Friday, 1 April 2016

கன்னி: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

கன்னி:

கடந்த சில வாரங்களாக நீசம் பெற்று வலுவிழந்து இருந்த ராசிநாதன் புதன் அது நீங்கப் பெறுவதும் மாதம் முழுவதும் தன பாக்யாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதும் இந்த மாதம் கன்னிராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் ஏப்ரல் மாதம் முழுமையும் கன்னிக்கு நன்மை தரும் மாதமாக அமையும் என்பது உறுதி.

தந்தைவழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு.

மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத்துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் மாதம் இது.

1 comment :