Saturday, 30 April 2016

2016 மே மாத நட்சத்திர பலன்கள்

அஸ்வினி:

நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. இந்தமாதம் முதல் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது. குறிப்பிட்ட சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். இந்த மாதம் நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.

பரணி:

மாத பிற்பகுதியில் உங்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும். முற்பகுதியில் சிறிது அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிவுக்கு வரும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் குலதெய்வக் கோவிலுக்கு போவதும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும் இருக்கும். பெண்களுக்கு வேலைப்பளு அதிகம் உள்ள மாதம் இது. பிள்ளைகளிடமிருந்து சந்தோஷச் செய்திகள் வரும். சிலருக்கு வாகனம் வீடு மாற்றம் உண்டு. இதுவரை இருந்ததைவிட நல்ல வீட்டிற்குப் போவீர்கள். பழைய வாகனத்தை விற்று விட்டு அதைவிட உயர்ந்த வாகனம் வாங்குவீர்கள்.

கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் இந்த மாதம் தாயார் விஷயத்தில் அன்பையும், ஆதரவையும் அனுபவிப்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு தாயார் வகையிலான சொத்து விவகாரங்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் உங்களுக்கு சாதகமாக இப்போது முடியும். வாழ்க்கைத்துணைவர் விஷயத்தில் சந்தோஷங்கள் இருக்கும். திரவரீதியிலான பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல பணவரவு உண்டு. விவசாயிகள் காய்கறி வியாபாராம் செய்பவர்கள் உள்ளிட்டவர்களும் அரசு, தனியார் துறை ஊழியர்களும் மாத பிற்பகுதியில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

ரோகிணி

உங்களைத் தொல்லைப்படுத்தி கொண்டிருந்த கடன் சிக்கல்களில் இருந்து இந்த மாதம் மீண்டு வருவீர்கள். இதுவரை நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்த ஒரு நபர் முக்கியமான நேரத்தில் இந்தமாதம் உங்களுக்கு உதவுவார். எதிர்ப்புகள் அனைத்தும் அடியோடு விலகும் மாதம் இது. சிலருக்கு இதுவரை இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் சரியாகும். குறிப்பாக பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கி மேன்மைகளைத் தரும் மாதம் இது. முதல் வாழ்க்கை கோணலாகி வழக்கு கோர்ட் என அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான திருப்பங்களும் முடிவுகளும் உண்டு.

மிருகசீரிஷம்

உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் ஆட்சிபெற்ற அமைப்பில் இருப்பதால் இந்தமாதம் மனமகிழ்ச்சியான நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். பெண்களுக்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கக் கூடிய மாதமாகவும் இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வாழ்க்கைத்துணை உறுதியாகும் அமைப்புகள் இருக்கிறது. எதிர்காலத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். 30 வயதிற்குட்பட்ட இளைய பருவத்தினருக்கு வாழ்க்கை நல்லவிதமாக அமைவதற்கான திருப்புமுனைகள் இப்போது உண்டு. அரசுஊழியர், கலைத்துறையினர், பொதுவாழ்வில் இருப்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்மைகளைத் தரும் மாதம் இது.

திருவாதிரை

வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும்.தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

புனர்பூசம்

சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் மாதம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் நடக்கும். இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

பூசம்

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மிக நல்ல மாதம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். கணவன்மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

ஆயில்யம்

அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் மாதம் இது. எனவே இந்த மாதம் உங்களுக்கு எவ்விதக் குறையும் இல்லாத மாதமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் இந்த மாதம் நிறைவேறும். குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் மாதம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்துவீர்கள்.

மகம்

மே மாதம் உங்களின் தெய்வ பக்தி அதிகரிக்கும் மாதமாக இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும் மாதம் இது. ஆன்மிக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தெய்வ திருப்பணி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் இந்த மாதம் மிகவும் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். அதிர்ஷ்டம் இந்த மாதம் உங்களுக்கு கை கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.

பூரம்

உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த மாதமாக இது இருக்கும். புதிய அனுபவங்கள் உண்டு. குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை தெரியாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவம் கிடைக்கும். சிலர் இந்தமாதம் ஏதேனும் ஒரு தொலைதூர திருக்கோவிலுக்கு செல்வீர்கள். இப்போது நடக்கும் திருப்பு முனையான சம்பவங்களால் உங்கள் எதிர்காலம் மிகவும் இனிமையாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு நடக்கும் சில விஷயங்கள் பிடிக்காதவையாக தேவையற்றவையாக தோன்றினாலும் அவை யாவும் எதிர்கால நன்மைக்கு அஸ்திவாரம் போடும் அமைப்புகள் என்பதை பின்னால் உணர்ந்து கொள்வீர்கள்.

உத்திரம்

இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் உத்திரம் நட்சத்திரக்கார்களுக்கு இந்தமாதம் நல்ல மாதம்தான்.

அஸ்தம்

சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இந்தமாதம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். நகைகள் சேரும்.

சித்திரை

இந்த மாதம் சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும்.

