Monday, 23 May 2016

மாலைமலர் வாரராசி பலன்கள் (23.5.16 முதல் 29.5.16)

மேஷம்:

வாரத்தின் முதல்நாளே மேஷராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைவதால் இந்தவாரம் உங்களுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்த வாரமாகவும், எதிலும் தடைகள் உள்ள வாரமாகவும் இருக்கும். அதேநேரத்தில் யோகாதிபதிகளான சூரியன், குரு, சந்திரன் ஆகியோர் வலுவான அமைப்பில் இருப்பதால் எதுவும் எல்லைமீறி போகாமல் இருக்கும் வாரமாகவும் இருக்கும்.


ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரும்.. சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற நிலையில் இருப்பதும் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்றவைகளை தரும் சூரியபகவான் ராசியிலேயே இருப்பதும் ரிஷபராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் வரும் குருப்பெயர்ச்சிக்குப்பிறகு நீங்கள் நன்மைகளை அடைவதற்கு அட்சாரம் போடும் அமைப்புகள் இந்தவாரம் நடக்கும்.

உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம்.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.குறிப்பிட்ட சில ரிஷபராசிக்காரர்கள் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் பதினொன்றாம் வீட்டில் வலுவாக இருப்பதும் மற்ற யோகாதிபதிகளான சுக்கிரனும், சனியும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டிருப்பதும் மிதுனராசிக்கு குறைகள் எதுவும் சொல்ல முடியாத அமைப்பு என்பதால் இந்தவாரம் மிதுனத்திற்கு யோகவாரம்தான்.

அதேநேரத்தில் செலவுகளை குறிக்கும் சுக்கிரன் ஆட்சிவலுவுடன் இருப்பதால் உங்களின் பொரும்பாலானவர்களுக்கு சுபச்செலவுகள் எனப்படும் சுபவிரையங்கள் இந்தவாரம் உண்டு.போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம்.

தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது.என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் நட்புக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

கடகம்:

வாரஆரம்பநாளான திங்கட்கிழமை முழுவதும் உங்களின் ராசிநாதான சந்திரன் நீசநிலையில் இருப்பதோடு செவ்வாய், சனி ஆகிய இரண்டு பாவக்கிரங்களின் இணைவில் இருப்பதால் இந்தவாரம் உங்களுக்கு குழப்பத்துடன் ஆரம்பிக்கும் வாரமாக இருக்கும். 

அதேநேரத்தில் சந்திரன் நீசமானாலும் பவுர்ணமியோகத்துடன் சூரியனின் பார்வையில் வலுவான அமைப்பில் இருப்பதால் திங்கட்கிழமைக்கு பிறகு மீதி ஆறுநாட்களும் உங்களுக்கு மிகச்சிறந்த பணவரவு உள்ளிட்ட நல்ல பலன்களை தரும் நாட்களாக இருக்கும் என்பது உறுதி.

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக்கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

சிம்மம்:

சிம்மநாதன் சூரியன் பத்தாவது கேந்திரத்திலும், யோகாதிபதி செவ்வாய் நான்காவது கேந்திரத்திலும் அமர்ந்து ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும். இவர்கள் இருவருக்கும் கேந்திரநிலையில் ராசியில் குருபகவான் அமர்ந்து வாரம் முழுவதும் யோகக்கிரகங்கள் கேந்திர அமைப்பில் இருப்பதால் சிம்மராசிக்கு சிறப்புகளைத் தரும் வாரம் இது.

சிம்மத்தினர் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அனைத்தையும் ஜெயித்து உங்களுடைய ஆளுமைத்திறனை நிலைநாட்டுவீர்கள் என்பதால் சிம்மத்திற்கு ஒருபோதும் சரிவுகள் இல்லை. இளையபருவத்தினர் சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இப்போது ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வாரஇறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

கன்னி:

கன்னிநாதன் புதன் எட்டில் மறைந்த நிலையில் இருப்பது பலவீனம்தான் என்றாலும் ஐந்துக்குடைய சனியும், ஒன்பதுக்குடைய சுக்கிரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் வலுவாக ஆட்சிநிலைமையில் இருப்பதால் கன்னிராசிக்கு கெடுபலன்கள் எதுவும் சொல்ல இயலாத வாரம் இது.

அதேநேரத்தில் ராசிநாதன் எட்டில் மறைவதால் உங்களுக்கு மனக்குழப்பங்களும் செயல்திறன் குறைதலும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பணவரவில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பங்குச்சந்தை சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேசன் துறைகளில் லாபம் வருவதும் இந்த வாரம் உண்டு.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். 

