Monday, 13 June 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (13.6.16 முதல் 19.6.16)

மேஷம்:

சீராக ஓடிக்கொண்டிருக்கும் வண்டி வேகத்தடையைப் பார்த்த உடன் சிறிது வேகம் குறைவதைப் போல உங்களின் கை சற்றுத் தாழ்ந்து உங்களைப் பிடிக்காதவர் கை ஓங்கும் வாரம் இது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். மருத்துவச் செலவுகள் இருக்கலாம்.

எட்டில் இருக்கும் செவ்வாயால் யாரையாவது நீங்கள் கோபப்பட்டுத் திட்டி அதனால் ஏதாவது எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம் என்பதால் கோபத்தைக் கட்டுப்படுத்துவது நல்லது. செவ்வாய் உங்களை எங்கே கொண்டு போய் கவிழ்க்கலாம் என்று செயல்படுவார் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 

பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். பெரியதொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

ரிஷபம்:

நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைக் கண்டாலே ஒளிந்து ஓடுவார்கள். கடன் தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. உடல்நலம் இல்லாமல் இருப்பவர்கள் வெகு விரைவாக குணம் அடைவார்கள்.

வெகுநாட்கள் இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்சினைகள் நல்லபடியாக சாதகமாக தீரும் வாரமாக இருக்கும். குறிப்பாக கோர்ட்டு, கேஸ் என்று அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் நேரம் இது. வெகு சிலருக்கு புதிய வீடு அமையும் யோகமும் உள்ள வாரமாக இது இருக்கும்.

இதுவரை திருமணமாகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது.

மிதுனம்:

தாய்வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளியே நில்லுங்கள். அவர்களால் வீண் பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இப்போதைய சூழ்நிலையில் சிலருக்கு அம்மாவே ஆதரவாக இருக்க மாட்டார். காவல்துறை, கோர்ட் போன்றவற்றில் வழக்கு இருப்பவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம்.

மேலதிகாரியிடம் அனுசரித்துப் போங்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களைப் பிடிக்காதவரின் கை ஓங்கி இருக்க வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். வாகனச் செலவுகள் இருக்கும். எவரையும் நம்பி முதலீடு செய்வதோ, அடுத்தவரை நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ வேண்டாம். 

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும்.சிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் உருவாகும்.

கடகம்:

உங்களுக்கு தடைகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விஷயங்கள் சட்டேன்று முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நல்லவை நடக்கும்.

செவ்வாய் வலுப்பெறுவதால் தெய்வ அனுகூலம் இப்போது முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு செய்யாதவர்களுக்கு தற்போது அதை நிறைவேற்ற வாய்ப்பு வரும். சிலருக்கு மகாபெரியவர், ஷீரடிபாபா, ராகவேந்திரர், பகவான் ரமணர் போன்ற அவதார புருஷர்களின் புனிதஸ்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். 

அரசு தனியார்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவிஉயர்வு சம்பள உயர்வு போன்றவைகள் கிடைக்கப் பெறும். சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

சிம்மம்:

தாயார்வழியில் செலவுகளோ, விரயங்களோ இருக்கும். வீடு ரிப்பேர், வாகனபழுது போன்றவைகளை செய்யவேண்டி இருக்கும். பணவரவு தாராளமாக இருக்கும் என்றாலும் அதற்கு சரியாக வீண் செலவுகளும் இருக்கும் என்பதால் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்து செலவு செய்யவும்.

அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு இது யோகவாரம்தான். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்போருக்கு வேலைப்பளு கூடுதலாக இருக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை கண்காணியுங்கள். யாரையும் நம்ப வேண்டாம். 

ராகுபகவான் ராசியில் இருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தித் தருவார். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் அவர் மூலமாக இப்போது உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும் 

கன்னி:

பிள்ளைகள் விஷயத்தில் நல்ல தகவல்களும், குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு தொடக்க வாரமாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறுவது நிச்சயம். ஆறாம் இடத்தில் உள்ள கேதுபகவான் உங்களின் எதிர்ப்புகள் அனைத்தையும் ஒடுக்கி உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவார்.

தொழில் விஷயங்களில் எந்தவித சிக்கல்களும் வருவதற்கு வாய்ப்பு இல்லை. வேலையும் சுமுகமாகவே நடைபெறும். வேலை மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய பருவத்தினருக்கு மாற்றங்கள் உண்டு. அரசு ஊழியர்கள் அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு நேர்மையற்ற விஷயங்களை செய்யாதீர்கள்.

சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகப் போகிறது. இனி எல்லா நாட்களும் உங்கள் நாட்கள்தான்.