சுவாதி

இந்த மாதம் உங்களுக்கு மனதிற்கு இனிய சம்பவங்களும், குடும்பத்தில் குதூகலம் தரும் நிகழ்ச்சிகளும் நடக்கும் மாதமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பயணங்கள் அமையும். இளைஞர்கள் வடமாநில பிரயாணம் செய்வீர்கள். உங்கள் நட்சத்திர நாதன் சுபத்துவமுடன் இருப்பதால் நல்ல பலன்களே நடைபெறும் என்றாலும் அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பின்பே நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

விசாகம்

குருபகவான் அதிநட்பு நிலையில் இருப்பதால் விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு பணவரவுகளும், சந்தோஷங்களும் கிடைக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் இருக்கலாம். வயதான சிலர் தாத்தா, பாட்டியாக உயர்வு பெறுவீர்கள். பெயர் சொல்ல ஒரு பேரன் பிறக்கும் மாதம் இது. ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு இருந்து வரும் சிக்கல்கள் தீரத் தொடங்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்கமுடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள்.

அனுஷம்

வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் முதல் நிலைமை மாறி அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். போட்டியாளர்கள் ஒழிவார்கள். புதிய கடை திறக்க முடியும். இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். கிளைகள் ஆரம்பிப்பீர்கள். முதல் திருமணம் கோணலாகி காவல் நிலையம், வழக்கு, நீதிமன்றம் என்று அலைந்து திரிந்தவர்களுக்கு அனைத்தும் இப்போது நல்லபடியாக ஒரு முடிவிற்கு வந்து தெளிவு பிறக்கும். இரண்டாவது வாழ்க்கைக்கான அமைப்புகள் இந்த மாதம் உருவாகும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் இருக்கும்.

கேட்டை

ஏழரைச்சனியின் ஆதிக்கத்தில் இருக்கும் உங்களுக்கு மே மாதம் நல்ல பலன்களைத் தரும். பிறந்த இடத்தை விட்டு தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அடுத்த வருடம் நிலையான மாற்றங்களை தருவதற்கான நல்ல நிகழ்ச்சிகள் இந்த மாதம் உண்டு. பெண்களால் ஆதரவும், அனுகூலமும் கிடைக்கும். மாதம் முழுவதும் ஏழாமிடம் வலுப்பெற்றுக் காணப்படுவதால் கணவன், மனைவி ஒருவருக்கொரு உதவியாக இருப்பீர்கள். பொருளாதார சிக்கல்கள் எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பொதுவாக மகிழ்ச்சியை எதிர்கொள்ள இருப்பதற்கு நீங்கள் தயாராகும் மாதம் இது.

மூலம்

எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புக்கள் இந்த மாதம் உள்ளது. இளைய பருவத்தினரை பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். கலைஞர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். கெடுதல்கள் எதுவும் இந்த மாதம் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பூராடம்

இதுவரை தோல்வி மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப்பெற்று இனி சுறுசுறுப்பாவீர்கள். சுயதொழில் செய்வோருக்கு முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இந்தமாதம் நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக்குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இதுவரை தந்தையிடம் ஏதேனும் ஒரு காரியத்தை சாதிக்க நேரம் எதிர்பார்த்து இருந்தவர்கள் இந்த மாதத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஆசைப்பட்டுக் கேட்கும் விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பார். வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது.

உத்திராடம்

ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்தமாதம் முடிவுக்கு வரும். இந்தமாதம் உங்களுக்கு. தனயோகம் உண்டாவதால் பணவரவுக்குப் பஞ்சமில்லை.. பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கால நல்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்

திருவோணம்

வருமானம் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். குறிப்பிட்ட சில திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும். இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும் மாதமாக அமையும். அதேநேரத்தில் செலவு செய்ய பணம் வேண்டுமே? எனவே பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் சேமிக்க முடியாமல் போகும். சிலர் வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவீர்கள். ஆசிரியர், பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல மாதம் இது. செலவுகளும், சுப விரயங்களும் இருக்குமாதலால் வீட்டில் திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா, போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் உற்சாகமும், உறவினர் வருகையும் இருக்குமாதலால் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்.

சதயம்

இதுவரை கஷ்டப்பட்டு செய்த காரியங்கள் அனைத்தும் இனிமேல் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றியாக நடந்து உங்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும். இந்த மாதத்தில் இருந்து புதிய மனிதராக உணர்வீர்கள். உங்களில் அரசியல்வாதிகளில் சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். மே மாதம் உங்களுக்கு அருமையான மாதம். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னைகள் உள்ளவருக்கு இந்த மாதம் சாதகமான தீர்வு கிடைக்கும். வெகுசிலருக்கு தீர்த்த யாத்திரை, குலதெய்வ வழிபாடு போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இந்த மாதம் உற்சாகமான மாதமாக இருக்கும்.

பூரட்டாதி

உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் நல்ல அமைப்பில் இருப்பது வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வளப்படுத்தும் என்பதால் இந்த மாதம் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். அதே போல மாதம் முழுவதும் பணவரவும் நல்லபடியாக உண்டு. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம்.

உத்திரட்டாதி

உங்கள் நட்சத்திரநாதன் சனி மாதம் முழுவதும் செவ்வாயுடன் இணைவதால் எரிச்சலும் சிடுசிடுப்பும் இருக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சுக்களில் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. திருமணம் தாமதமாகி கொண்டிருந்தவர்களுக்கு இந்த வருடம் சிறப்பாக திருமணம் நடைபெறும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் தைரியம் வரப்பெற்று பெற்றோர்களிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இனிமேல் நல்ல செய்திகள் உண்டு.

ரேவதி

இந்த மாதம் தந்தைவழியில் உங்களுக்கு எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாதம் வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். இதுவரை வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள்.

No comments :

Post a Comment