Monday, 6 June 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (6.6.16 முதல் 12.6.16)

மேஷம்:

இந்த வாரம் உங்களுக்கு ஆகாதவர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அவை அனைத்தையும் வெற்றிகரமாக நீங்கள் சமாளிக்கும் வாரமாக இருக்கும். செவ்வாய் வலிமையோடு இருந்து ராசிக்கு குருபார்வை இருப்பதால் எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க முடியும். இறுதியில் சாதித்துக் காட்டுவீர்கள்.

கேது சுபவலிமையுடன் இருப்பதால் ஆன்மிகம், மருத்துவம், மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். கேதுபகவான் இன்னும் ஒரு வருடத்திற்கு உங்களின் லாபாதிபதி போலவே செயல்படுவார் என்பதால் வெளிநாட்டு விஷயங்களும் நன்மை தரும்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள்.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு இந்த வாரம் உங்களைப் பிடிக்காதவர்களிடம் இருந்து பணம் வரும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பணம் கொடுத்ததன் காரணமாக சண்டைக்கு உள்ளாகி எதிரியாகி விட்டவர்களிடமிருந்து கொடுத்த பணம் திரும்ப வரும். குடும்பப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும் வாரம் இது.

வெளிநாடு சம்பந்தப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி, அவுட்சோர்சிங் போன்ற தொழில்கள் நடத்துபவர்களுக்கும், அதுபோன்ற நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் இதுவரை இருந்துவந்த தடைகள் விலகும். வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் உடனடியாக தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள். ஆகஸ்டு மாதம் முதல் உங்கள் அனைவருக்கும் வாழ்க்கை சீராகச் செல்லும்.

மிதுனம்:

ராசிநாதன் புதன் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் நட்பு பலம் பெற்று யோகாதிபதி சுக்கிரனுடம் கீர்த்தி ஸ்தானத்திற்குடைய சூரியனுடனும் இணைந்திருப்பதால் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்கள் மன உறுதியுடன் நல்ல முடிவுகளை எடுக்கும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்த வாரம் முடிவுக்கு வரும். 

உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும். ஆன்மிக நாட்டம், ஞானிகள் தரிசனம் உண்டாகும்.

இதுவரை தவிர்க்க இயலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும்.

கடகம்:

இந்தவாரம் ராசிநாதன் சந்திரன் ஆட்சிநிலை பெறுவதால் கடகராசிக்காரர்களுக்கு தனலாபங்களும், பொருளாதார மேன்மைகளும் கிடைக்கும் லாபகரமான வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நல்ல பெயரை தரக்கூடிய சம்பவங்களும் இந்த வாரம் நடக்கும். சோதனைகள் எதுவும் இல்லாத வாரம் இது.

குருவின் பார்வை எட்டில் இருக்கும் கேதுவிற்கு இருப்பதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமான திருப்பங்கள் இருக்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

சிம்மம்:

யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவான நிலையில் இருப்பதால் இந்த வாரமும் சிம்மராசிக்கு யோகவாரமே குறிப்பாக ராசிநாதன் சூரியன் தன் நண்பரான செவ்வாய் பார்வையுடன் பத்தாம் வீட்டில் இருப்பதால் சிம்ம ராசிக்கு இது வரை தொழில் விஷயங்களில் இருந்து வந்த போட்டிகளும், பொறாமைகளும் விலகி நீங்கள் எல்லா விதத்திலும் சாதிக்கும் வாரமாக இது இருக்கும்.

முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். கணவன் மனைவி உறவு சீராகும்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது.

கன்னி:

ராசிநாதன் புதன் தனக்கு வலிமை தரும் வீடான ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் கன்னி ராசிக்காரர்களுக்கு எல்லா விதமான மேன்மைகளும் தரும் வாரம் இது. சிலருக்கு எதிர்பாராத தொகை அல்லது நீண்ட நாள் முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் வாரமாகவும் இது இருக்கும்.

உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில் அமைப்புகளில் லாபம் வரும்.

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

துலாம்:

துலாம்நாதன் சுக்கிரன் தனக்கு எதிர்த்தன்மையுடைய சூரியனுடன் இணைந்து எட்டாம் வீட்டில் இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் நிதானமாக செயல்படவேண்டிய வாரமாக இது இருக்கும். அதேநேரத்தில் சுக்கிரன் ஆட்சியாக இருப்பதால் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு நன்மையாகவே முடியும்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்கும் வேலை இந்தவாரம் வேண்டாம்.

ஆகஸ்டுக்கு மேல் குரு விரைய வீட்டிற்கு வருவதால் குடும்பத்தில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை நீங்கும்.

விருச்சிகம்:

விருச்சிகத்திற்கு இந்த வாரம் நல்ல பலன்கள் நடக்கும் வாரமாக இருக்கும். வாரத்தின் நடுப்பகுதியில் பாக்யாதிபதி சந்திரன் ஆட்சி வலுப்பெறுவதால் எல்லா நன்மைகளும் இந்த வாரம் உண்டு. ஏழரைச் சனியின் பாதிப்பில் இருக்கும் உங்களுக்கு ஆறுதலான வாரம் இது. குறிப்பாக கேட்டை நட்சத்திரத்திற்கு கெடுதல் இல்லாத வாரம் இது.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். அடுத்தவருடம் முதல் உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை கேது ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

தனுசு:

தனுசுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. எட்டாமிடம் வலுப்பெறுவதால் வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ள தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல தகவல்களும், சிலருக்கு சுபவிரயம் எனப்படும் நல்ல காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருப்பதும் நடக்கும். வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் வேண்டாம்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட உடனடியாக சிகிச்சைக்கு செல்வது நல்லது.

பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள். அவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகி வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வம்புகளில் சிக்கி மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மகரம்:

மகரராசிக்கு இந்த வாரம் கெடுதல்கள் இல்லாத வாரமாக இருக்கும். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. அதேநேரத்தில் தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை.

இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர ஸ்தானாதிபதி வலுவாக உள்ளதால் குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கான குருவுறுதல் இருக்கும். இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.

குழந்தைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

கும்பம்:

ராசிக்கு குருபார்வை இருப்பதால் சந்தேகம் இல்லாமல் நல்ல பலன்கள் தரக்கூடிய வாரம் இது. அதை விட நல்ல அமைப்பாக ராசியின் யோகாதிபதி சுக்கிரன் இந்த வாரம் வலுவாக இருப்பதால் கும்பத்திற்கு கெடுபலன் சொல்லுவதற்கு கிரக நிலை ஏதும் இல்லை.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். இதுவரை வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைஞர்கள் மாற்றங்களை உணரப்பெறுவீர்கள்.

மீனம்:

இன்னும் சில வாரங்களில் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சியின் மூலம் மீன ராசி குருவின் பார்வையை அடையும் என்பதால் இப்போதிருந்தே உங்களுக்கு நன்மைகளும், நல்லவைகளும் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும் என்பதோடு மீனராசிக்கு இனிமேல் கவலைகள் எதுவும் இல்லை.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இது முன்னேற்றமான வாரம்தான்.

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

No comments :

Post a Comment