Saturday, 16 July 2016

2016 ஆடி மாத பலன்கள்

மேஷம் :

இந்தமாதம் மேஷராசிக்காரர்களுக்கு முதல் பதினைந்து நாட்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரும் மாதமாகவும் ஆடியின் பின்பாதி நாட்கள் சுமாரான பலன்கள் தரும் மாதமாகவும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. இல்லையெனில் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை வரும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால் அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள். புத்திரஸ்தானத்தில் ராகுவிற்கு குருவின் சேர்க்கை இந்தமாதம் விலகுவதால் பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனக்குறை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பருவவயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் ஒரு கண் வையுங்கள். குடும்பஸ்தானம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையான பொருள் ஏதாவது வாங்குவீர்கள்.

கணவன், மனைவி உறவு சுமுகமாக இருக்கும். இளையபருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்தமாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த மாதம் உண்டு.

ரிஷபம் :

இந்தமாதம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எதிர்த்தன்மையுள்ள கிரகங்களுடன் பகைவீடுகளில் இயங்குவதால் ஆடிமாதம் ரிஷபராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் தரும் மாதமாகவே இருக்கும். அதேநேரத்தில் பணவிஷயத்திலோ அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளிலோ கெடுதல்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. பூர்வீகசொத்து சம்மந்தமாக பிரச்சனைகள் உள்ளவருக்கு இந்த மாதம் சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். மேலும் இந்த மாதமுடிவில் குருபகவான் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் இனிமேல் ரிஷபத்திற்கு நல்ல வருமானங்கள் வரும். குறிப்பாக சிலருக்கு மறைமுகமான பணவரவுகளும் இனிமேல் உண்டு. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.

விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். சமீபகாலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்லவேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும்.

மிதுனம் :

மிதுனநாதன் புதன் ஆடிமாதம் முழுவதும் மிகவும் நல்ல இடங்களில் இருப்பதால் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள் நடைபெறும் மாதமாக இருக்கும். அதேநேரத்தில் இந்த மாதம் உங்களின் யோகாதிபதி சுக்கிரன் பலவீனமாவதால் நன்மைகள் இருந்தாலும் தேவையற்ற வீண் செலவுகளும், விரயங்களும் இருக்கும் என்பதை காட்டுகின்றன. வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள்.

சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டுத் துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும்.

கடகம் :

கடக ராசியினர் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார மேன்மைகளைத் தரும் மாதம் இது. இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் இருக்கின்றன.

கடகராசி இளைய பருவத்தினரை அவர்களது பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஐந்தில் செவ்வாய் சனி வலுவாக இருப்பதால் அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் இந்தமாதம் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.

ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம் :

சிம்மராசியை சனிபகவான் பார்த்து உங்கள் பிடிவாதத்தை அதிகப்படுத்தி, அடுத்தவர்களை எரிச்சல்படுத்தினாலும் இந்தமாதம் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவீர்கள் என்பது நிச்சயம். பத்தாம் இடத்தை சனி பார்த்து ஜென்மராசியில் ராகு,கேதுக்கள் குருவுடன் சம்மந்தப்பட்டதால் கடந்த சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்.

குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும்.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். தனியார் துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம் கவனமுடன் இருக்க வேண்டும். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். கலைஞர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில் அதிபர்கள் போன்ற அனைவருக்கும் இந்த மாதம் நல்ல மாதமாகவே அமையும்.

கன்னி :

கன்னிராசிக்காரர்கள் ஆடிமாதம் முழுவதும் மனமகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள் என்பது நிச்சயம். அதேநேரத்தில் இந்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் ராசிக்கு குரு மாறுகிறார். ஒரு நிறுவனம் அல்லது ஒரு அமைப்பில் தலைமைப் பதவியில் இருப்பவருக்கு ஜென்மகுரு சிக்கல்களை தரும் என்பதால் உங்களுக்கு கீழே பணிபுரிவோர்களை புரிந்து கொள்வது நல்லது. எதையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில் சுவருக்குக் கூட கண்களும், காதுகளும் இருக்கின்றன என்பதை மறக்காதீர்கள்.