துலாம்:

துலாம்நாதன் சுக்கிரன் வாரம் முழுவதும் ஆட்சிநிலைமையில் இருக்கிறார். அதேநேரத்தில் அவர் எட்டாமிடத்தில் மறைந்து ஆட்சிபெறுவதால் நீங்கள் மறைமுகமான எதிர்ப்புகளையும், செலவுகளையும், மந்தமான சூழ்நிலைகளையும் சந்திக்கும் வாரமாக இது இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு சூரியனுடன் ராசிநாதன் சுக்கிரன் இணைந்திருப்பதால் பெண்களால் வில்லங்கங்களும், கருத்துவேறுபாடுகளும் வரும் என்பதால் இந்தவாரம் குடும்பத்திலும் தொழில் இடங்களிலும் துலாம் ராசிக்காரர்கள் நிதானமாகவும் கவனத்துடனும் நடக்க வேண்டிய வாரமாக இருக்கும்.

குடும்பத்துடன் இஷ்டதெய்வ அல்லது குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாரஆரம்பத்திலேயே ஒன்பது, பத்துக்குடையவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் தர்மகர்மாதிபதி யோகமும், பவுர்ணமி யோகமும் உண்டாவதால் இந்தவாரம் வேதனைகள் எதுவும் இல்லாமல் நீங்கள் சாதனைகளை மட்டுமே செய்கின்ற வாரமாக இருக்கும்.

அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு பின்னடைவுகள், சோதனைகள் அனைத்தும் விலகிக் கொண்டு வருவதால் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை மாறத்துவங்கி, நன்மைகள் நடக்கும் என்பதால் சுறுசுறுப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு இந்தவாரம் நல்ல பலன்களைத் தரும்.உங்களைப் புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

தனுசு:

ராசிநாதன் குருபகவானும், ஐந்திற்குடைய செவ்வாயும், ஒன்பதிற்குடைய சூரியனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் அமர்ந்து வலுப்பெறும் அற்புதமான வாரம் இது என்பதால் தனுசுராசிக்காரர்கள் திருப்புமுனையான நல்ல விஷயங்களை சந்திக்கும் வாரமாக இது இருக்கும்.

அதேநேரத்தில் முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினருக்கு ஏழரைச்சனி அமைப்பின் காரணமாக அனைத்து விஷயங்களிலும் பின்னடைவுகள் இனிமேல் வரக்கூடும் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிய முயற்சிகளைத் தொடங்காமல் கவனத்துடன் இருக்க வேண்டிய வாரமாகவும் இது இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் எப்போதும் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மகரம்:

கடந்த சிலமாதங்களாக சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் மகரராசிக்காரர்களுக்கு வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நீங்கள் வேதனைகள் நீங்கி அனைத்து விஷயங்களில் நன்மைகளை மட்டுமே சந்திக்க வேண்டும் என்பதால் நல்லவை நடக்கும் ஆரம்ப வாரம் இது.

குறிப்பிட்ட சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

கும்பம்: 

கும்பராசிக்காரர்களுக்கு ராசியின் நான்கு, ஏழு, பத்து ஆகிய நான்கு கேந்திரங்களிலும் இந்தவாரம் கிரகங்கள் அமைவது ஒரு யோகம் என்பதால் சாதகமற்ற பலன்கள் எதுவும் நடக்காமல் அனைத்தும் உங்கள் எண்ணம் போலவே நடக்க இருக்கின்ற நல்லவாரம் இது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பெண்களின் மூலமான அனுகூலங்களும், நீண்டநாட்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சில விஷயங்களும் உங்களுக்கு இந்தவாரம் வெற்றிகரமாக கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வாரம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.

ரியல்எஸ்டேட், வீடுகட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

மீனம்:

மீனநாதன் குருபகவான் ராகுவுடன் இணைந்து ஆறாமிடத்தில் அமர்ந்து வலுக்குறைந்து உங்களுக்கு நன்மைகள் எதுவும் தரமுடியாமல் இருக்கும் தற்போதைய நிலைமை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல்மாறி குருபகவான் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கப் போவதால் இனிமேல் குறைகள் எதுவும் உங்களுக்கு இல்லை.

இன்னும் சிலவாரங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியினால் உங்களுடைய எண்ணங்களும், செயல்திறன்களும் பளிச்சென வெளிப்பட்டு, தற்போது உங்களுக்கு இருக்கின்ற அனைத்து சாதகமற்ற போக்குகளும் மாறி வெற்றிகரமான பாதையில் நீங்கள் நடக்க இருப்பதற்கான ஆரம்ப அமைப்புகள் இந்தவாரம் உருவாகும்.

ராசிநாதன் ஆறில் இருப்பதால் அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

1 comment :

  1. வணக்கம். கிரகங்கள் சார பரிவர்த்தனை அடைவதால் என்ன பலன்.

    ReplyDelete