Sunday, December 1, 2019

சந்திர கிரகணம்…யாருக்கு தோஷம்? ...(A-014)


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

விளம்பி தமிழ் வருடத்தின் சந்திர கிரகணம், இந்த வருடம் ஆடிமாதம் 11 ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கிலப்படி ஜூலை மாதம் 27 ம் தேதி (27-7-2018) இரவு 11.54 மணிக்கு ஆரம்பித்து 28 ம் தேதி அதிகாலை 3.49 மணிக்கு முடிவடைகிறது.

இந்தியப் பகுதியில் நள்ளிரவு 12.59 மணிக்கு சந்திரன் முழுமையாக மறைந்து இருள் நிலையில் இருப்பார். பின்னர் இரவு 2.43 மணி முதல் இருள் நீங்கி வெளிப்பட ஆரம்பிப்பார். ஏறத்தாழ நான்கு மணி நேரம் நீடிக்கும் மிக நீண்ட கிரகணம் இது.

இன்னும் ஒரு சிறப்பாக இது ஒரு பூரண, முழுமையான சந்திர கிரகணம். இம்முறை சந்திரன் முழுமையாக மறைந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் இருக்கும். அதாவது பவுர்ணமி நாளில் அமாவாசை நடக்கும்.

சென்ற ஏப்ரல் முதல் வரும் ஏப்ரல் வரையிலான இந்த விளம்பி தமிழ் வருடத்தில், உலகிற்கு மூன்று சூரிய கிரகணம், இரண்டு சந்திர கிரகணம் என ஐந்து கிரகணங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் இந்தியாவில் உள்ள நமக்குத் தெரியும் ஒரே கிரகணம் இது மட்டும்தான். மற்ற நான்கும் பூமியின் மறுபகுதியில் ஏற்படுவதால் நமக்குத் தெரியாது.

மேலே நான் சொன்ன இந்த கிரகண நேரம் திருக்கணிதப்படியானது. வாக்கியப் பஞ்சாங்கங்களும் இதே கிரகண நேரத்தைத்தான் தருகின்றன. வாக்கியப் பஞ்சாங்கம் சொல்லும் ராகு, கேது இருப்பு நிலைகள் தவறு என்பதால் அவர்கள் கணிக்கும் நேரப்படி கிரகணம் வராது. திருக்கணித கிரகண நேரத்தைக் காப்பியடித்தே வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடுகின்றன.

பௌர்ணமி தினமன்று சந்திர கிரகணமும், அமாவசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். பூமிக்கு ஒளி கொடுக்கும் பிரதான கிரகங்கள் சூரியனும், சந்திரனும் மட்டும்தான். சூரியனால்தான் இந்த பூமி பிறந்தது. சந்திரனால்தான் பூமியில் உயிர்கள் பிறந்தன. எனவே எந்த ஒரு நிலையிலும் ஒரு உயிருக்கு சூரிய, சந்திரர்களின் ஆத்ம ஒளி மிகவும் அவசியம். அந்த ஒளி பூமிக்கு கிடைக்காமல் தடுக்கப் படுகின்ற நாளே கிரகண நாள். எனவேதான் கிரகணத்திற்கு ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.

ஜோதிட வார்த்தைகளின்படி இந்த கிரகணம், உத்திராடம் நான்காம் பாதத்தில் ஆரம்பித்து திருவோணம் முதல் பாதத்தில் முடியும். கிரகணம் முடியும் நேரத்தில் சந்திரனும், கேதுவும் ஒரே பாகை, ஒரே கலையில் இருப்பார்கள்.

பூமியின் நிழல் சந்திரனின் மீது படருவதையே சந்திர கிரகணம் என்கிறோம். அதாவது பூமிக்கு பின்புறமாக சந்திரன் செல்லும்போது நிலவின் மீது விழ இருக்கும் சூரிய வெளிச்சத்தை பூமி தடுத்து, பூமியின் நிழல் சந்திரன் மீது படருவதே சந்திர கிரகணம் ஆகும். சுருக்கமாகச் சொன்னால் தனது சுற்றுப் பாதையில் சந்திரனுக்கும், சூரியனுக்கும் நடுவே மிகச் சரியான ஒரு நேர் நிலையில் பூமி அமையும்போது சந்திர கிரகணம் உண்டாகிறது.

