Monday, 11 July 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (11.7.16 - 17.7.16 )

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியைப் பார்த்து ராசி வலுவடைவதால் அஷ்டமச்சனியின் துன்பங்களை அனுபவித்து வரும் மேஷராசிக்காரர்கள் தற்காலிகமாக அதிலிருந்து விடுபட்டு இந்த வாரம் நீங்கள் நன்மைகளை அனுபவிக்கும் வாரமாக இருக்கும்.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். எனவே கோபத்தை தவிருங்கள். வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு தாமதங்களும் தடைகளும் ஏற்படும் என்பதால் எல்லாவிதமான சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் சுலபத்தில் நடைபெறுவது கடினம்.

நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். என்னதான் பிரச்சினை இருந்தாலும் ராசிநாதனின் வலுவால் உங்களின் அந்தஸ்து கௌரவம் பாதிக்காமல் பணவரவும் நன்றாக இருக்கும் என்பதால் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை.

ரிஷபம்:

வாரம் முழுவதும் ரிஷபராசிக்காரர்களுக்கு சந்தோஷமான நிகழ்ச்சிகளும், புத்துணர்வு தரும் சம்பவங்களும் நடந்து மகிழ்வைத் தரும் வாரமாக இது இருக்கும். ரிஷபத்தின் பிரச்னைகள் அனைத்தும் தீரும் வாரம் இது.

கணவன் மனைவி உறவு நல்ல முறையில் இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் நினைத்திருந்த திட்டங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகு விரைவில் குணமடைவார்கள். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும்.

குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் அருமை பெருமைகளை உணர்ந்து உங்களின் சொல்லைக் கேட்பார்கள். வீட்டிலும் அலுவலகத்திலும் எந்த பிரச்னைகளும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

மிதுனம்:

மூன்றுக்குடைய சூரியன் ராசியில் அமர்ந்ததால் கடந்த நான்கு வாரங்களாக பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டிருந்த மிதுனராசிக்காரர்கள் அனைவருக்கும் இந்தவாரம் சூரியபகவான் ராசியில் இருந்து விலகப் போவதால் பின்னடைவுகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் ஆரம்பிக்கும் வாரமாக இருக்கும்.

பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் இந்த வாரம் உண்டு. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

சிலருக்கு வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் லாபங்கள் குறைவாகத்தான் இருக்கும். தனஸ்தானம் வலுப் பெறுவதால் பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

கடகம்:

கடகநாதன் சந்திரன் வாரம் முழுவதும் வலுவான நிலையில் இருந்து வார இறுதியில் இரண்டிற்குடைய சூரியன் ராசியில் அமர்வதால் ராசியும் புனிதமடைந்து இந்தவாரம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமாக இருக்கும்.

எட்டில் இருக்கும் கேதுவால் உறவினர்கள் பங்காளிகள் போன்றவர்களால் தகராறுகளோ வழக்கு விவகாரங்களோ ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம். அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும். யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

சிம்மம்:

தனம், வாக்கு, குடும்ப வீட்டின் அதிபதி பதினொன்றாம் வீட்டில் ஆட்சிவலுவுடன் இருக்கும் அற்புதமான வாரம் இது என்பதால் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி அனைத்தும் இப்போது பலிக்கும் என்பதோடு அதிக சிரமமின்றி கிடைக்கும் பண வரவாலும் குடும்பத்தில் சந்தோஷம் கண்டிப்பாக உண்டு.

குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இப்போது இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு ஆகஸ்ட் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு திருமணம் நடைபெறும். இளைய பருவத்தினருக்கு காதல் வரக்கூடிய அமைப்பு இருக்கிறது. இதுவரை குழந்தைபாக்கியம் தாமதித்தவர்களுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.

சிறிய பிரச்னை என்றாலும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

கன்னி:

யோகம் தரும் கிரகங்கள் அனைத்தும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதாலும் புதனும், சுக்கிரனும் வாரஇறுதியில் லாபவீட்டில் இணைந்து வலுவாக இருப்பதாலும் இந்த வாரம் கன்னி ராசிக்கு கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. வாரத்தின் பிற்பகுதியில் சந்திரனின் தயவால் திடீர் பண வரவு ஒன்றும் உண்டு.

உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப் படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். கலைத்துறையில் இருப்பவர்க்கு இது மேன்மையான நேரம்.

பெண்களுக்கு நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம்:

ராசியில் செவ்வாய் இருப்பதால் சிறிய விஷயத்திற்கு கூட இந்த வாரம் கடுகடுவென இருப்பீர்கள் என்பதால் அடுத்தவர்கள் உங்களை கோபமூட்டி பார்த்தாலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். குறிப்பாக கணவர்-மனைவி இடையே கருத்து வேற்றுமைகள் வரும் வாரம் என்பதால் கோபத்தை ஒத்தி வைப்பது நல்லது.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வருகிறது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து ஆகஸ்டுக்கு மேல் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.

வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும்.

