Monday, May 2, 2016

ரிஷபம்: 2016 மே மாத பலன்கள்

ரிஷபம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் செவ்வாயின் வீட்டில் வலுக்குறைவுடன் இருந்தாலும் பிற்பகுதியில் ராசியில் ஆட்சி பெறுவதால் மாத ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் குறைவான மாதமாக இது தொடங்கினாலும் இறுதியில் கிடைக்கும் பணவரவால் உங்களுக்கு நிறைவான மாதமாகவே இருக்கும். எனினும் வீண் விரயங்கள் இப்போது அதிகமாகவே இருக்கும் என்பதால் செலவு செய்யும் முன் யோசிப்பதும் சிக்கனமாக இருப்பதும் ரிஷபத்திற்கு நன்மையைத் தரும்.


தேவையற்ற ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். இதுவரை வேலை கிடைக்காத இளையபருவத்தினர் இந்த மாதம் வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இந்த மாதம் நல்ல மாதமாக அமையும். அரசியல்வாதிகள், கலைத்துறையினர், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும்.

6,8,9,10,20,21,22,27,28,29, ஆகிய நாட்களில் பணம் வரும். 23ஆம் தேதி இரவு 12 முதல் 25ஆம் தேதி காலை 9 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

No comments :

Post a Comment