Monday, 25 April 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (25.04.1 6 முதல் 01.05.16 வரை)

மேஷம்:

வார ஆரம்பமே சந்திராஷ்டம நாளாக இருந்தாலும் சூரியன், செவ்வாய், குரு மூவருமே உச்சம் ஆட்சி அதிநட்பு என வலுவாக இருப்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்திலும், தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளிலும் கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரமாக இது இருக்கும்.

ஆகஸ்டு மாதத்தில் குருபகவான் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து மாறி ஆறாமிடத்திற்குச் செல்லப் போவதால் அது முதல் உங்களுக்கு சில மாற்றங்கள் நடைபெறும். எனவே இப்போதிருந்தே தேவையற்ற அனாவசியக் கடன் எதுவும் வாங்காமல் சிக்கனமாக இருப்பது நல்லது.

அஷ்டமச்சனி நடப்பில் உள்ளதால் சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். எதிலும் நிதானமாக இருங்கள். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். பதறாத காரியம் சிதறாது என்பது இப்போது உங்களுக்குப் பொருந்தும்.

ரிஷபம்:

சுக்கிரன் உச்சமாகி புதன் விரயத்தில் உள்ளது இந்த வாரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மைகளைச் செய்யும் என்றாலும் நான்கிற்குடைய சூரியன், பனிரெண்டில் மறைவதால் வீடு, வாகனம், அம்மா போன்ற இனங்களில் வீண் செலவுகளும், விரையங்களும் உள்ள வாரமாகவும் இது இருக்கும்.

உங்களின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகள் இருக்காது. புதிய கடன்கள் வாங்க வேண்டிய தேவையின்றி போதுமான வருமானம் தாராளமாக வரப் போகின்றது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

வீடு வாங்குவீர்கள். வீடு கட்டுவது இடையில் தடைப்பட்டு நின்ற நிலையில் இருப்பவர்கள் இந்த வாரம் முதல் மறுபடியும் வேலையை ஆரம்பிப்பீர்கள்.. தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். உயர்கல்வி கற்க முடியும். தடைபட்ட படிப்பு மறுபடி தொடரும்.

மிதுனம்:

இந்த வாரம் ராசிநாதனும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் பத்து பதினொன்றில் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான செயல்கள் நடக்க கூடிய வாரமாகவும் பணவரவு உள்ள வாரமாகவும் இது இருக்கும். அதேநேரத்தில் ஒன்பதாமிடத்து கேதுவால் தந்தையின் ஆரோக்கியம் கவனிக்கப் பட வேண்டும்.

வியாபாரிகளுக்கு இது நல்ல வாரம்.. இளைய வயதினருக்கு வாழ்க்கை செட்டில் ஆகும் சம்பவங்கள் இந்தவாரம் நடக்கும். நல்ல சம்பளத்துடன், விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வாழ்க்கைத் துணையும் அமையும் வாய்ப்பு இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் இனிமேல் இருக்காது.

வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், பிறந்தநாள் விழாக்கள் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் உற்சாகமும், உறவினர் வருகையும் இருக்குமாதலால் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

கடகம்:

பத்தில் இணைந்திருக்கும் சூரியனும், புதனும் இந்தவாரம் உங்கள் வாக்குஸ்தானத்தை வலுப்படுத்தி நீங்கள் சொல்லும் சொல்லை பலிக்க வைப்பதோடு தொழிலிலும் வருமானத்தை தருவார்கள் என்பதால் இந்த வாரம் கடக ராசிக்கு மேன்மை தரும் வாரமே.

பூர்வீகச் சொத்து விஷயத்தில் வில்லங்கம் மற்றும் வழக்கு இருப்பவர்கள், பாகப்பிரிவினை சம்பந்தமான பேச்சுவார்த்தை நிலுவையில் இருப்பவர்களுக்கு உங்கள் பக்கம் சாதகமான பலன்கள் நடக்கும். புதிதாக தொழில் தொடங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் இனிமேல் தொழில் தொடங்கலாம்.

தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் வாரம் இது. திருமணமாகாத இளம் வயதினருக்கு திருமண ஆரம்ப நிகழ்வுகள் நடைபெறும். புத்திரபாக்கியம் கிடைக்கும். மங்கள காரியங்கள் வீட்டில் நடக்கும்.

சிம்மம்:

ராசிநாதன் சூரியனும் உச்சம் பத்தாமிட அதிபதி சுக்கிரனும் எட்டில் மறைந்து உச்சம் என்பதால் இதுவரை உங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்து வந்த மந்தநிலைகள் விலகும். உங்களின், முயற்சிகள் அனைத்தும் இனிமேல் வெற்றியாகி காரியங்கள் அனைத்தும் தடையின்றி நடக்கும் வாரமாக இது இருக்கும்.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் இருந்த இளைய பருவத்தினருக்கு அவர்களுக்கு பிடித்தமான இடங்களில் வேலை கிடைக்கும். முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இனிமேல் திருமணம் குழந்தை நல்லவேலை என்று செட்டில் ஆவீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

வேலை செய்யும் இடங்களில் முதலாளி மற்றும் மேலதிகாரி சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருங்கள். தொழில் செய்பவர்கள் யாரையும் நம்ப வேண்டாம். எதிலும் தேவையின்றி அனாவசிய ரிஸ்க் எடுக்காதீர்கள்.

கன்னி:

கன்னிராசியின் தர்மகர்மாதிபதிகள் புதனும் சுக்கிரனும் இந்த வாரம் வலுவான நிலையில் அமர்ந்து ராசியை உச்சகிரகம் பார்ப்பதால் கன்னிராசிக்கு கவலைகள் இல்லாத வாரமாக இது இருக்கும். ராசிநாதன் எட்டில் இருப்பது உங்கள் மனதைச் சற்றுக் குழப்பினாலும் சுக்கிர வலுவால் எதையும் சமாளிப்பீர்கள்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வாரம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் ஸ்தானாதிபதி புதன் உச்ச கிரகத்துடன் இணைந்திருப்பதால் தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கும், காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வாரம் சம்பளம் தவிர்த்த வருமானங்கள் படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். ரொம்பநாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதல் இப்போது நடைபெறும்.

துலாம்:

இந்தவாரம் தந்தைவழி உறவினர் விஷயத்தில் வருத்தங்களும், மனஸ்தாபங்களும் உள்ள வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அப்பாவால் செலவுகளும், விரையங்களும் இருக்கலாம் என்பதால் தந்தையின் உடல்நிலையும் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கும்.

வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்ல நேரம் இது. அரசு தனியார் துறை ஊழியர்கள் தாங்கள் செய்யும் வேலையில் மதிப்பு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணை விஷயத்தில் ஆதாயம் இருக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.

பெண்களுக்கு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள் நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.

விருச்சிகம்:

ராசிநாதன் ஆட்சிபெற்று இருப்பதாலும் ஜீவனாதிபதி உச்சத்தில் இருப்பதாலும் வரும் எதிர்ப்புகள் அனைத்தையும் நீங்கள் வெற்றி கொள்ளும் வாரமாக இது இருக்கும். வாரஇறுதியில் சூரியனும், சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் அமர்வதால் தொழில் சிக்கல்கள் எதுவும் இந்த வாரம் ஏற்படப் போவதில்லை.

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பும். ஞானிகளின் தரிசனமும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு வேலைக்காரர்களால் பிரச்னை வரும். வெளியில் பணம் கொடுத்து விடும் போதோ வங்கியில் இருந்து பணம் எடுத்து வரும் போதோ மிகுந்த கவனம் தேவை. கடன் சிக்கல்கள் எதிலாவது சனி மாட்டி வைப்பார். எதிலும் அவசரப்படாதீர்கள். மகன், மகள் விஷயமாய் நல்ல செய்திகளும், நல்ல நிகழ்ச்சிகளும் இந்த வாரம் இருக்கும்.