ராகுவால் ஏற்படுவது, கேதுவால் உண்டாவது என கிரகணங்கள் இரண்டு வகைப்படும். பூமியின் வடதுருவ நிழல் ராகு என்றும், தென்துருவ நிழல் கேது என்றும் அழைக்கப்படுகிறது. அவ்வப்போது இந்த இரண்டு முனைகளாலும் சந்திரன் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்படும். இப்போது ஏற்படுவது தென் துருவ நிழலான கேதுவால் ஏற்படுவதாகும்.

கிரகணத்தின் போது ஒரு நிலையில் சந்திரனின் வான்வெளி அமைப்பில் மிக நெருக்கமாக மூன்று டிகிரிக்குள் பூமியில் நிழல் படரும். அதாவது சந்திரனும், கேதுவும் கிரகண நிலையில் மூன்று டிகிரிக்குள் இணைந்திருப்பார்கள்.

பூமிக்கு நன்மைகளைத் தரும் முழு நிலவின் ஒளி, கேது எனும் இருளாகிய நிழலால் மறைக்கப்படும் போது, சந்திரன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடத்திலும், தனது சொந்த நட்சத்திரமான திருவோணத்திலும் சென்று கொண்டிருப்பார்.

கிரகணம் ஏற்படும் நட்சத்திரத்திற்கு முன்பின் நட்சத்திரங்கள் மற்றும் அதே நட்சத்திரத்தின் திரிகோண பத்தாவது நட்சத்திரங்களான அந்த நட்சத்திர அதிபதியின் மற்ற நட்சத்திரங்களும் கிரகண தோஷம் அடையும் என்பது ஜோதிட விதி. எனவே இந்த கிரகணத்தால் சூரிய, சந்திர நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் உடல், மனம் சிறிய பாதிப்பினை அடையலாம்.

அதேபோல இந்த நட்சத்திரங்களின் முன், பின் நட்சத்திரங்களான பூராடம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் மீதும் கிரகண பாதிப்பு இருக்கும். கிரகண நேரத்தில் மேற்படி நட்சத்திரங்களினால் பூமிக்குக் கிடைக்கும் ஒளி மறைக்கப்பட்டு பாதிப்படையும். இதைத்தான் கிரகண தோஷம் என்கிறோம்.

எனவே சூரிய சந்திரனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடம், சந்திரனின் நட்சத்திரங்களான ரோகினி, ஹஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களும், கிரகண முன்,பின் நட்சத்திரங்களான பூராடம், அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் முறையான பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.

மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் தாயாருக்கோ, தாயார்வழி உறவினர்கள், அல்லது தாய்வழி அமைப்புகளில் கெடுபலன்களோ அல்லது மேற்கண்ட நட்சத்திரக்காரர்களின் ஜாதகங்களில் சந்திரன் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியவரோ அந்த பாவக பலன்களில் குறைகளும், கெடுபலன்களும் இருக்கும்.

பூமி பிறந்ததற்கும் பூமியில் உயிர்கள் தோன்றியதற்கும் சூரிய ஒளியும், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் சந்திரனின் ஒளியுமே முக்கிய காரணம் என்பதால் மேற்கண்ட சூரிய. சந்திரர்களின் ஒளியை பூமிக்கு கிடைக்க விடாமல் தற்காலிகமாகத் தடை செய்யும் கிரகணங்களை இந்திய ஜோதிடம் ஒரு சிறப்பு நிகழ்வாக எடுத்துக் கொள்கிறது.

சூரியனோ, சந்திரனோ இந்த சில நிமிட மறைப்புக்குப் பதிலாக சில மாதங்கள் மறைக்கப்பட்டாலும் பூமியில் உணவுச் சங்கிலி அடிபட்டு அனைத்து உயிர்களும் அழிந்து விடும் என்பது விஞ்ஞான உண்மை.

