Monday, 18 July 2016

மாலைமலர் வாரராசி பலன்கள் (18.7.16 - 24.7.16)

மேஷம்:

சிவப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், விளையாட்டுத்துறையினர், ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டும் துறையில் உள்ள மேஷராசிக்காரர்களுக்கு தனலாபம் உள்ள வாரம் இது. அதேநேரத்தில் கையில் இருந்த சேமிப்பு கரையும் வாரமாகவும் இது இருக்கும். செலவுகள் வரும் என்றாலும் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும்.

எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தவாரம் நடக்கும். மனதில் ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். எவரையும் நம்ப வேண்டாம். சுக்கிரனின் வலுவால் தொழிலிலும், அலுவலகத்திலும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னைகளை சுலபமாக சமாளிப்பீர்கள் என்பதால் தொல்லைகள் இல்லாத வாரம் இது.

ரிஷபம்:

இந்த வாரம் ரிஷபராசிக்காரர்களின் தனித்திறமைகள் மற்றவர்களால் அடையாளம் காணப்படும் சம்பவங்கள் நடைபெறும் வாரமாக இருக்கும். எந்த ஒரு செயலும் அதிகமுயற்சி இன்றி வெற்றியாக முடிந்து உங்களுக்கு சந்தோஷம் தரும் வாரமாகும் இது. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

பெண்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

மிதுனம்:

மிதுனராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அருகில் இருக்கும் வாரமாக இது இருக்கும்.. வாழ்க்கைத்துணை மூலமும் இந்த வாரம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தவாரம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். ஆறாமிடம் வலுப்பெறுவது விரோதிகளை உருவாக்கும் என்பதால் எச்சரிக்கை அவசியம். எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வது பகைமையில் கொண்டு போய்விட்டு விடும்.

பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள், கலைத்துறையில் இருப்பவர்கள், அன்றாடத் தொழில் செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச் சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான்.

கடகம்:

இந்தவாரம் உங்களில் சிலருக்கு கடன் வாங்கி செலவு செய்யவேண்டி வரும்.. வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது. ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம்.

பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப்பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியது இருக்கும். பெண்களுக்கு மட்டுமேயான வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம்.

சிம்மம்:

செவ்வாயின் வலுவால் பின்னடைவுகள் அனைத்தையும் பிறருடைய உதவியால் சுலபமாக சமாளிப்பீர்கள். குறிப்பாக வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவும் வாரமாக இது இருக்கும். ஆயினும் கோர்ட்,கேஸ், வழக்கு விவகாரங்களில் சிக்கி அலைவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்பதால் அனைத்திலும் கவனம் தேவை.

இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலைவிஷயமாக வெளிநாடு செல்வீர்கள். முக்கியமான விஷயங்களில் முடிவெடுப்பதை சிறிது காலம் ஒத்திப் போடுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அவசரப்படக் கூடாது.

இந்தவாரம் வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளில் குறைகள் இருக்காது. மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

கன்னி:

இந்தவாரம் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கன்னிராசிக்காரர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் உங்களுக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.

குருபார்வையில் இருக்கும் கேதுபகவான் உங்களின் தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்களை தருவார். குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் இந்த வாரம் லாபம் அடைவீர்கள்.

கணவன் மனைவி உறவில் கருத்துவேறுபாடுகள் தோன்றுவதற்கு இந்த வாரம் வாய்ப்பிருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் ஒருவர் கோபத்தைக் காட்டினாலும் இன்னொருவர் அதைப் புரிந்துகொண்டு பணிந்து போவது ஒன்றும் கௌரவக்குறைச்சல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

துலாம்:

இந்தவாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதிலிருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

விருச்சிகம்:

தர்மகர்மாதிபதிகள் சூரியனும், சந்திரனும் பவுர்ணமி யோகத்தில் அமர்ந்து, ராசிநாதன் ஆட்சியாக இருந்தாலும் ராசியில் சனியும், பத்தில் ராகுவும் இருப்பதால் ஒரு விசித்திரமான கணிக்கச் சிரமமான கிரகநிலை இந்த வாரம் விருச்சிகத்திற்கு இருப்பதால் வாரம் முழுவதும் உங்களை நீங்களே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு புதிரான வாரமாக இது இருக்கும்.

அனுஷம் நட்சத்திரத்திற்கு துயரங்கள் விலகத் தொடங்கி கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மன அழுத்தம் கொடுக்கும் சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. சனி கொடுக்கும் அனுபவங்கள் அனைத்தும் நாற்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு எதிர்கால நன்மையைத் தரும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எதையும் இழக்க மாட்டீர்கள். இழந்தாலும் சனி முடிந்ததும் இரு மடங்கு சம்பாதிப்பீர்கள்.

பங்குச்சந்தை யூகவணிகம் ரேஸ் லாட்டரி போன்றவைகள் கை கொடுக்காது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். மறைமுக எதிரிகள் உருவாவார்கள் எனபதால் எவரிடமும் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் பிரச்னைகளும் செலவுகளும் இருக்கலாம்.

தனுசு:

தனுசுராசிக்கு ஆறுக்குடையவன் எட்டில் அமர்ந்து, பனிரெண்டிற்குடையவன் வலுவாகி, அஷ்டமாதிபதி எட்டைப் பார்த்து ஒருவிதமான விபரீத ராஜயோக அமைப்பு உண்டாவதால் எப்படி இந்த வருமானம் வந்தது என்று அடுத்தவருடன் பகிர்ந்து கொள்ள முடியாத பணவரவு கிடைக்கும் வாரமாக இது இருக்கும்.

அதேநேரம் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். இதுவரை தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலதிபர்களுக்கு இந்தவாரம் அரசு உதவி கிடைக்கும்.

மகரம்:

உங்களில் சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்கமுடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள். இந்த வாரம் உங்களின் தெய்வ பக்தி அதிகரிக்கும் வாரமாக இருக்கும்.

மகான்களின் தரிசனம் கிடைக்கும் வாரம் இது. ஆன்மிக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தெய்வ திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்:

இந்த வாரம் உங்களில் சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் அமையும். இளைஞர்கள் பெங்களூர் ஹைதராபாத் போன்ற வடமாநில பிரயாணம் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சுபத்துவமுடன் இருப்பதால் நல்ல பலன்களே நடைபெறும் என்றாலும் அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பின்பே நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியும்.

காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்கள் சிறப்புப் பெறுவீர்கள்.

குருபகவான் அதிநட்பு நிலையில் வலுவாக இருப்பதால் பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவுகளும், சந்தோஷங்களும் கிடைக்கும் . வயதான சிலர் தாத்தா, பாட்டியாக உயர்வு பெறுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து சந்தோஷச் செய்திகள் வரும். சிலருக்கு வாகனம் வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததைவிட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள்.

மீனம்:

ரேவதி நட்சத்திரக்காரர்கள் இந்த வாரம் தாயார் விஷயத்தில் அன்பையும், ஆதரவையும் அனுபவிப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு தாயார் வகையிலான சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் உங்களுக்கு சாதகமாக இப்போது முடியும். வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சந்தோஷங்கள் இருக்கும்.

திரவ ரீதியிலான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு உண்டு. விவசாயிகள் காய்கறி வியாபாராம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் அரசு, தனியார் துறை ஊழியர்களும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது.

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிக நல்ல வாரம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும்.

No comments :

Post a Comment