தனுசு:

ஆறுக்குடையவன் உச்சமாக இருப்பதால் குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை அடங்கிக் கிடந்த கடன்தொல்லைகள் லேசாக எட்டிப்பார்த்து மனவருத்தத்தைத் தரும் வாரமாக இது இருக்கும். அதே நேரத்தில் ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் எதுவும் உங்கள் கையை மீறி போகாமால் கட்டுக்குள்ளும் இருக்கும்.

சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீண்ட நாள் குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். தாய்வழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.

தொழில், வேலை விஷயங்களில் நல்ல மாற்றங்கள் இருக்கும். குறிப்பாக நீதித்துறை, வங்கி, சொல்லிக்கொடுப்பவர்கள் மருத்துவம், ஆன்மிகம், ஜுவல்லரி, வட்டி, சிட்பண்ட் போன்ற துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

மகரம்:

எட்டாம் அதிபதி உச்சம் பனிரெண்டாமிடத்திற்கு சுபர் பார்வை என அஷ்டம விரைய ஸ்தானங்கள் வலுப்பெறுவதால் இந்த வாரம் உங்களுக்கு வீண்செலவுகள் உள்ளவாரமாக இருக்கும். வெளிநாடு, வெளிமாநில வேலையை எதிர்பார்த்திருக்கும் மகரராசிக்காரர்களுக்கு அவர்களுடைய விருப்பம் நிறைவேறும் வாரம் இது.

பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு மிக விசேஷமான நல்ல பலன்கள் இந்தவாரம் நடக்கும். இதுவரை இருந்து வந்த காரியத்தடைகள் அடியோடு முற்றிலும் நீங்கும். கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வாரம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். நான்காமிடம் வலுவாக இருப்பதால் வீடு வாகனம் தாயார் போன்ற விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தடைகள் நீங்கும்.

கும்பம்:

ராசியில் குருபார்வையில் இருக்கும் கேதுபகவான் இந்தவாரம் உங்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டையும் முக்கியமான திருக்கோவில்களுக்கு செல்லும் சந்தர்ப்பத்தையும் தருவார். குறிப்பிட்ட சிலருக்கு குலதெய்வ வழிபாடோ புனித யாத்திரைகளோ இருக்கும் ஆன்மிக வாரம் இது.

குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் வாரம் இது. இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். புதுத்தொழில் தொடங்கலாம். செய்யும் தொழில் சிறப்பாக நடக்கும். வேலை மாற்றம், தொழில்மாற்றம், இடமாற்றம் ஆகியவை உங்களுக்கு சாதகமாக ஏற்படும்.

அரசு, தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் விதிகளை மீறி யாருக்கும் சலுகை தராதீர்கள். அதனால் சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகள் அனுமதியின்றி எதையும் செய்ய வேண்டாம். முறைகேடான வழியில் வரும் பணத்திற்கு ஆசைப்படாதீர்கள். குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை.

மீனம்:

மீனராசிக்கு வசந்த காலம் இன்னும் சில வாரங்களில் வரப்போகிறது. ஆகஸ்டு மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் தென்றல் வீசும் நந்தவனத்திற்குள் குளிர்ந்த மனதுடன் உள்ளே நுழையும் அனுபவம் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் இப்போதிருக்கும் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

எவரிடமும் கருத்து மோதல்களிலோ, வாக்குவாதங்களிலோ ஈடுபட வேண்டாம். யாரையாவது நீங்கள் கோபப்பட்டு திட்டினால் அது நீண்டநாள் மனஸ்தாபத்தில் கொண்டு போய்விடும் வாய்ப்பு இருக்கிறது. இதுவரை டென்ஷனும், படபடப்புமாக இருந்தவர்கள் இனிமேல் நிதானமாக இருப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி இருக்கும்.

உற்சாகமும் சந்தோஷமும் மறுபடியும் உங்களிடம் வரும். ஏதாவது ஒரு விஷயத்தில் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டும், எதற்காக கலங்குகிறோம் என்று தெரியாமல், எதையோ நினைத்து மனது சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த மீன ராசிக்காரர்களுக்கு இனிமேல் தெளிவு பிறக்கும்.

No comments :

Post a Comment