எனவே இப்படிப்பட்ட இன்றியமையாத சூரிய-சந்திர ஒளியை மறைத்துத் தடுத்து பூமிக்கு கிடைக்கவிடாமல் செய்வதனாலேயே கிரகணங்கள் ஒரு தோஷ  நிகழ்வாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

ஜோதி வடிவான சூரிய, சந்திரர்களையே சிவன்-சக்தி, அம்மை-அப்பன் என வழிபடும் நமது மேலான இந்து மதத்தின் திருக்கோவில்கள் கிரகண நேரத்தில் மூலவர்கள் ஒளியிழந்து செயலாற்றுப் போவதாக கருதப்படுவதால்தான் கோவில்  நடை சாத்தப்பட்டு கிரகணம் முடிந்த பின் பரிகார பூஜைகள் செய்விக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகின்றன.

சில கோவில்களில் சக்தியாகிய அன்னையின் திருவுருவச் சிலை கிரகண சமயம் தர்ப்பைப் புற்களாலான போர்வையால் முழுக்க மூடி வைக்கப்பட்டு, கிரகணம் முடிந்த பின்பு நீக்கப்படுவது உண்டு. இதன் மூலம் கிரகணத்தன்று ஏற்படும் சக்தியிழப்பை தோஷக் கதிர்களைத் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன் காரணமாகவே கிரகண நேரத்தில் நாம் நீரோ, உணவோ அருந்தக் கூடாது எனவும் அப்படித் தவிர்க்க முடியாமல் தண்ணீர் குடிக்க நேர்ந்தால் அதில் தர்ப்பைப் புல்லைப் போட்டுக் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது  சூரிய கிரகணம் ஆரம்பிக்கும் நேரமும், சந்திர கிரகணம் முடியும் நேரமும் முக்கியமானது என்பதால் இந்த நேரங்களில் புனித நீராடுவது நல்லது.

கிரகண நேரத்தில் என்ன செய்யக்கூடாது?

மேலே சொன்ன நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அன்று மட்டும் ஒரு சில உடல், மனச் சங்கடங்களை அடையக் கூடும். எனவே மேற்கண்டவர்கள் கிரகண நேரத்தில் எதையும் உட்கொள்வதையும், முக்கியமான எவற்றையும் செய்வதையும் தவிர்க்கலாம். இவர்கள் கிரஹண நாளன்று பகல் உணவோடு நிறுத்திக் கொண்டு இருள் ஆரம்பித்ததும் எவ்வித உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

சாப்பிட்டால் என்ன ஆகும் என்று விதண்டாவாதமாக கேட்க வேண்டாம். கிரகண நேரத்தில் நமது உடலுக்கும், மனதிற்கும் ஓய்வு தேவை. அதிலும் குறிப்பாக மேலே சொன்ன நட்சத்திரங்களில் பிறந்தவர்களின் உடலும், மனமும் அப்போது ஒருவிதமான சீரற்ற நிலையில் அலைபாய்ந்து கொண்டிருக்கும்.

எனவே உடலின் மிக முக்கிய உள்உறுப்புகளான ஜீரண பகுதிகளுக்கு அப்போது வேலை கொடுப்பதை தவிர்க்கலாம் என்ற நோக்கில்தான், விஞ்ஞான ரீதியிலான நமது உன்னத மதம் இதைத் தவிர்க்கச் சொல்கிறது.

ஒரு பொதுவான வழிகாட்டுதலாக கடக லக்னம் மற்றும் கடக ராசி மற்றும் ஜாதகத்தில் சந்திரனை சுபராகக் கொண்டவர்கள், சந்திர கிரகண நேரத்தில் முக்கிய செய்கைகள் முடிவுகள் எதனையும் எடுக்காமல் இருப்பது நலம். அதைவிட இந்த நேரத்தில் சந்திர  காயத்ரி போன்ற சந்திர துதிகளை தியானிப்பது அவர்களின் சந்திர பலத்தை தக்க வைக்கும்.

மிக முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண நேரத்தில் வெளியே வருவது நல்லதல்ல. பிறந்த ஜாதகப்படி சந்திர தசை, சந்திர புக்தி நடந்து கொண்டிருப்பவர்களும் மேற்கண்ட கிரகண நேரத்தில் முக்கியமான எதையும் செய்வதை தவிர்க்க வேண்டும்,

கிரகண நம்பிக்கை இந்தியாவில் மட்டும்தானா? வேறு நாடுகளிலும் உள்ளதா?

