Monday, 4 April 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (3.4.16 முதல் 9.4.16)

மேஷம்

ஐந்திற்குடையவன் பனிரெண்டில் மறைவதால் இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும் வாரமாக இருக்கும். பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு இந்த வாரத்திலிருந்தே நீங்கள் பட்ஜெட் போட வேண்டி இருக்கும். ஆனாலும் பணவரவிற்கு குறை இருக்காது.

வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்லபலன்கள் இருக்கும். பிடித்தமில்லாத வேலையில் இருந்தவர்கள் உங்களுக்கேற்ற தகுதியான வேலையில் சேர்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உங்களுடைய பேச்சுக் கேட்கப்படும். ஆலோசனை ஏற்கப்படும்.

வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்.

ரிஷபம்

ராசிநாதன் சுக்கிரன் உச்ச வலுவுடன் சூரியனுடன் இணைந்து ராசியை சனி பார்ப்பதால் இந்த வாரம் வாழ்க்கைத்துணைக்கு நீங்கள் செலவுகள் செய்யும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலர் மனைவி கேட்கும் வீட்டுப்பொருட்களை கடன் வாங்கியாவது வாங்கித் தருவீர்கள்.

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு பெண்களால் இனிமையான அனுபவங்கள் இருக்கும்.

கணவன்-மனைவிக்குள்ளும் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்கு தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார்.

மிதுனம்

ராசிநாதன் புதன் வாரம் முழுவதும் செவ்வாயின் வீட்டில் இருப்பதால் வார ஆரம்பத்தில் தாய்வழி உறவில் முட்டல்களும் மோதல்களும் உங்களுக்கு இருக்கும். தாயுடன் பிறந்தவர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு உங்களை மனக்கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு செல்வதற்கான ஆரம்பங்கள் இந்த வாரம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம்.

ராகுபகவான் மூன்றாம் இடத்தில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும்.

கடகம்

செவ்வாய் வாரம் முழுவதும் ஆட்சியாக இருப்பது தொழிலுக்கும், வேலைக்கும் நல்ல அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களின் வியாபாரம் மேம்பட்ட நிலையில் இருக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லாமலும், பொருளாதார நன்மைகளும் இருக்கும்.

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது.

பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட சனியை சுலபமாக சமாளித்து விடுவீர்கள்

சிம்மம்

ராசிநாதன் சூரியன் எட்டில் இருப்பதால் இந்த வாரம் சிம்மராசிக்காரர்களுக்கு பொருளாதார விஷயத்தில் சுணக்கங்களும், இடையூறுகளும் இருக்கும். இதோ வந்து விட்டது அதோ முடிந்து விட்டது என்று எதிர்பார்க்கும் விஷயங்கள் இந்த வாரமும் இழுத்துக் கொண்டு போய் உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும்.

பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்கள், பிரச்சனையை தள்ளி வைப்பது நல்லது. சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது.

சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை வைக்க வேண்டும். பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர் செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது.

கன்னி

கன்னிநாதன் புதன் எட்டில் மறைந்தாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் இந்த வாரம் கன்னிக்கு சோதனைகளோ, வேதனைகளோ இல்லாத வாரமாக இருக்கும். ஆயினும் ராசிநாதன் மறைவதால் என்பதால் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள்.

வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.

துலாம்

ராசிக்கு இரண்டாம் வீட்டில் இருபெரும் பாபக்கிரகங்களான சனியும், செவ்வாயும் இருந்து உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தாலும் ராசிநாதன் உச்சம் அடைவதால் அனைத்துத் தடைகளையும் மீறி நீங்கள் வெற்றி பெறும் வாரமாக இது இருக்கும்.

தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும்.

விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. விவசாயிகளுக்கும், கிராமப்புறத்தில் உள்ள சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள்தான் நடக்கும்.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் சனியுடன் இணைந்து ராசியில் ஆட்சி பெற்றாலும் ஜீவனாதிபதி சூரியன் உச்ச சுக்கிரனுடன் இணைவதால் இந்த வாரம் பெண்கள் விஷயத்தில் செலவுகளும் மனம் வருத்தப்படும்படியான நிகழ்ச்சிகளும் நடக்கும் என்பதோடு இவற்றிற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள் என்பதால் கவனமாக இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும்.

முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த வாரம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வருமானம் வரும் வாரம் இது. விவசாயிகளுக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான காலகட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தலாம்.

தனுசு

ஐந்திற்குடையவன் ஆட்சியாகவும் ஒன்பதிற்குடையவன் கேந்திரத்தில் பரிவர்த்தனையுடன் இருப்பது இந்த வாரம் தனுசுராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் தொழில் இடங்களில் அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகளும் சந்தோஷ விஷயங்களும் உள்ள வாரமாக இது இருக்கும்.

இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும்.

பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். ஊடகத்துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்ல வாரம். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல்கதவைத் தட்டும்.

மகரம்

எட்டாமிடத்தில் இருக்கும் ராகுபகவானுடன் விரயாதிபதி குரு கூடி தந்தைக்காரகன் சூரியன் இவர்களுடன் பரிவர்த்தனை ஆவதால் அப்பா விஷயத்தில் மனக்கஷ்டங்களும், விரயங்களும் இந்த வாரம் இருக்கும். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலைமை மாறி வியாபாரம் சூடுபிடிக்கும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். அருமையான புதிய வீடு கட்டுவதற்கோ பெருநகரங்களில் இருப்பவர்கள் நல்ல இடத்தில் சொந்தமாக பிளாட் வாங்கவோ உண்டான ஆரம்பங்கள் இந்த வாரம் உண்டு.

கும்பம்

பத்தாமிடத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து தொழில்ஸ்தானத்தை வலுப்படுத்துவதாலும் யோகாதிபதி சுக்கிரன் உச்சமாக இருப்பதாலும் இந்த வாரம் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் சம்பந்தமாக கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இப்போது உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் கும்ப ராசிக்காரர்கள் மிகப் பெரிய நன்மைகளை அடையப் போகிறீர்கள் அதாவது ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.

மீனம்

ஆறுக்குடையவன் ராசியில் இருந்து எட்டிற்குடையவனும் அங்கே உச்சமாக இருப்பதால் இந்தவாரம் வெளிமாநிலம் வெளிநாட்டில் இருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு பணவிஷயங்களில் நெருக்கடியான நிலைகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் நெருக்கடியான சூழல்களும் இருக்கும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. வீடு வாங்குவது விஷயமாக ஹவுசிங் லோன் வாங்க வேண்டியிருக்கும். தொழில் வியாபார வேலை இடங்களில் கூடவே சிரித்துப்பேசி உங்களை கவிழ்க்கப் பார்க்கும் எதிரிகள் உருவாவார்கள். எதிலும் கவனமாக இருங்கள்.

No comments :

Post a Comment