Monday, 4 July 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (04.7.2016 - 10.7.2016)

மேஷம் :

ஒன்பதுக்குடைய குருவும், ராசிநாதன் செவ்வாயும் ராசியைப் பார்ப்பதால் வாரம் முழுக்க மேஷராசிக்கு நன்மையான பலன்கள் நடக்கும் என்பதைத் தவிர்த்து வேறு எதுவும் சொல்ல வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ராசியை செவ்வாய் பார்ப்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

யாரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டையோ போட வேண்டாம். குருபகவான் வலுவாக உள்ளதால் தனலாபம், பண வரவு இருக்கும். ஆறுக்குடைய புதபகவான் சுபவலுப் பெறுவதால் வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரம்தான். கலைஞர்களுக்கு புகழும், வாய்ப்பும் வரும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் நட்பு வலுவுடன் ஆட்சி பெற்ற புதனுடன் இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல யோக அமைப்பு. எனவே இந்த வாரம் குறைகள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்ல விசா கிடைக்காதவருக்கு இந்த மாதம் விசா வரும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். வயதான சிலருக்கு பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. உங்களில் சிலர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு. இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும்.

இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும். வழக்குகளால் அலைந்து கொண்டு நிம்மதி இழந்தவர்களுக்கு இப்போது வழக்கு வெற்றி பெறும் சூழல்கள் அமையும். எதிர்ப்புகள் விலகும்.

மிதுனம்

புதன் ராசியில் ஆட்சியாக இருப்பது மிதுனராசிக்கு சிறப்பான ஒரு யோக அமைப்பு. திருமணம் தாமதமான இளையவருக்கு இப்போது திருமணம் கூடி வரும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை இப்போது அடையாளம் காண்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு கேளிக்கை அனுபவங்கள் இருக்கும்.

வாரம் முழுவதும் நல்ல செயல்திறனுடன் இருப்பீர்கள். நன்கு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள். தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அரசு ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை முடித்துக் காட்டி, மற்றவரின் பாராட்டைப் பெறுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும், அவர் மூலம் ஆதாயங்களும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவருக்கு வீடோ, மனையோ அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வாகன யோகம் பெறுவீர்கள்.

கடகம்

ராசிநாதன் சந்திரன் இந்த வாரம் ராசியில் ஆட்சியாக இருப்பார் என்பது இந்த வாரம் கடகராசிக்கு நன்மைகள் நடக்கும் என்பதைக் காட்டுகிறது. உங்களின் அந்தஸ்து, கௌரவம் மேம்படும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. வார ஆரம்பத்திலேயே சந்திரன் வலுப்பெறுவதால் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. எதிர்பாராத பணவரவும் இந்த வாரம் இருக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும், கலைஞர்களுக்கும் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம்.

சிம்மம்

வார ஆரம்பத்தில் பனிரெண்டுக்குடைய சந்திரன் ஆட்சி பெறுவதும் பின்னர் ராசியில் இருக்கும் எட்டுக்குடைய குருவுடன் இணைவதும் இந்த வாரம் மாற்றங்கள், பயணங்கள், வீண் விரயங்கள் உள்ள வாரமாக இருக்கும். என்பதைக் காட்டுகிறது. குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டு விஷயங்களும் கை கொடுக்கும்.

விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு அத்தியாவசிய பொருள் குடும்பத்திற்கு இந்த வாரம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு. மைத்துனர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் சிறப்படையும். வாகன மாற்றம் உண்டு. புதியநபர்களிடம் இந்த வாரம் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டாம்.

தந்தைவழி உறவினர்கள், பங்காளிகள் போன்றோர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். ஒரு சில இளைய பருவத்தினருக்கு அவர்கள் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்கள் ஏற்படும். விவசாயிகள், வியாபாரிகள், அரசு, தனியார்துறை, ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற சகல தரப்பினருக்கும் இந்த வாரம் மாற்றங்களை தரும் வாரமாக இருக்கும்.

கன்னி

கன்னிநாதன் புதன் வாரம் முழுக்க பத்தாமிடத்தில் ஆட்சியாக இருப்பதால் இந்த வாரம் உங்களுக்கு யோக வாரமே. யோகாதிபதிகள் சனியும் சுக்கிரனும் வலுவாக நல்ல இடங்களில் இருப்பது கன்னிக்கு எந்தக் கவலையும் இனி இல்லை என்பதை காட்டுகிறது.

இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும் என்பதால் வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையைக் காட்ட முடியும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் வசூலாகும். கொள்முதல் நன்றாக இருக்கும். சுக்கிர பலம் நன்றாக இருப்பதால் கலைஞர்களுக்கு பிரமாதமான வாரம் இது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

துலாம்

ராசிநாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் நட்பு நிலையில் இருப்பதோடு தன்னுடைய நண்பரான புதனுடன் இணைந்திருப்பதும், வார பிற்பகுதியில் தொழில் ஸ்தானத்திற்கு மாறுவதும் உங்களுக்கு நன்மைகளும் சாதகமற்ற போக்குகளும் உள்ள அமைப்பு. இதனால் உங்களுக்கு குறுகிய தூரப்பயணங்கள் மற்றும் விருப்பமில்லாத மாற்றங்கள் இருக்கக் கூடிய வாரமாக இது இருக்கும்.

அம்மா வழி உறவினர்களால் லாபம் உண்டு. பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.இது வரை இருந்து வந்த கஷ்டங்கள் இனிமேல் படிப்படியாக விலகத் தொடங்கும்.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் இருந்தவருக்கு உடனடியாக வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி, தீர்வுகள் தெரிய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. கலைஞர்கள் வளம் பெறுவார்கள்.

விருச்சிகம்

ராசிநாதனே ஆறுக்குடையவனுமாகி ஆறாமிடத்தையே பார்ப்பது விருச்சிகத்திற்கு சாதகமற்ற கிரக அமைப்புத்தான் என்றாலும் சனிபகவான் சென்று கொண்டிருக்கும் நட்சத்திர நாதன் புதன் ஆட்சி வலுப் பெற்று இருப்பதால் கெடுதல்கள் எதுவும் இல்லாத வாரமாக இது இருக்கும்.

சுயதொழில் செய்வோர் தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்வுகள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது. வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு இந்த வாரம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். மாமியார் வீட்டில் மதிக்கப் படுவீர்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த வாரம் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் வரும். ஒரு சிலர் இந்த வாரம் புகழ் பெறுவீர்கள்.

தனுசு

தனுசுநாதன் குருபகவான் ராசியைப் பார்ப்பதோடு அவர்க்கு வீடு கொடுத்த யோகாதிபதி சூரியனும் கூடவே புதனும் சுக்கிரனும் ராசியைப் பார்க்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் உங்களுக்கு தொந்தரவுகள் எதுவும் இருக்காது.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சற்று முன் பின்னாக இருந்தாலும், லாபத்தில் குறைவிருக்காது. சொந்தத்தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் உண்டு. கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை கேட்கும் உதவிகளை செய்வீர்கள். நட்பு வட்டாரம் கை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த ஒருவரை இந்த வாரம் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் உறுதி ஆகும். மருத்துவத்துறையினர், சிவில் இன்ஜினியர்கள், சிவப்புநிற பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ரியல்எஸ்டேட் துறையினர், சீருடை பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.

மகரம்

ராசிநாதன் சனி செவ்வாயுடன் இணையாமல் தனித்து ராசியைப் பார்ப்பதும் ஒன்பது பத்துக்குடைய தர்மகர்மாதிபதிகள் சுக்கிரனும் புதனும் இணைந்து அதில் புதன் ஆட்சி பெற்றதும் யோகம் என்பதால் இந்த வாரம் மகரத்திற்கு நல்ல வாரமே.

பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்திருந்த புனித ஸ்தலங்களுக்கு சென்று பிராத்தனைகளை நிறைவேற்ற முடியும். தந்தையுடன் பிறந்த அத்தைகள் உதவுவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும்.

குறிப்பிட்ட சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருந்து வந்த வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள். வியாபாரிகள், கலைஞர்கள், இளைஞர்கள், தலைமைப் பதவியில் இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்றோருக்கு இது சிறப்பான நல்ல பலன்களை தரும் வாரமாக அமையும்.

கும்பம் :

கும்பத்தின் அவயோகிகளான ஆறு எட்டுக்குடைய சந்திரனும் புதனும் ஆட்சிவலுப் பெறுவதால் இந்தவாரம் உங்களுக்கு சங்கடங்களும் அதற்கேற்ற தீர்வுகளும் கலந்த வாரமாக இருக்கும். நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்க கூடிய அமைப்புகள் இருப்பதால் அனாவசிய தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டாம்.

அலுவலகத்தில் உங்களை பிடிக்காதவரின் கை தற்காலிகமாக ஓங்கி இருக்கும் என்பதால் எங்கும், எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வீண்வாக்குவாதம் வேண்டாம். சில தடைகளுக்குப் பிறகு நீங்கள் சாதனைகள் செய்யும் வாரம் இது. யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை.

பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல வாரம் இது. இளைஞர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசு ஊழியர்கள், பத்திரிக்கை துறையினர், பொதுவாழ்வில் இருப்பவர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

மீனம்

இரண்டுக்குடைய யோகன் செவ்வாய் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். நல்ல வருமானத்தால் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் வளம் வருவீர்கள். நட்பு வட்டாரத்தால் பாராட்டப் படுவீர்கள்.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான சம்பவங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். வியாபாரிகள் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பான வாரம்.

No comments :

Post a Comment