ராசிநாதன் புதன் வலுவுடன் இருப்பதால் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். ஆறு, பனிரெண்டில் ராகு கேதுக்கள் இருப்பதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும்.

துலாம் :

முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த மாதம் நல்லவைகள் நடக்கும். ஆனாலும் ராசியும் ராசிநாதனும் வலுவாக இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு வரப் போவது இல்லை. வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருந்த சிலருக்கு இந்த மாதம் நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு இந்த மாதம் சிறப்புகள் தேடி வரும். நான்கு பேர் கூடும் இடத்தில் மரியாதையுடன் நடத்தப் படுவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் இடம் தேடி வரும் மாதம் இது. மாணவர்கள் நன்கு படிப்பீர்கள்.

உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. குருட்டாம்போக்கு அதிர்ஷ்டம் இந்த மாதம் கை கொடுக்கும். முக்கியமான சில பிரச்னைகள் இந்த மாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது.

எதிர்பாராத பணவரவு இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள்.

விருச்சிகம் :

இந்தமாதம் முதல் விருச்சிகராசிக்கு சனியின் கெடுபலன்கள் குறைந்து நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். கணவன்மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்தமாதம் சில நல்ல அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். உங்களில் சிலருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது. இந்த மாதம் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் இருக்கும் பாபக்கிரகங்களால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.

நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஏழாமிடம் வலுப்பெறுவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் இந்த மாதம் மீண்டும் சேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு :

தனுசுநாதன் குரு ராசியைப் பார்க்கும் நிலையில் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் இப்போது நல்லநிலையில் இருக்கும். மாத இறுதிவரை ராசிநாதன்பார்வை ராசிக்கு இருப்பதால் எவ்வித, எதிர்மறைபலன்கள் உங்களுக்கு நடந்தாலும் அவை அனைத்தும் சூரியனை கண்ட பனி போல உடனே மறைந்து கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி.

இந்த மாதம் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் நன்றாக நடைபெறும். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.

இளையபருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். ஏழுக்குடையவன் எட்டில் மறைவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் மட்டும் சற்று கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது. செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இந்த மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும் இருக்கும் என்பதால் வீடு எந்த நேரமும் கலகலப்பும், சிரிப்புமாக இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் நன்மைகள் உண்டு.

மகரம் :

மகரத்தினருக்கு இப்போது எதிர்காலத்திற்கான மாற்றங்கள் நடைபெறும் காலம். இந்த மாத இறுதியில் உங்களுக்கு சாதகமான குருப்பெயர்ச்சி நடப்பதால் முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான நல்ல மாற்றங்களை இப்போது சந்திப்பீர்கள். சிலருக்கு நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் இந்த மாதத்தில் இருந்து விலக ஆரம்பிக்கும்.

நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாத முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இந்த மாதம் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு.

கும்பம் :

கும்பராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் செய்யும் தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மிகுந்த லாபமாகவும், சிறப்பாகவும் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இந்த மாதம் கிடைக்கும். அதேநேரத்தில் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் இந்த மாதம் சுமாராக தான் இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம். நடுத்தர வயதுடைய கும்பராசிக்காரர்கள் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறுஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மீனம் :

மீனராசிக்கு தொழில், வேலை விஷயங்களில் இந்த மாதம் முதல் சிறப்பான பலன்கள் நடக்கும். இந்தமாத இறுதியில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் நீங்கப் போவதால் இதுவரை நடக்காத அனைத்தும் உங்களுக்கு நடந்து, கிடைக்காத அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து, தெய்வ அருள் உங்களை நல்லபடியாக வாழவைக்கப் போகிறது.

நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். அரசுஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல் துறையினருக்கு இந்தமாதம் நல்லமாதமாக அமையும். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும்.

பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் நிறைவாகவே இருக்கும். இதுவரை வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் வேலையில் சேருவீர்கள். சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். வெகுநாட்கள் திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும்.

No comments :

Post a Comment