Friday, 1 April 2016

கும்பம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

கும்பம்:

பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் இதுவரை செய்யாமல் சொல்லாமல் யோசித்துக் கொண்டிருந்த சில விஷயங்களில் உங்களுடைய தயக்கங்கள் விலகி இந்த மாதம் பளிச்சென்று தெளிவான சில முடிவுகளை நீங்கள் எடுக்கும் மாதமாக இது இருக்கும். அதுபோலவே எத்தகைய நிர்ப்பந்தங்கள் வந்தாலும் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்காமல் உறுதியாக இருக்கும் மாதமாகவும் இருக்கும்.

பொதுவாக அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். அதேநேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் உண்டு.

வாழ்க்கைத்துணை வழியில் நன்மைகள் உண்டு. முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு நீங்கள்தான் உதவி செய்யும்படி இருக்கும். என்னதான் அவர்களுக்கு செய்தாலும் எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்வதையும் கேட்க வேண்டியிருக்கும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும்.

No comments :

Post a Comment