Sunday, 10 April 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (11.4.16 முதல் 17.4.16)

மேஷம்:

ராசியில் ஒரு உச்ச கிரகமும் ராசிநாதன் ஆட்சியாகவும் இருக்கும் வாரம் இது என்பதால் மேஷராசிக்காரர்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக ஏழுக்குடையவனும் உச்சமாக இருப்பதால் வாழ்க்கை துணைவர் விஷயத்தில் நன்மைகளும், லாபங்களும் இந்த வாரம் இருக்கும்.

சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். ராசியை குருபகவான் வலுப்பெற்றுப் பார்ப்பதால் பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

ரிஷபம்:

ராசிநாதன் தனித்து உச்சம் பெறும் மேன்மையான வாரம் இது. வருடம் ஒரு முறை சில வாரங்களுக்கு மட்டுமே சுக்கிரன் உச்சமானாலும் பெரும்பாலான சமயங்களில் அவருக்கு வேறு கிரகத்தின் கெடுபார்வை அமைந்து உச்சபங்கம் ஏற்படும் நிலையில் இந்த வாரத்தில் யாருடைய பார்வையுமின்றி சுக்கிரன் அதிஉச்சம் அடைவதால் ரிஷபராசிக்காரர்களுக்கு இது நல்ல வாரமாக இருக்கும்.

இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் இந்தவாரம் நீங்கும். வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நல்லபடியாக நடத்துவதற்கு. முன்னேற்பாடுகள் இந்தவாரம் உண்டு.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதம் இந்தவாரம் கிடைக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து இந்தவாரம் தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. சேமிக்க முடியும்.

மிதுனம்:

ராசிநாதன் புதனின் அதிநண்பர்களான சூரியனும் சுக்கிரனும் உச்சவலுவுடன் இருக்கும் நல்ல வாரம் இது என்பதால் மிதுன ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் வாரமாக இது இருக்கும். அதோடு உங்களின் சிந்தனை, செயல்திறன் அனைத்தும் மேலோங்கி புத்துணர்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் இப்போது இருப்பீர்கள்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் இந்தவாரம் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்:

வார ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் உச்சமாக இருக்கும் நிலையில் இந்த வாரம் ஆரம்பிப்பதால் கடகராசிக்காரர்களுக்கு பின்னடைவுகள் இல்லாத வாரம் இது. குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிதலும், பணவரவு கிடைத்தலும் இந்த வாரம் இருக்கும்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்தவாரம் நல்ல மேன்மையான பலன்கள் இருக்கும்.

அதுபோல தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வியாபாரம் இந்தவாரம் உயரும். சிலருக்கு இருக்கும் வாகனத்தை விட நல்லவாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம்:

இன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் சூரியன் உச்சமாக இருப்பார் என்பதால் சிம்மராசிக்கு சிறப்புகளை சேர்க்கும் ஆரம்ப வாரம் இது. ராசிநாதன் உச்சம் என்பதோடு சந்திரனும் உச்சமாகி செவ்வாய் ஆட்சி, குரு அதிநட்பு எனும் நிலை பெறுவதால் சிம்மராசியின் நீண்ட நாள் ஆசைகள் நல்ல முறையில் நிறைவேற வழிவகுக்கும் வாரமாகவும் இது இருக்கும்.

இந்தவாரம் நல்ல பணவரவைத் தரும். குறிப்பாக எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டில் சுபகாரியம் நடப்பதற்கான ஆரம்பங்கள் உண்டு.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு.