துலாம்:

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் சட்டென்று முடியாமல் வளவளவென்று இழுத்துக்கொண்டு போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேவையின்றி அனாவசியமாக அடுத்தவரை நம்பி எந்த காரியத்திலும் இறங்க வேண்டாம். அவர்கள் உங்கள் காலை வாரிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும் என்றாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் நல்ல விஷயங்கள் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் உண்டு. சிலருக்கு குடும்பத்தில் சுப காரியங்களுக்கான நிச்சய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

வீடு வாகன விஷயங்களில் புதிய மாற்றங்கள் இருக்கும். சொந்த வீடு புதிய வாகனம் அமையும். மனைவியால் நன்மைகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம் ஊர் மாற்றம் வீடுமாற்றம் தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும்.

விருச்சிகம்:

பிள்ளைகள் விஷயத்தில் இந்த வாரம் சிலருக்கு மனவருத்தங்களும் செலவுகளும் இருக்கும். ராசியில் இருக்கும் சனி குழந்தைகளின் போக்கில் மாற்றங்களை உண்டு பண்ணுவார் என்பதால் பருவ வயதுக் குழந்தைகளின் மேல் ஒரு கண் வைப்பதும் அவர்களை கண்காணிப்பதும் நல்லது.

உங்களில் சிலருக்கு இந்த வாரம் வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சில ஏறுக்குமாறான விஷயங்கள் நடக்கும். கணவன் மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதன் மூலம் எதையும் சமாளிக்கலாம் என்பதால் பொறுத்துப் போங்கள்.

கேட்டை நட்சத்திரக்காரர்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது.

தனுசு:

ஒன்பதாமிடத்தில் இருக்கும் ராகுவால் தந்தை விஷயத்தில் செலவுகள் மற்றும் மனச்சங்கடங்கள் இருக்கும் என்பதால் அப்பாவின் உறவினர்களுடன் உள்ள கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்க வேண்டும். சிலருக்கு வாகனச்செலவுகள் இருக்கலாம் அல்லது வீடு ரிப்பேர், வீட்டை அழகுபடுத்துதல் போன்ற செலவுகள் இருக்கலாம்.

எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இல்லாமல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுக்கிரன் நல்ல அமைப்பில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். குறிப்பாக சகோதரிகள் உங்களுக்கு உதவுவார்கள். குடும்பத்தில் சகோதர சம்பந்தமான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும்.

சுயதொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அகலக்கால் வைக்காமல் இருக்கும் தொழிலை அப்படியே நடத்திக் கொண்டு வருவது நல்லது. புதிதாக பணம் போட்டு தொழில் விரிவாக்கம் செய்வதோ, கிளைகள் ஆரம்பிப்பதோ இப்போது கை கொடுக்காது. இளைய பருவத்தினர் வேலையில் அக்கறையுடன் இருங்கள்.

மகரம்:

சிலருக்கு ஒரு காரியத்தை நல்லவிதமாக முடித்து பாராட்டுப் பெறக்கூடிய சம்பவங்கள் இருக்கும். பதினொன்றாமிட சனியால் பொருளாதார மேன்மைகள் இருக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரம்.

எதிர்பார்த்த சிலவிஷயங்கள் கிடைக்காமல் தள்ளிப் போவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை விஷயத்தில் சிறப்பான சம்பங்கள் இப்போது இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் தவிர்த்த மேல் வருமானங்கள் இருக்கும். தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பேசக் கூடிய மற்றும் சொல்லித்தரக் கூடிய தொழில்களில் மார்க்கட்டிங், ஆசிரியர்பணி, வக்கீல்கள் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இது ஒரு செழிப்பான காலகட்டமாக இருக்கும்.

கும்பம்:

குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் குறைந்து குடும்பத்தில் பிரச்னையே இல்லாத நிலைமை ஏற்படும் என்பதால் கும்ப ராசிக்கு இனிமேல் குடும்பப் பிரச்னைகள் எதுவும் இல்லை.

பத்தாம் வீட்டில் இருக்கும் சனியால் அம்மாவைப் பற்றி வருத்தமான சம்பவங்கள் இருக்கலாம். தாயாரின் உடல்நிலையை அக்கறையுடன் கவனியுங்கள். ஒருமுறை ஊருக்கு சென்று அம்மாவைப் பார்த்து பேசி அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் திரும்புங்கள்.

இளைய பருவத்தினர் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வாரம் நிர்ணயிக்கும். சோதனைகளை சாதனைகளாக நீங்கள் மாற்றக்கூடியவர் என்பதால் இந்த வாரம் யோக வாரமே.

மீனம்:

உங்களில் சிலர் வெளிநாடு செல்வதற்கு இப்பொழுது வாய்ப்புக்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெங்களூர், மும்பை, டில்லி என்று அலைந்து திரிவீர்கள். அதே நேரத்தில் பயணங்களால் உங்களுக்கு வருமானங்களும், நற்பெயர்களும் இருக்கும்.

ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் இருக்கும். அடுத்தவர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்களுக்கு கீழே வேலை பார்ப்பவரிடம் எந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதனால் சிக்கல்களும் நம்பிக்கை துரோகங்களும் உங்களுக்கு இருக்கும். 

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து ஆகஸ்டுக்கு மேல் திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

No comments :

Post a Comment