Friday, 1 April 2016

சிம்மம்: 2016 ஏப்ரல் மாத பலன்கள்

சிம்மம்:

மாத பிற்பகுதியில் சிம்மநாதன் சூரியன் உச்ச நிலையில் இருப்பதும் மாதம் முழுவதும் யோகாதிபதி செவ்வாய் நான்காம் வீட்டில் ஆட்சியாக இருப்பதும் சிம்மத்திற்கு நன்மை தரும் அமைப்புகள் என்பதால் இந்த மாதம் சிம்மத்திற்கு நல்ல மாதமே. அதே நேரத்தில் மாத ஆரம்பத்தில் ராசிநாதன் எட்டில் இருப்பதால் எந்தவிஷயமும் நேரிடையாக முடிவுபெறாமல் சுற்றிவளைத்து மூக்கைத் தொடும் விஷயமாகவே அமையும் என்பதால் அனைத்திலும் நிதானமும், கவனமும் உங்களுக்கு தேவைப்படும்.

இளையபருவத்தினர் சோம்பலை விட்டு ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை பார்க்க வந்து விட்டாலே பாதி வேலை முடிந்து விட்டதாக அர்த்தம். எனவே சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு சந்தர்ப்பம் இருக்கிறது. கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்குவழி வேண்டாம்.

அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் மேல்வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வேலை தொழில் விஷயமாக எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்யுங்கள். பெண்களுக்கு இது நல்ல மாதம்தான்.

No comments :

Post a Comment