Monday, 2 May 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (2.5.2016 – 8.5.2016)

இந்த வாரம் எப்படி ?

மேஷம்:

ராசிக்கு குருவின் பார்வை இருப்பதும் ராசியில் சுக்கிரன் உள்ளதும் நல்ல அமைப்புகள் என்பதால் உங்களுக்கு தொழில் மற்றும் பணவரவுகளில் எவ்வித இடையூறுகளும் இல்லாத நல்லவாரமாகவே இந்தவாரம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

பூமி சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் வீட்டு கட்டிக் கொடுக்கும் பில்டர்கள் செங்கல், மணல், ஜல்லி போன்றவை விற்பனை செய்யும் மேஷ ராசிக்காரர்களுக்கு லாபங்கள் கிடைக்கும் வாரமாக இது இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாள் வராத வாடகை குத்தகை பணம் இந்த வாரம் வசூலாகும்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். குருவும் சுக்கிரனும் ராசியுடன் சம்பந்தப்படுவதால் இந்த வாரம் கெடுபலன் எதுவும் இல்லை.

ரிஷபம்:

ரிஷபராசிக்கு கடந்த காலங்களில் வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. நல்ல வீட்டில் குடி போவீர்கள். இந்த வாரம் நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள்.

பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கும்.

வாரம் முழுவதும் சுக்கிரன் குருவின் பார்வையில் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல வாரமாக அமையும்.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் வக்ரமும் அஸ்தமனமும் பெற்றுள்ளதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இப்போது உங்களிடம் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார்.

பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், இப்போது பிரச்சனையை தள்ளி வைப்பதும், வாய்தா வாங்குவதும் உங்களுக்கு சாதகமான பலனை தரும்.

கடகம்:

கடகராசிக்கு இந்த வாரம் எந்தவிதமான எதிர்மறைபலன்களும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு இதுவரை நடந்து வந்த சாதகமற்ற நிலை மாற்றம் அடைந்து இனிமேல் அனைத்தும் உங்கள் பக்கம் நன்மையாக திரும்பும் நிலை ஆரம்பிக்கிறது.

யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரியல்எஸ்டேட் தொழிலர்கள் நல்ல பணவரவு ஒன்றினை இப்பொழுது அடைவார்கள்.

ஆசிரியர், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது. செலவுகளும், சுப விரயங்களும் இருக்குமாதலால் வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

சிம்மம்:

புதன் மற்றும் வியாழன் ஆகிய வாரத்தின் இரண்டுநாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். நீண்டதூர பிரயாணங்களை இந்தநாட்களில் ஒத்தி வையுங்கள். பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட்டு இந்த வாரம் டென்ஷன் ஆவீர்கள்.

மூத்த சகோதரஸ்தானம் வலுவாக இருப்பதால் அண்ணன், அக்காக்கள் மூலமாக நன்மைகளும், உதவிகளும் உண்டு. தாயாரை தேடிச்சென்று பார்த்து ஆசீர்வாதம் பெற்று வருவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.

ராசியை சனி பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் பிடிவாதத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுத்துப் போவதன் மூலம் அனைத்து பிரச்னைகளையும் வெற்றிகரமாக தீர்க்கலாம் என்பதை புரிந்து கொண்டீர்கள் என்றால் இந்த வாரம் உங்கள் வாரம்தான்.

கன்னி:

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் வாரமாக அமையும். அதேநேரத்தில் செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் சேமிக்க முடியாமல் போகும். சிலர் வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவீர்கள்.

இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். பழைய கடன்களை அடைப்பீர்கள். தந்தைவழி உறவில் நன்மைகள் உண்டு. அத்தைகள் உதவுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள்.

வெள்ளி சனி என வாரத்தின் இரு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் கவனமாக நிதானமாக நடந்து கொள்வது அவசியம். நீண்ட தூர பிரயாணங்களை வார ஆரம்பத்தில் ஒத்தி வைப்பது நல்லது. பயணங்களால் சில சங்கடங்கள் இருக்கலாம்.