உலக  சரித்திரம் முழுமைக்கும் இந்த கிரகணங்களைப் பற்றிய அச்சங்களும், நம்பிக்கைகளும், எல்லா நாடுகளிலும் அனைத்து இன வரலாறுகளிலும் விரவிக் கிடக்கின்றன. எல்லா நாடுகளிலும் கிரகண நாள் ஒருவிதமான பயத்துடனே பார்க்கப்படுகிறது. கிரகண நாளுக்கான பரிகாரங்களும் சொல்லப்படுகின்றன.

அமெரிக்காவை முதலில் அறிந்த கொலம்பஸ் தனக்கு மிகவும் எதிர்ப்புக்காட்டிய அமெரிக்கப் பழங்குடி செவ்விந்தியர்களை சூரியகிரகணம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததால் இன்று சூரியன் மறைக்கப்படும் என்று பயமுறுத்தி தன்னை தெய்வாம்சம் பொருந்தியவராக காட்டிக்கொண்டே பணிய வைத்தார் என்பது வரலாறு. 

நம் நாட்டில் எப்போது கிரகணங்கள் உணரப்பட்டன?

உலகின் பழமை வாய்ந்த நாகரிகங்களில் ஒன்றான நமது இந்திய நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிரகணம் பற்றிய குறிப்புகள் உள்ளன. இன்னும் சொல்லப் போனால் கிரகணம் பற்றிய ஒரு தெளிவான கணிதத்தை நாம் கொண்டிருந்தோம். இத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரகணம்  திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் ஏற்படும் என்று கணிக்கும் அளவிற்கு உலகில் மற்ற எவரையும் விட நமது வானியல் அறிவு மேலோங்கியே இருந்தது.

இந்திய ஜோதிடத்தில் மட்டுமே ராகு, கேதுக்களுக்கு கிரக அந்தஸ்து கொடுக்கப் பட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. உலகின் வேறு ஜோதிட முறைகளில் இந்த சாயா கிரகங்களுக்கு இத்தனை முக்கியத்துவம் இல்லை. அதேபோல மேல்நாட்டு முறைகளில் குறிப்பிடப்படும் யுரேனஸ், நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கு நமது ஜோதிட முறையில் இடமில்லை.

ராகு, கேதுக்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து இவை ஏற்படும் நேரங்களை முன்கூட்டியே கணித்து இவற்றை ஜோதிடத்திலும் பயன்படுத்திய இந்திய ஞானிகளின் மேதமை வெளிநாட்டினரை வியக்க வைக்கும் ஒன்று,.

கிரகண நேரத்தில் குழந்தை பிறப்பது நல்லதா?

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் சந்திரனின் ஒளி தேவைப்படுவதைப் போல, பிறக்கப் போகும் உயிரின் உடல் பலத்திற்கும், மனநலத்திற்கும் சந்திர ஒளி அவசியம் தேவை என்பதால்தான் கருவுற்றிருக்கும் பெண்கள் கிரகண நேரத்தில் வெளியே வரவேண்டாம் என ஜோதிடம் அக்கறையுடன் அறிவுறுத்துகிறது.

கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு கிரகண தோஷம் எனப்படும் சந்திர வலுக் குறைவு ஏற்படுகிறது. சந்திரன், ஒருவருக்கு தாயையும்  மனோபலத்தையும் குறிக்கும் கிரகம் என்பதால் கிரகண  நேரங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்வழி நன்மைகளும். மனோபலமும் பாதிக்கப்படும் என்பது ஜோதிடத்தின் முடிவு. இதுபோன்ற நேரங்களில் பிறக்கும் குழந்தைகளின் தாய் பாதிக்கப்படலாம். அல்லது அந்தக் குழந்தையின் சிந்திக்கும் திறன் குறைவு படலாம்.

அதேநேரத்தில் ஒரு குழந்தை பிறக்கும் நேரம் என்பது அதன் முந்தைய கர்ம வினைகளைப் பொருத்தது. ஜனன நேரம் என்பது நம் கைகளில் இல்லை. எந்த  ஒரு ஜனனமும் பரம்பொருளின் விருப்பத்திற்கும், கட்டளைக்கும் உட்பட்டது.