விருச்சிகம்:

வார பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் ஆட்சி, பத்தின்.அதிபதி ஒன்பதில் அமர்வு. என யோகக்கிரகங்கள் வலுவடைந்து இருப்பதால் நடக்கும் ஏழரைச்சனி இனிமேல் உங்களை கஷ்டப்படுத்தாது என்பது நிச்சயம். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் நினைத்து கலக்கம் அடையாமல் நாளை கிடைக்கப் போகும் வெற்றியை நினைத்தால் கவலைகள் ஏதும் இல்லை.

கடந்த சிலவாரங்களாக உங்களுக்கு நடந்த சம்பவங்களின் அர்த்தம் தற்போது புரியும். நெருங்கிய சிலரைப் பற்றி இப்போது நன்றாகத் தெரிந்து கொள்வீர்கள். இதுவரை விடைதெரியாத பல கேள்விகளுக்கு இப்போது பதில் தெரியும். இனிமேல் எந்தவழியில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதும் அந்த பாதையும் இப்போது கண்ணுக்குத் தெரியும்.

ஆகஸ்டு மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப்பின் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும். கடந்த காலங்களில் குழந்தைப் பேறு தாமதமாகி வந்தவர்களுக்கு இந்தவாரம் முதல் வழி பிறக்கும். இந்தாண்டு இறுதிக்குள் நிச்சயம் நல்ல செய்தியைக் கேட்பீர்கள்.

தனுசு:

எட்டில் இருக்கும் சுக்கிரனால் பெண்களால் வீண்பழியோ, சிரமங்களோ, செலவுகளோ வரும் என்பதால் இந்த வாரம் பெண்களை விட்டு சற்றுத் தள்ளியே இருக்க வேண்டிய வாரமாக இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் வலுவாக இருப்பதால் எது நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே இருக்கும் என்பதும் உறுதி.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது. வியாபாரிகள் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டியது அவசியம். வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்கும். எனவே அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். வேலை செய்யும் இடத்தில் முதலாளியாலோ அதிகாரியாலோ மனக் கசப்புக்கள் வருவதற்கும் சங்கடங்கள் தோன்றும் என்பதால் எதிலும் எச்சரிக்கையும் கவனமுமாக இருந்து பொறுத்துப் போவது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்கள் கடந்த ஒரு வருடமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களை ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மாற்றியமைத்து உங்களை நன்மைகள் நடக்கும் காலத்திற்குக் கூட்டிச் செல்லும் என்பதால் இப்போதே நல்லவைகளுக்கான ஆரம்பங்கள் உள்ள வாரமாக இது இருக்கும்.

இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள்.

வரும் குருப்பெயர்ச்சியில் குருபகவான் தற்போது இருக்கும் எட்டாமிடத்தில் இருந்து மாறி மிகவும் யோகம் தரும் ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு வந்து உங்கள் ராசியைப் பார்க்கப் போவதால் உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து மீண்டும் அதிர்ஷ்டம் தேடி வந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.

கும்பம்:

பத்தாம் வீட்டில் இரண்டு பெரும் பாவக்கிரகங்களான சனியும் செவ்வாயும் இணைந்து பாவத்துவ வலிமை பெற்றிருப்பதால் இந்த வாரம் சொந்தத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல், அடுத்தவரை நம்பாமல் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய வாரமாக இருக்கும்.

இதுவரை செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் அதைச் சற்று ஒத்தி வைப்பது நல்லது. ஆனாலும் மாற்றங்கள் வந்தே தீரும் என்பதால் வேலையை விட்டு வெளியேறுவதற்கான நெருக்கடிகள் உங்களுக்கு அதிகரிக்கக் கூடும்.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு. உங்களுடன் வேலை செய்பவர்களிடையே மிகவும் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய யோசனை கேட்கப்படும். கணவரால் பாராட்டப் படுவீர்கள். குழந்தைகளும் பெரிய அளவிற்கு உங்களை இம்சைப் படுத்த மாட்டார்கள்.

மீனம்:

ராசிநாதனும் யோகாதிபதியும் நல்ல இடங்களில் மாறப்போவதாலும் சகாய ஸ்தானாதிபதி ஐந்தாம் வீட்டில் இருப்பதாலும் இந்தவாரம் மீன ராசிக்காரர்களுக்கு நல்லவாரம்தான். வார ஆரம்பத்தில் சந்திராஷ்டமம் இருந்தாலும் யோக அமைப்புக்கள் இருப்பதால் கெடுபலன்களுக்கு பதிலாக நன்மைகளே இருக்கும்.

தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கதிற்கான அனைத்தையும் தற்போது நல்லவிதமாகச் செய்ய முடியும். இதுவரை அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக இருந்து வந்த தடைகள் ஆகஸ்டு மாதம் முதல் நீங்கப் போவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரிகளுக்கு இது மிகுந்த லாபங்கள் வரக்கூடிய ஒரு காலகட்டமாக அமையும்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். அரசுவேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்லசெய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ் குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும்.

3 comments :

  1. indha guru peyarchi palangal meena rasi ku mattum nanmaya illai ...meena lagnathukum nanmaya.....

    ReplyDelete
  2. அருமையான பதிவு சார்

    அம்பரீஷ் ஸாஸ்த்ரி
    savithaastro@gmail.com
    http://savithaastro.blogspot.in
    +91 9443711056

    ReplyDelete