Monday, 18 April 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (18.4.16 - 24.4.16)

மேஷம்:

மேஷராசிக்கு இந்த வாரம் தந்தை வழி உறவினர்களால் நன்மைகளும், பூர்வீக சொத்து விஷயங்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கங்களும், சண்டை, சச்சரவுகளும் விலகும் வாரமாக இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சந்தோஷமான சமாச்சாரங்களும், நல்ல தகவல்களும் உண்டு.

பதினொன்றாமிடத்தில் கேது பகவான் குரு பார்வையில் இருப்பதால் ஆன்மீக விஷயத்தில் அதிக நாட்டம் கொள்வீர்கள். பக்தி இயக்கங்களில் ஈடுபாடு வரும் சிலர் புதிதாக சில குறிப்பிட்ட கோவில்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து போவதற்கு ஆர்வம் கொள்வீர்கள். சிவபக்தி மேன்மை தரும்.

வாரம் முழுவதும் சந்திர பகவான் நல்ல நிலைமையில் இருப்பதால் வீடு, வாகனம் போன்ற விஷயங்களில் நன்மைகள் உண்டு. இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அது வாங்குவதற்கான ஆரம்ப நிகழ்வுகளும் மனதில் அது சம்பந்தப்பட்ட எண்ணங்களும் இருக்கும்.

ரிஷபம்:

ரிஷபநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் உங்கள் அந்தஸ்து, கவுரவம் உயரும் வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு நீண்ட காலமாக தடங்கலாகி வந்த ஒரு விஷயம் இப்போது எண்ணம் போலவே நடைபெறும். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், பொருள் விற்பவர்கள் உயர்வு பெறுவீர்கள்.

குடும்பாதிபதி புதன் பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் இந்த வாரம் குடும்பத்திற்காக வீண் செலவுகள் உண்டு. சிலருக்கு குடும்பத்தோடு உல்லாச பயணம் அமையும். தேவையற்ற பொருள் வாங்கி பணத்தை விரையம் செய்வீர்கள். வருமானமும் அதற்கேற்ற வகையில் வரும்.

இளைய பருவத்தினர் சிலருக்கு எதிர்பால் இனத்தவர் மேல் இந்த வாரம் ஈர்ப்பு உண்டாகும். ஒரு சிலர் காதலிக்க ஆரம்பித்து எதிர்கால வாழ்க்கை துணைவரை அடையாளம் காண்பீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் திருமணம் நடப்பதற்கான ஆரம்பங்கள் இப்போது உண்டு.

மிதுனம்:

மிதுன நாதன் புதன் லாப வீட்டில் அமர்ந்து ராஜயோகாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் உச்சமாக இருக்கும் நல்ல வாரம் இது. இதுவரை எதிர்ப்புகளினால் தங்களின் உண்மையான திறமையை வெளிகொண்டு வர முடியாதவர்களும் திறமை இருந்தும் ஜெயிக்க முடியாதவர்களும் இந்த வாரம் வெற்றிகளை பெறுவீர்கள்.

சகாய ஸ்தானதிபதி உச்சமாக இருப்பதாலும் உதவி ஸ்தானத்தில் ராகுபகவான் வலுப்பெற்றிருப்பதாலும் இப்போது நீங்கள் கேட்காமலையே உதவிகள் கிடைக்கும். குறிப்பாக அந்நிய இன, மத, மொழிக்காரர்கள் மூலம் நன்மைகள் உண்டு. ஒரு சிலருக்கு இஸ்லாமிய நண்பர்கள் தக்க சமயத்தில் கைக்கொடுப்பார்கள்.

அரசு, தனியார் துறைகளின் ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத் தரப்பு மிதுன ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை தரப்போகும் வாரம் இது. எனவே உங்களுக்கு எவ்விதக் குறையில்லாத வாரம் இது.

கடகம்:

தனாதிபதி சூரியன் உச்சம் பெற்று ஒன்பதாமிடத்தில் சுக்கிரன் வலுப்பெற்றுள்ளதால் கடக ராசிக்கு தனம், வாக்கு, குடும்பம் ஆகிய மூன்று அமைப்புகளிலும் நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும். இந்த வாரம் நீங்கள் சொல்வது பலிக்கும். பண சிக்கல்கள் இருக்காது.

அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும் குறிப்பாக பூசம் நட்சத்திரக்கார்களுக்கு இந்த வாரம் நல்லவாரம்.

பெண்கள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். அவர்களால் வம்புகள் வரலாம் என்பதால் கவனமுடன் இருங்கள். மனைவியுடன் கருத்து வேற்றுமை இருக்கும். மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் அதிகம் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு. சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.

சிம்மம்:

ராசிநாதன் உச்சமாக இருப்பதும் அவருக்கு வீடு கொடுத்த யோகாதிபதி செவ்வாய் ஆட்சியாக இருப்பதும் சிம்மராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களுக்கு குறைகள் என்று சொல்ல எதுவும் இல்லை. அதே நேரத்தில் அலைச்சல்களும் சிலருக்கு சரியான வேளையில் சாப்பிட முடியாத நிலையும் இருக்கும்.