இருப்பினும் என்னுடைய சிறிய ஆலோசனையாக இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப் பேறை எதிர்நோக்கி இருப்பவர்கள் சந்திர கிரகணம் முடிந்து அடுத்த நாள் வரைக்கும் அதாவது சந்திரன் கும்ப ராசிக்கு மாறும் வரைக்கும் குழந்தை பிறப்பை தள்ளி வைக்க முடிந்தால் நல்லது. ஆயினும் இது, தாய்-சேய் இரண்டின் உயிர்ப் பிரச்னை என்பதால் கடவுளுக்குச் சமமான மருத்துவரின் முடிவுக்கு கட்டுப்படுவது நல்லது.  

சந்திர கிரகணத்திற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சூரிய,சந்திரர்கள் ராகு, கேதுக்களால் பீடிக்கப்படுவதால் மேற்கண்ட நட்சத்திரக்காரர்கள் கிரகண தினத்தன்று ஆதரவற்ற ஏழை, எளியோருக்கு தங்களால் இயன்ற அளவுக்கு சந்திரனின் திரவமான பால் பொருட்களை தானம் செய்வது மிகவும் நல்லது. வெள்ளை நிற பொருட்களையும் தானமாகத் தரலாம்.

கூடுதலாக உளுந்தம் பருப்பை தானம் செய்வதும், உளுந்தினால் ஆன உளுந்தங் கஞ்சி, மெதுவடை போன்ற உணவு பொருட்களை தானம் செய்வதும் கெடுபலன்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் சிறந்த பரிகாரங்கள்.

மிக மிக முக்கியமான ஒன்றாக சந்திர கிரகணத்தால் பாதிக்கப்படும் அமைப்பைக் கொண்டவர்கள் அன்று தங்களது தாயை திருப்திப்படுத்துவது நல்லது. பெற்ற தாயிடம் அன்று ஆசி பெறுவது மிகுந்த நன்மை பயக்கும். தாயாருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால் அன்று அதை தீர்த்து வைக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால் அன்று தாயாரை சந்தோஷப்படுத்த வேண்டும். தாயின் மனம் குளிர்ந்தால் எத்தைகைய தோஷமும் நம்மை அண்டாது. கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் அன்று தாய் விரும்பும் ஒரு எளிய பொருளையாவது வாங்கிக் கொடுத்து அவரது ஆசிகளைப் பெறுங்கள்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்


2 comments :

  1. வணக்கம்
    சத்தியம் உரைத்தீர்கள் குருஜீ.
    எனது ஊர் பொன்னை வேலூர் மாவட்டம்.எனது முன்னோர்கள் 4 தலைமுறைகளாக பொன்னையில் இருக்கும் திரௌபதீ அம்மனை குல தெய்வமாக வணங்கி வருகிறோம். இருப்பினும் பித்ரு தோஷத்திற்கான பலன்களை அனுபவிக்கிறேன்.
    இந்நிலையில் ஒரு ஆகமம் படித்த பிராமண நன்பர் அவருக்கு நன்கு பரீட்சயமான ஒரு 80 வயது பிராமண தாத்தாவிடம் வீட்டில் இருக்கும் அனைவரின் ஜாதகமும் காண்பிக்க பட்டது.
    அவர் சித்தி அடைந்த தேவதையிடம் கேட்டு "உங்கள் குல தெய்வம் தில்லை காளி அம்மன். பல தலைமுறை முன்பு நீங்கள் இடம் பெயர்ந்து இருக்கின்றீர்கள்" என்கிறார். அவர் அன்பின் காரணமாகவே செய்தார். ஆனால் அவர் எனக்கு கூரி 8 மாதம் கடந்து இப்போது இறைவனடி சேர்ந்தார்.ஆயினும் நான் குல தெய்வத்தை தேடி போகவே இல்லை.இவை நிகழ்ந்தது அனைத்தும் ராகு தசை ராகு புக்தியில் தான். இப்போது ராகு புக்தி, சுய புக்தி முடியும் தறுவாயில் உள்ளது.
    எனக்குள் குல தெய்வம் எது என்ற நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. தங்களால் எனக்கு உதவ முடியுமா குருஜீ.

    ReplyDelete