Friday, June 3, 2016

மீனம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மீனம்:

மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் இருப்பதும் பத்துக்குடைய குருபகவான் பத்தாமிடத்தைப் பார்ப்பதும் மீனராசிக்கு நன்மைகளைத் தரக்கூடிய அமைப்புகள் என்றாலும் குரு ராகுவுடனும், செவ்வாய் சனியுடனும் இணைந்து யோக அமைப்புகள் பங்கமாகி விட்டதால் ,தற்போது அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. எவ்வித நல்ல மாற்றங்களும் இன்றி வெளியில் போவதும் வீட்டிற்குத் திரும்புவதுமாக மீனராசிக்காரர்கள் இருக்கிறீர்கள்.

வாழ்க்கையில் இன்னும் முன்னேற்றம் வரவில்லையே என்று எதிர்பார்த்து ஏங்கித் கொண்டிருக்கும் உங்களுக்கு வரப்போகும் ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குருபகவான் ராகுவிடமிருந்து விலகி ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கப் போவதால் இப்போது இருக்கும் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனி போல விலகி மிகச்சிறந்த மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்கும் என்பதால் இந்த ஜூன்மாதம் முதல் அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். எனவே மீனராசிக்காரர்கள் நன்மைகளை எதிர்நோக்கப் போகும் மாதமாக இது இருக்கும்

நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் நிறைவாகவே இருக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் இந்த மாதம் உண்டு.

2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி காலை 6.30 முதல் 17-ம்தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் வெகு தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
.

No comments :

Post a Comment