சகோதரவிஷயத்தில் மனவருத்தங்களும், இழப்புக்களும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன ஆயினும் கெடுதலாக ஒன்றும் நடக்காது. முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் அமைந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும்.

கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டு. ஆன்மீக ஈடுபாடு இந்த வாரம் உங்களுக்கு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஷீரடி, மந்திராலயம் போன்ற இன்றும் மகான்கள் வாழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கும் இடங்களுக்கு சென்று வருவீர்கள்.

கன்னி:

எட்டு, பனிரெண்டாமிடங்கள் இந்த வாரம் வலுப்பெறுவதால் கன்னி ராசிக்காரர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டிய வாரமாக இது இருக்கும். பண வரவுகள் கண்டிப்பாக தடைபடாது என்றாலும் தேவையற்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது.

இந்த வாரம் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தாய்வழி உறவிலும் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும்.

கடன்தொல்லைகளில் நிம்மதி இழந்திருந்தவர்களுக்கு கடனை முழுமையாக அடைக்கவோ அல்லது குறைக்கவோ வழிபிறக்கும். இதுவரை உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் வெகுவிரைவில் குணம் அடைவார்கள். மருத்துவத்திற்கு கட்டுப்படாமல் போக்குக்காட்டிக் கொண்டிருந்த வியாதிகள் விலகும்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சமாக இருப்பது உங்களுடைய அனைத்து கவலைகளையும் தீர்க்கும் அமைப்பு என்பதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தலைவலியாக இருந்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக தீர்ந்து நிம்மதியை தரும் வாரமாக இது இருக்கும்.

குறிப்பாக விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு கெடுதல்கள் எதுவும் இனிமேல் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குழப்பமாகி முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு வரும்.

எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும்.

விருச்சிகம்:

வாரம் முழுவதும் சூரிய, சந்திரர்கள் வலுவாக இருப்பதும் ஐந்தாமிடத்தில் ஒரு சுப கிரகம் உச்சமாக இருப்பதும் விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரும் அமைப்பு என்பதால் இதுவரை சொந்த வாழ்க்கையிலும் வேலை, தொழில் போன்ற அமைப்புகளிலும் ஏமாற்றத்தை சந்தித்து கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாற்றங்கள் நடைபெறும் வாரமாக இது இருக்கும்.

இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இப்போது நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும்.

தனுசு:

சுக்கிரனின் உச்சத்தால் நான்காமிடம் சுப பலம் பெறுவதால் இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களின் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடைபெறும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு தாயார் வழி சொத்து போன்ற ஆதாயங்கள் இப்போது உண்டு.

இந்த வாரம் தாய்வழியில் உங்களுக்கு எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்மபலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். தாழ்வுமனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது. குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.

படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் தொடங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ இப்போது வேண்டாம். சிறிது தள்ளிப் போடுங்கள். இதுவரை வியாபாரத்தில் போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் அது விலகுவதைக் காண்பீர்கள்.

மகரம்:

யோகாதிபதி சுக்கிரன் மூன்றாமிடத்தில் உச்சமாக இருப்பதும் ராசிநாதன் சனி பகவான் பதினொன்றில் அமர்ந்து ராசியை பார்ப்பதும் இந்த வாரம் மகர ராசிக்கு நல்ல மாற்றங்களையும் ஏற்றங்களையும் தரும் வாரம் என்பதால் கடந்த சில மாதங்களாக கடுமையான பிரச்னைகளில் சிக்கி இருக்கும் மகரத்தினருக்கு இது சிக்கல்கள் தீரும் வாரமாக இருக்கும்.

வருமானம் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள். குறிப்பிட்ட சில திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வீட்டுமனையோ, கட்டிய வீடோ, வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்த்த பதவி உயர்வு கூடுதல் சம்பளத்துடன் கிடைக்கும்.

இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் மருத்துவர்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உடல்நலத்தில் முன்னேற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும்.

கும்பம்:

சுக்கிரனின் உச்சத்தால் இந்த வாரம் தாய், தகப்பன் வழியில் இதுவரை இருந்து வந்த எதிர்மறை பலன்கள் கும்பராசிக்கு நீங்கி உங்களுடைய எதிர் பார்ப்புகளுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலர் எதிர்கால வாழ்க்கை சம்பந்தமான முக்கிய முடிவுகளை தற்போது எடுப்பீர்கள்.

திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரிகளுக்கு இது நல்லவாரம். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம்.

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரப்பதவி கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

மீனம்:

இதுவரை கடன் பிரச்சினையில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முதல் அதனை தீர்ப்பதற்கான ஆரம்பங்களும், வழி முறைகளும் தோன்றும் வாரமாக இது இருக்கும். எத்தனைதான் பிரச்னைகள் என்றாலும் ஆகஸ்டுக்கு பிறகு உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பதால் தற்போது நீங்கள் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை.

இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும்.

சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் வாரம். அதேபோல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.
.

No comments :

Post a Comment