கன்னி:

ராசிநாதன் எட்டில் மறைந்தாலும் ராசியை உச்சம் பெற்ற சுக்கிரன் பார்ப்பதால் புதனின் மறைவு தோஷம் நீங்குகிறது. எனவே இந்த வாரம் கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாதது போல சில விஷயங்கள் உங்களுக்கு தோன்றினாலும் கடைசி நேரத்தில் அவை அனைத்தும் உங்களுக்கு நல்லபடியாக முடியும் வாரமாக இது இருக்கும்.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் மிகப்பெரிய புத்திசாலிகள் என்பதாலும் நுணுக்கமான வேலைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் இந்த வாரத்தின் சாதகமான கிரகநிலையை நல்ல முறையில் உபயோகப்படுத்திக் கொள்வீர்கள்.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சமடையும் மிக நல்ல வாரம் இது. பாக்கியாதிபதி புதனும் தன்னுடைய விரைய வீட்டிற்கு எட்டில் மறைந்து ராசியை பார்ப்பதால் இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு இது வரை இருந்து வந்த வீண் விரையங்களும் தேவையற்ற செலவுகளும், வட்டித்தொல்லைகளும் விலகும் வாரமாக இது இருக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். சிலர் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்., குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவாரம் செய்வீர்கள்.

விருச்சிகம்:

ஏழில் ஒரு உச்ச கிரகம் அமர்ந்து ராசியை பார்த்து ஏழுக்குடையவன் உச்சம் பெற்ற வாரம் இது என்பதால் இந்த வாரம் விருச்சிகராசிக்காரர்களுக்கு நண்பர்கள், பங்குதாரர்கள், வாழ்க்கைத் துணைவர் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும் வாரமாக நடக்கும். குறிப்பாக சிலருக்கு வேற்று மத, இன மொழிக்காரர்களால் நன்மைகள் இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக உங்களுக்கு மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்களும் இந்த வாரம் உண்டு. உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

தனுசு:

ஆறு, எட்டுக்குடைய சுக்கிரனும், சந்திரனும் உச்சமாகி பனிரெண்டிற்குடைய செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதால் இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு மறைமுகமாக வழியில் தன லாபங்களும், எப்படி இந்த வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத விதத்தில் வரவுகளும் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

அரசு, தனியார் துறைகளில் மேல் வருமானம் வருகின்ற துறைகளில் பணி புரியும் ஊழியர்கள் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். யாரையும் நம்ப வேண்டாம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்படவும் வேண்டாம். அதனால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சொந்தத்தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது.. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்கள் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

மகரம்:

ராசியின் பூரண ராஜயோகாதிபதி ஐந்து, பத்துக்குடைய சுக்கிர பகவான் சகாய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் இந்த வாரம் மகரராசிக்காரர்களுக்கு தொழில் செய்யும் இடங்களிலும் வேலை பார்க்கும் இடத்திலும் எதிர்பாராத விதமாக சில நல்ல உதவிகளும் தன லாபங்களும் கிடைக்கும் வாரமாக குறிப்பாக பெண்களால் ஆதாயமுள்ள வாரமாக இருக்கும்.

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் இந்தவாரம் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இந்தவாரம் உண்டு. பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொதுவில் இந்த வாரம் சிறப்பான வாரமே.

கும்பம்:

வார ஆரம்பத்தில் ஆறுக்குடைய சந்திரன் பலம்பெற்ற நிலையில் இந்த வாரம் ஆரம்பித்து அடங்கி கிடந்த சில பிரச்னைகளை மேல் எழுப்பி உங்களை கலங்க செய்தாலும் சுக்கிரனின் உச்ச பலத்தால் பிரச்னைகளை சமாளித்து வெற்றி கொள்ளும் வாரமாக இது இருக்கும்.

வீடோ நிலமோ விற்ற பணம் விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.

மீனம்:

ராசிநாதன் ஆறில் மறைந்து எட்டுக்குடைய சுக்கிரன் ராசியில் உச்சம் பெறுவதால் இந்த வாரம் பெண்கள் விஷயத்தில் நீங்கள் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டிய வாரமாக இது இருக்கும். பெண்களை மேலதிகாரியாக கொண்டவர்கள் கூடுதலான கவனத்துடன் இருப்பது நல்லது.

தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்லபெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இந்தவாரம் கூடாது. அதனால் சிக்கல்கள் வரும்.. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

மேலும் வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த வாரம் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் வலுப் பெறுவதால் நீங்களே உங்களுக்கு எதிரான செயல்களை செய்வீர்கள்..

No comments :

Post a Comment