துலாம்:

ஏழரைச்சனி முடியப்போவதால் இதுவரை தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப்பெற்று இனி சுறுசுறுப்பாவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக்குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது.

ஸ்டேஷனரி, புக்ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இது முன்னேற்றமான வாரமாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். தெய்வ வழிபாடு செய்வீர்கள்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

விருச்சிகம் :

கடந்த சில மாதங்களாக மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் முதல் நிம்மதியை தரும் சம்பவங்களும் நல்ல செய்திகளைக் கேள்விப்படுதலும் இருக்கும். இனிமேல் எதையும் சமாளிக்க முடியும் என்கிற தைரியம் பிறக்கும் வாரம் இது.

ஜென்மச்சனி நடப்பதால் பொருளாதார நிலைமைகள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தேவையற்ற வீண் செலவுகளை தவிருங்கள். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்தவர்கள் இனிமேல் மனம் மாறி உங்களுக்கு சாதகமாக திரும்புவார்கள்.

கிரக நிலைமைகள் சாதகமாக இல்லை என்றாலும் ராசிநாதன் வலுப்பெற்றால் ராசிக்கு கெடுதல்கள் நடக்காது என்ற விதிப்படி உங்களுக்கு இந்த வாரம் கெடுபலன்கள் எதுவும் இல்லாத வாரமாக இருக்கும். அதே நேரத்தில் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் தேக்க நிலைகளும் இருக்கும்.

தனுசு:

சனிபகவான் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் சிலருக்கு வேலைக்காரர்களால் விரையங்களும், அவர்கள் மூலம் பண இழப்பு நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதால் கொடுக்கல், வாங்கல்களிலும் வெளிஇடங்களுக்கு பணத்தை கொடுத்து விடுவதிலும் கவனம் தேவை. குறிப்பாக வேலைக்காரர்கள் திருடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தந்தைவழி உறவினர்களால் லாபம் உண்டு. அப்பாவிடம் காரியத்தை சாதித்துக் கொள்ள இது நல்ல வாரம். இளைஞர்கள் தந்தையிடம் ஏதேனும் கேட்டுப் பெறவேண்டியது இருந்தால் இந்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். வெற்றி பெறுவீர்கள்.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்:

இந்தவாரம் மகர ராசிக்காரர்கள் சிலர் எதிர்மறை எண்ணங்கள் உடைய நபர்களை சந்திப்பீர்கள். உங்களை கோபமூட்டக்கூடிய சம்பவங்கள் நடக்கும். சிலருக்கு கோர்ட், காவல்துறை போன்ற இடங்களுக்கு போக வேண்டி இருக்கும். இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். இனம் தெரியாத மனக்கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு ஆகஸ்டு மாதத்திற்கு மேல் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனிமேல் நல்ல செய்திகள் உண்டு.

கும்பம்:

பனிரெண்டாம் இடம் வலுப்பெறுவதால் குறிப்பிட்ட சிலருக்கு இந்த வாரம் பிரயாணங்களும், அலைச்சல்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபங்களும் இருக்காது. கூடுமானவரை நீண்ட தூர பிரயாணங்களை ஒத்தி வைப்பது நல்லது. ராசியை பார்க்கும் செவ்வாயால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை வரலாம்.

தொழில், வியாபாரம் போன்றவைகளில் மிகவும் நல்ல பலன்களும் பண வரவுகளும் இருக்கும். செவ்வாய் வலுவுடன் இருப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்த நிலுவைத்தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல் போன்ற விஷயங்கள் இப்போது கிடைக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்து வந்த போட்டிகள் மறைந்து இன்னும் கொஞ்ச காலத்திற்கு நீங்களே தனிக்காட்டு ராஜாவாக உலா வருவீர்கள்.

மீனம் :

இதுவரை வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் முதல் நிலைமை மாறி வியாபாரம் சூடு பிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள்.

உங்கள் ஜீவனாதிபதி குரு பத்தாமிடத்தைப் பார்ப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வளப்படுத்தும் என்பதால் இந்த வாரம் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அதே போல மாதம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு.

வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அரசு தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். அரசியலில் இருப்போருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும்.

No comments :

Post a Comment