Monday, 20 June 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (20.6.2016 - 26-6-2016)

இந்த வாரம் எப்படி?

மேஷம்:

ஐந்தாம் வீட்டில் ராகு அமர்ந்து ஐந்திற்குடையவன் மூன்றில் அமர்வதால் பிள்ளைகள் வழியில் செலவு இருக்கும். பிள்ளைகள் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டு வரலாம் என்பதால் குழந்தைகளின் மேல் அக்கறை வையுங்கள். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

எட்டில் இருக்கும் செவ்வாய் இந்த வாரம் தற்காலிகமாக மாறுவதால் கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். யாராவது ஒருவர் கோபம் தணிந்து விட்டுக்கொடுத்து போவீர்கள். பணவரவுக்கு இந்த வாரம் தடை ஏதும் இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும்.

இளைய பருவத்தினருக்கு இந்த வாரம் காதல் வரும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் கலைஞர்களுக்கு நல்ல பலன்கள் இந்த வாரம் இருக்கும். குறிப்பிட்ட சிலர் உல்லாசப்பயணம் செல்வீர்கள். என்னதான் செலவு என்றாலும் அதற்கேற்ற வருமானம் இந்த வாரம் கண்டிப்பாக உண்டு. அனைத்து தரப்பினருக்கும் கெடுதல்கள் இல்லாத வாரம் இது.

ரிஷபம்:

தொழில் அமைப்பில் இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும். பிறந்ததேசத்தை விட்டு வெளிநாட்டில் இருக்கும் ரிஷபராசிக்காரர்களுக்கு இந்தவாரம் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இருக்கும். ஒரு சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் நபர்களை இந்த வாரம் சந்திப்பீர்கள்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அகற்றை காட்டுவது நல்லது. சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால குறைபாடு உள்ளவர்கள் அவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதும் இப்போது அவசியம்.

வியாபாரிகளுக்கு சிக்கல்கள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட சிலருக்கு குலதெய்வ தரிசனம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க இருப்பவர்களுக்கு இந்த வாரம் மற்றவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு மாற்றம் உண்டு.

மிதுனம்:

இந்த வாரம் மிதுனத்திற்கு அனைத்திலும் மேன்மையான பலன்களே நடக்கும் என்பது உறுதி. பூரண ராஜயோகாதிபதி சுக்கிரன் இந்த வாரம் முழுவதும் ராசியில் இருப்பதாலும் அவர் பரிவர்த்தனை வலுவுடன் இருப்பதாலும் இன்னும் சில வாரங்களில் உங்களின் நீண்டநாள் எண்ணங்களையும் லட்சியங்களையும் நிறைவேற்றி கொள்ள முடியும்.

தனாதிபதி சந்திரனும் நன்மை தரும் அமைப்பில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் உங்கள் கையில் இருக்கும். அதிக பணம் புரளும் இடங்களில் பணி புரிபவர்கள் வங்கித் துறையினர் போன்றவர்கள் இந்த வாரம் அலுவலகங்களில் மதிப்பு, மரியாதைகளை பெறுவார்கள்.

பன்னிரண்டாமிடம் வலுப்பெறுவதால் அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி இருக்கும். அதனால் லாபங்கள் உண்டு. வெளிநாடு சம்மந்தப்பட்ட மல்டிநேஷனல் கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு சிறப்புகள் சேரும். பெண்களால் இந்த வாரம் செலவுகள் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நகை வாங்கி கொடுப்பீர்கள்.

கடகம்:

வெளிநாட்டில் இருக்கும் கடகராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் நடக்கும். எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும் வாய்ப்புகள் உள்ளது.

பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் இந்த வாரம் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

பெண் தொழிலாளிகளை கொண்ட தையல், எக்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இந்த வாரம் மிகச்சிறந்த வாரம். இந்தவாரம் செவ்வாய் மாற்றம் பெறுவதால் எரிச்சல்படும் படியான சம்பவங்கள் நடக்கலாம். அடிக்கடி கோபப்படுவீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

முயற்சி ஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை இருந்து வந்த தன்னம்பிக்கை இல்லாத நிலை உங்களை விட்டு விலகும். அனைத்து விஷயங்களிலும் விடாமுயற்சியுடன் இறங்கி சாதித்து காட்டுவீர்கள். ஒரு சிலர் எடுத்துக் கொண்ட காரியங்களை நல்ல விதமாக முடித்து பெயர் எடுப்பீர்கள்.

பாக்கிய ஸ்தானம் வலுப்பெறுவதால் பூர்வீக சொத்து விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ முக்கியமான விஷயங்களில் எதிர்பாராத நன்மைகள் இருக்கும்.

சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. இரும்பு ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு இந்தவாரம் லாபங்கள் உண்டு. யாரையும் நம்ப வேண்டாம். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுப்பதோ, எவரையும் நம்பி பணம் தருவதோ கூடாது.

கன்னி:

இந்த வாரம் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் வெளிநாடு சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்கள் நன்மைகளையும், பணவரவுகளையும் பெறுவார்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிகையுடன் இருக்கவும். விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம்.

தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். சகோதர உறவு சற்று முன் பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம்.

கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான சம்பவங்கள் உண்டு. இளைய பருவத்தினர் சிலருக்கு இந்த வாரம் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் தேடி வந்தாலும் உழைத்த கூலியை பெறுவதற்கு போராட வேண்டி இருக்கும்.

துலாம்:

பதினொன்றில் இருக்கும் ராகுவால் உங்களால் இப்போது எதையும் சாதித்துக் காட்ட முடியும். அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் மிகப்பெரிய உதவிகளை உங்களுக்கு செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும்.

வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். குறிப்பிட்ட சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். வாழ்க்கைத் துணைவர் மூலமும் இந்த வாரம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும் வாரமாக இருக்கும்.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனை யும் அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். மேல்அதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். பணவரவிற்கு குறையில்லை என்பதால் பற்றாக்குறை இருக்காது.

விருச்சிகம்:

இந்த வாரம் சிலருக்கு தந்தை விஷயத்தில் மனச்சங்கடங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து விஷயத்தில் ஏதேனும் எதிர்மறையான பலன்கள் இருக்கலாம். இதுவரை கடன் தொல்லைகளில் சிக்கி நிம்மதியை இழந்தவர்களுக்கு இந்த வாரம் அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.

வேலையில் இருப்பவருக்கு பதவிஉயர்வு, ஊதியஉயர்வு, நீண்டநாள் நிலுவையில் இருக்கும் தொகைகள் கிடைத்தல் போன்ற பலன்கள் நடைபெறும். செவ்வாய் பார்வையால் ஆறாமிடம் வலுப்பெறுவதால் எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள்.

இதுவரை திருமணம் ஆகாதவருக்கு இப்போது உறுதி ஆகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள்.

தனுசு:

இந்த வாரம் குடும்பத்தில் அனைவரின் மனமகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் உள்ள வாரமாக இருக்கும். புதன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இப்போது மிகவும் பொருத்தமான வேலை அமையும். வியாபாரிகளுக்கு இது அருமையான வாரம்.

ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். பாக்கி தொகைகள் வசூலாகும். நீண்ட நாட்களாக உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

என்ன பிரச்னை என்றாலும் குருபகவான் வலுப்பெற்றதால் இழுத்தடித்தாலும் பணவரவு இருக்கும். மூத்த சகோதரர்கள் உதவி உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு சொந்த ஊருக்கு செல்லும் வாய்ப்பு இந்த வாரம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை முடித்து வைக்கப்படும்.

மகரம்:

கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டுக்கு செல்வீர்கள். பணவரவில் குறையேதும் இல்லை. வெகு நாட்களாக எதிர் பார்த்த ஒரு தொகை கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்றுத் தள்ளியே இருங்கள். மனம் சற்றுப் பதட்டத்துடனும் எரிச்சலுடனும் இருந்தாலும் அனைத்தும் கட்டுபாட்டுக்குள் இருக்கும்.

பத்துக்குடைய சுக்கிரன் பரிவர்த்தனை வலுவுடன் இருப்பதால் சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை இப்போது கிடைக்கும். அரசு வேலை பற்றிய நல்லதகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரும்.

நல்லவைகள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இந்தவாரம் இருக்கும். வார ஆரம்பத்தில யோக அமைப்புக்கள் உண்டாவதால் இதுவரை உங்களை முடக்கிப் போட்டுக் கொண்டு இருந்த எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலக் குறைவாக இருந்தவர்கள் பூரண உடல்நலம் கிடைக்கப் பெறுவார்கள்.


கும்பம்:

பரம்பொருளின் அருளினால் இந்த வாரம் கும்பராசிக்கு அனைத்து விதமான நன்மைகளும் தாராளமாக உண்டு. குறிப்பிடத்தக்க அளவில் பணவரவுகள் இருக்கும் என்பதால் பொருளாதார நிலையும் மேன்மையாகவே இருக்கும்.­ உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் பலம் இழக்கும் வாரமாகவும் இது இருக்கும்.

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் இப்போது செட்டில் ஆகி நல்ல லாபம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் அனைவருக்கும் ஏதேனும் ஒரு விஷயத்தில் நிச்சயமாக மனதிற்கு சந்தோஷமான சம்பவங்களும், லாபங்களும் உண்டு.

குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றிகளும் லாபங்களும் இருக்கும். மொத்தத்தில் தொட்டது துலங்கும் வாரம் இது.

மீனம்:

ஆறாமிடத்தில் இருக்கும் ராகுவால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் நீங்கள் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். இதுவரை பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள். புதிய கடன் வாங்கி பழைய கடன்களை அடைக்க முடியும்.

ராசிநாதன் இன்னும் சில வாரங்களில் ராசியைப் பார்க்கப் போவதால் சொந்தத்தொழில், வியாபாரம் போன்றவைகள் இப்போது நன்றாக நடக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும். சிகப்பு நிற பொருட்களால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் உங்களின் பிடிவாத குணத்தால் சில நல்ல வாய்ப்புகளை இந்த வாரம் இழப்பீர்கள். கலைஞர்களுக்கு சிறப்புக்கள் சேரும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வேலை மாற்றம் நல்லது பணி இடமாற்றம் இருக்கும்.

No comments :

Post a Comment