Monday, 9 May 2016

மாலைமலர் வார ராசி பலன்கள் (9.5.16 முதல் 15.5.16 வரை)

மேஷம்:

ராசியின் யோகர்கள் சூரியனும், சந்திரனும் உச்சநிலையில் இருப்பதால் இந்த வாரம் மேஷராசிக்காரர்களுக்கு தடைகளோ, தாமதங்களோ இல்லாத நல்ல வாரமாகவே இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வெகு நாட்களாக முடியாத காரியங்கள் இந்த வாரம் முடியும் அமைப்பும் உண்டு.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் வெளிநாடு செல்வீர்கள். நீண்டநாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

அரசு, தனியார் துறைகளில் மேல் வருமானம் வருகின்ற துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்படவும் வேண்டாம். அதனால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ரிஷபம்:

ராசியில் வளர்பிறைச் சந்திரன் உச்சமாகி ஏழாமிடத்தில் இருக்கும் செவ்வாய், சனியைப் பார்ப்பதால் இதுவரை வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகளும், சண்டை, சச்சரவு போன்ற பிரிவினை சமாச்சாரங்கள் இருந்தவர்கள் சமாதானமாகச் செல்வதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் உண்டு.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் இனிமேல் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் மேன்மையான பலன்கள் இருக்கும்.

மிதுனம்:

மூன்றில் ராகு. ஆறில் செவ்வாய், சனி. பதினொன்றில் சூரியன் ஆகிய நல்ல கோட்சார அமைப்புகள் மிதுனராசிக்கு மிகுந்த மனநிம்மதியையும் நல்லவைகளையும் மட்டுமே நடத்தித் தரும் அமைப்பு என்பதால் இந்த வாரமும் மிதுனராசிக்கு கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். 

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இந்த வாரம் நல்ல பலன்கள் நடக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும்.

கடகம்:

வார ஆரம்பத்திலேயே ராசிநாதன் உச்சமாவதாலும் வாரம் முழுவதும் நல்ல நிலைமைகளில் இருப்பதாலும் இந்த வாரம் கடகத்திற்கு பின்னடைவுகள் ஒன்றும் இல்லை. தனாதிபதி சூரியன் உச்சவலுவுடன் இருப்பதால் நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த ஒரு காரியம் முடிந்து இந்த வாரம் பண வரவு உண்டு.

பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்து அதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக் கேட்பார்கள்.

இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு இனிமேல் சேமிப்பு கண்டிப்பாக இருக்கும். இந்தவாரம் குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்த இடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.

சிம்மம்:

வார ஆரம்பத்தில் ராசிக்கு ஒன்று, நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில் கிரகங்கள் வலுவுடன் இருப்பது ஒருவித யோகம் என்பதாலும் இவற்றில் குரு நட்பு, செவ்வாய் ஆட்சி, சூரிய சந்திரர்கள் உச்சம் என்ற யோக நிலையோடு ராசி அமைவதாலும் சிம்மராசிக்கு இந்த வாரம் குறைகள் ஏதும் இல்லை.

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு இனிமேல் அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

கன்னி:

கன்னிநாதன் புதனும் யோகாதிபதி சுக்கிரனும் எட்டாமிடத்தில் மறைந்திருப்பதால் இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் தடைகளைச் சந்திக்கும் வாரமாக இருக்கும். அதேநேரத்தில் லாபாதிபதி சந்திரன் வார ஆரம்பத்தில் உச்சமடைந்திருப்பதால் வருமானங்களுக்கும் குறைவில்லாமல் இருக்கும்.

இந்த வாரம் மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

துலாம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் ராசியைப் பார்ப்பதும் அவருடன் யோகாதிபதி புதன் இணைந்திருப்பதும் யோகமான அமைப்புகள் என்பதால் துலாம் ராசிக்கு பின்னடைவுகள் எதுவும் இல்லாத வாரம் இது. அதே நேரத்தில் வார ஆரம்பமே சந்திராஷ்டமத்தில் ஆரம்பிப்பதால் முதல் இரண்டு நாட்கள் மந்தமாகத்தான் இருக்கும்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் இந்த வாரம் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரும். செலவுகளை சுருக்க வேண்டியதும் அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போகமுடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

விருச்சிகம்:

வாரத்தின் நடுப்பகுதி இரண்டு நாட்கள் சந்திரன் எட்டில் மறைந்து சந்திராஷ்டம நாட்களாக அமைவதால் இந்த வாரம் உங்களின் பொறுமையை சோதிக்கும் வாரமாக அமையும். குறிப்பிட்ட சிலர் இனம் தெரியாத மனக்கலக்கத்துடன் இருப்பீர்கள். ஆயினும் விருச்சிகராசிக்கு சோதனைகள் விலகும் நேரம் வந்துவிட்டதால் எவ்வித கெடுதல்களும் நடக்காது என்பது உறுதி.

பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும்.

தனுசு:

வாரத்தின் இறுதி நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக அமைவதால் வாரக் கடைசியில் தூரப்பிரயாணங்கள் செய்வதையோ புதிய ஆரம்பங்கள் மற்றும் முயற்சிகளைச் செய்வதையோ தவிர்ப்பது நல்லது. அதேநேரத்தில் ராசியும் ராசிநாதனும் வலுவாக இருப்பதால் பின்னடைவுகள் எதுவும் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும்.

சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

மகரம்:

மகரத்திற்கு இந்த வாரம் வாழ்க்கைத் துணைவரால் சந்தோஷங்களும் இன்பமான நிகழ்வுகளும் இருக்கும் வாரமாக இருக்கும். இளைய பருவத்தினர் சிலருக்கு தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் வாய்ப்பும் இளமைப் பருவத்திற்கே உரிய காதல் அனுபவங்களும் கிடைக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகனமாற்றம் செய்வீர்கள். பொதுவாக நான்காமிட கேந்திர ஸ்தானத்தில் இயற்கைச் சுபரான சுக்கிரன் இருப்பது எல்லா வகையிலும் தடைகளையும் தாமதங்களையும் தரும் என்பதால் உங்களுக்கு அனைத்திலும் உற்சாகக்குறைவு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும். எல்லா பிரச்சனையும் ஜூலை வரைதான்.

கும்பம்:

ஆறாம் அதிபதி சந்திரன் உச்சமாகி ராசிநாதனைப் பார்ப்பதால் இந்த வாரம் கும்ப ராசிக்காரர்கள் சிலருக்கு அடங்கிக் கிடக்கும் கடன் பிரச்னைகள் லேசாகத் தலை தூக்கலாம் என்பதால் அனைத்திலும் நீங்கள் கவனமுடன் இருக்கவேண்டிய வாரமாக இது இருக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத்தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டு.. சிலருக்கு வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் நடக்கும்.

மீனம்:

யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவாகி வார ஆரம்பத்தில் ஐந்துக்குடைய சந்திரன் உச்சமாவதால் மீனராசிக்கு ஆகஸ்டில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் நன்மைகள் நடப்பதற்கான ஆரம்பங்கள் உருவாகும் வாரமாக இது இருக்கும். உங்களின் அதிர்ஷ்டக் கிரகமான சந்திரனின் உச்சத்தால் நீங்கள் அதிர்ஷ்டமடையும் வாரம் இது.

குறிப்பிட்ட சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பத்தாமிடத்தை குருபகவான் வலுப்பெற்றுப் பார்ப்பதால் பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.
.

1 comment :

  1. yourwritingwasvery...superbysp

    ReplyDelete