைகள் நடப்பதும் குறிப்பிட்ட சிலருக்கு அறப்பணியோ ஆலயத்திருப்பணியோ செய்யும் வாய்ப்புகள் கிடைப்பதும் இருக்கும்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

வீட்டில் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கன்னி:

ராசிநாதன் புதன் வலுப்பெற்றிருப்பதும் லாபாதிபதி சந்திரன் வாரம் முழுவதும் நல்ல இடங்களில் இருப்பதும் உங்களுக்கு யோகம் அளிக்கும் அமைப்புகள் என்பதால் இந்த வாரம் கன்னி ராசிக்கு எல்லா விஷயங்களிலும் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதும் இருக்கும்.

எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் மிக சிறப்பான வாரம் இது. குறிப்பாக பெண்களுக்கு மிக நல்ல பலன்கள் நடக்கும். 

விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டு பயணம் அமையும். வியாபாரிகளுக்கு இது மிகவும் அருமையான வாரம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த வாரம் முன்னேற்றமான வாரமாக இருக்கும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் இந்த வாரம் முதல் லாபத்தில் இருப்பதால் சுக்கிரன் சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் துலாம்ராசிக்காரர்கள் குறிப்பாக கலைத்துறையினர், ஓட்டல் நடத்துபவர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், டெக்ஸ்டைல்ஸ் கடைக்காரர்கள் போன்றவர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக இருக்கும்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

துலாம் ராசிக்காரர்களுக்கு இப்பொழுது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள்.

விருச்சிகம்:

கேட்டை நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள். உங்களின் நண்பர்களே விரோதியாக மாறி உங்களுக்கு பின்னால் பேசி உங்களை வெறுப்பேற்றும் காலம் இது.

ஒன்பது பத்திற்குடைய சூரியனும், சந்திரனும் இந்த வாரம் வலுவான நிலையில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் மந்தமாக நடந்தாலும் இலாபகரமாக நடந்து உங்களுக்கு நன்மைகளை தரும் வாரமாகவும் இது இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை நடந்து வந்த சிக்கல்களுக்கு இந்தவாரம் தீர்வு கிடைக்கும்.

தனுசு:

ராசிநாதன் குருபகவான் ராகுவுடன் இணைந்து பலவீனமாக இருக்கும் நிலை இன்னும் இரண்டு வாரங்களில் மாறப்போவதால் இதுவரை தனுசு ராசிக்காரர்களின் வேலை, தொழில் போன்ற ஜீவனஅமைப்புகளில் இருந்து வந்த தடைகளும் எதிர்மறை அனுபவங்களும் நிவர்த்தியாகி இனிமேல் சிரமங்கள் இல்லை என்ற நிலை இப்போது உருவாகும். 

கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

பெண்களுக்கு இது நல்ல வாரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். அலுவலகத்தில் மரியாதை இருக்கும். பணிச்சுமை குறையும். வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு.

மகரம்:

வாரம் முழுவதும் சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதால் இந்த வாரம் மகரராசிக்கு சிக்கல்கள் எதுவும் இல்லாத சந்தோஷம் மட்டுமே இருக்கக் கூடிய வாரமாக இருக்கும். வாரக்கடைசியில் தனஸ்தானமான இரண்டாம் வீட்டை மூன்று கிரகங்கள் ஒன்று கூடி பார்ப்பதால் வருமானத்திலும் உங்களுக்கு குறைகள் வரப்போவது இல்லை.

தொழில், வியாபாரம் போன்றவைகள் வெகு சிறப்பாகவும், லாபகரமாகவும் நடக்கும். அலுவலகங்களில் மன மகிழ்ச்சியான சம்பவங்கள் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பாகப்பிரிவினை போன்ற பூர்வீக சொத்து பிரச்சனைகளை தள்ளி வையுங்கள்.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் திரும்பி வரும். நீண்ட நாள் பாக்கி வசூல் ஆகும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு உண்டு. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

கும்பம்:

வாரத்தின் இறுதியில் ராசிக்கு குருவின் பார்வையோடு யோகாதிபதிகளான சுக்கிரன் புதனின் பார்வையும் இருப்பதால் இந்த வாரம் கும்பராசிக்காரர்களுக்கு மனமகிழ்ச்சி தரும் விஷயங்களும் குடும்பத்தில் தாய் வழி உறவினர்களால் நன்மை தரும் அமைப்புகளும் இருக்கும்.

வேலை, வியாபாரம் தொழில் போன்ற அனைத்து ஜீவன அமைப்புக்களும் நல்ல லாபத்துடன் இயங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். சுக்கிரபலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.

குறிப்பிட்ட சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு. வெளியூர் மாறுதல், செக்சன் மாறுதல் இருக்கும். பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.

மீனம்:

ஐந்திற்குடைய சந்திரன் இந்த வாரம் உச்சம் பெறுவதோடு வாரம் முழுவதும் நல்ல இடங்களில் இருப்பது கடந்த சில வாரங்களாக நல்லவைகள் நடக்காத உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் மீனத்திற்கு கவலை தரும் விஷயங்கள் எதுவும் இனிமேல் இல்லை.

வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள். கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.

இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். நீண்ட நாட்களாக புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஒரு சிலர் குல தெய்வ வழிபாட்டிற்கு குடும்பத்துடன் செல்வீர்கள். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

No comments :

Post a Comment